665.
|
கருங்கதிர்
விரிக்கு மேனிக் காமரு குழவி தானு
மிரும்புலிப் பறழி னோங்கி யிறவுள ரளவே யன்றி
யரும்பெற லுலக மெல்லா மளப்பரும் பெருமை
காட்டித்
தருங்குறி பலவுஞ் சாற்றுந் தன்மையிற் பொலிந்து
தோன்ற, 16 |
665. (இ-ள்.)
வெளிப்படை. கரிய கதிரொளியை விரித்து
வீசுகின்ற அழகிய மேனியுடைய அக்குழவியும் பெரிய
புலிக்குட்டிப்போல மிக்கோங்கி, வேடர்களாலே மட்டுமன்றி
உலகமெல்லாம் அளத்தற்கரிய பெருமை காட்டித்தரும் குறிகள்
பலவும் எடுத்துச் சொல்லக் கூடிய தன்மையினாலே விளங்கித்
தோன்ற, 16
665. (வி-ரை.)
கருங்கதிர் விரிக்கும் மேனி - கரியமேனி
- கதிர்விரிக்கும் மேனி என்று கூட்டுக. காளமேகம் (664)
மணிநீலமலை யொன்று (701) எனக் கூறுதலால் நாயனாரது திருமேனி
மிகக் கரிய நிறங்கொண்டு விளங்கிய தென்பதாம். ஆயின் கருமை
ஒருதனி நிறமன்று, ஏனை நிறங்களின் இன்மையே என்றும், இருள்
ஒரு தனிப்பொருளன்று, அஃது ஒளியின் அபாவமே என்றும்
கூறுவார் கூற்றுப் பொய்யா யொழிய, இங்கு நாயனாரது மேனி
கரியதாயினும் அது தனக்குரிய கதிரை விரித்து வீசி விளங்கிற்று
என்று கூறினார். ஏனை நிறங்களையுடைய பொருள்கள் ஞாயிற்றின்
கதிர் தம்மேற் பட்டபோது அக்கதிரிலே உள்ள ஏழு நிறங்களில்
தத்தமக்குரிய நிறமுடைய ஒளியைப் பிரதிவிம்பிக்கும் சத்தியினால்
அவ்வந் நிறத்தைக் காட்டுவனவென்றும், கருமைநிறம் அவ்வாறன்றி
ஞாயிற்றின் கதிரில் உள்ள கிரணமுழுதும் தன்னுள் வாங்கி
வெளியில் விரிக்காது நிற்குமெனவும் ஒளிநூலோர் கூறுவர். ஆயின்
இங்கு நாயனாரது திருமேனி கரிதேயாயினும் கதிர் விரிக்கு
மாற்றலுடன் விளங்கிற்று என்பது.
கர்மரு
குழவி - அழகிய மகவு. காமம் வரும் என்பது
விகாரத்தால் காமரு என நின்று கண்டார்க்கு விருப்பம் வரும்
என்பதாயிற்று எனப் பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார். காமர்
மரு என்பது காமரு என்றாயிற்று என்பாருமுண்டு. கரியபொருளும்
அழகியவாமோ? எனின், ஆம் என்க. அழகுடையவன் எனப்படும்
மன்மதன் கரியன். அவன் தந்தை திருமாலும் கரியன். திருமாலினது
பத்துப் பிறப்புக்களுட் சிறந்த இராமன், கண்ணன் என்ற இரண்டு
பிறப்பும் மிகக்கருமையும் அழகும் பெற்றன என்பர்.
புலிப்பறழ்
- புலிக்குட்டி. இறவுளர் - வேடர்.
அளவேயன்றி -அளப்பரும் அரும்பெறல் பெருமை எனக்
கூட்டுக. அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் எனக்கொண்டு
பெற்கரிய அறிவுடைய பெரியோர் எவூரானும் அளத்தற்கரிய
என்றுரைத்தலுமாம். இப்பொருளில் இக்குழவி காட்டித்தந்த பெருமை,
இறவுளர் மட்டுமேயன்றி, அறிவாற் பெரியோர் எவரும்
அளந்தறிதற்கரிதாயிற்று என்க. இங்கு உலகம் - உயர்ந்தோர்.
நாயனாரைப் பெரியோர் எல்லாரும் அரியர் என்று பாராட்டிப்
போற்றியிருத்தல் காண்க. இக்குறிப்பு இவரது குழவிப் பருவத்து
நின்றே விளங்கிற்று என்றவாறு.
பெருமை
காட்டித் தரும் குறிபலவும் சாற்றும் தன்மை -
சாமுத்திரிக இலக்கணம் இரேகைநூல் முதலிய உடல்நூற்கலைகளி
னறிவாலே, இக்குழவியிற் காணும் குறிகளைக்கண்டு
அக்குறிகளையுடைமை காரணமாக இக்குழவி யடைய நின்ற பற்பல
பெருமைகளையும் எடுத்துச் சொல்லுமாறு நின்ற தன்மை.
பொலிந்து
- விளக்கமுற்று. தோன்ற - ஆர்த்தார் என்று
கூட்டி முடிக்க. நரகன் மிக வயதுசென்றவனாதலின் உலக
அனுபவத்தினால் அவனுக்குத் தோன்ற என்றலுமாம். 16
|