666.
|
அண்ணலைக்
கையி லேந்தற் கருமையா "லுரிமைப்
பேருந்
திண்ணனென் றியம்பு" மென்னத் திண்சிலைவேட
ரார்த்தார்,
புண்ணியப் பொருளா யுள்ள பொருவில்சீ ருருவி
னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள் கலன்பல வணிந்தா
ரன்றே. 17 |
666.
(இ-ள்.) வெளிப்படை. பெருமையுடைய அக்குழவியைக்
கையில் எடுத்தற்கரியதாயிருந்தமையால் "உரியபேருந்திண்ணன்
என்று வைத்து அழைமின்கள்" என்று (நாகன்) சொல்ல, வலிய
சிலைவேடர்கள் ஆரவாரித்தனர். புண்ணியத்தின் பொருளாயுள்ள
ஒப்பற்ற சிறப்புக்களின் உருவுடைய குழவியைக் கண்ணுக்கு
அழகாகத் தங்களுக்குரிய பல அணிகலங்களையும் அன்றே
அணிந்தார்கள். 17
666.
(வி-ரை.) அண்ணலை
- தோன்றநின்ற அவ்வண்ணலை
என்று தொடர்ந்து கொள்க. அண்ணல் - பெருமையிற் சிறந்தோன்.
ஏந்தற்கு
அருமையால் - கையில் எடுத்தற்கு அரிதாக
அவ்வளவு திண்மை பெற்று விளங்கியதனால். உரிமைப்பேர் -
வேடர் குலத்தில் காரணம்பற்றிப் பேரிடுகின்ற வழக்குக்கு உரியபேர்.
அடிப்பேர், குடிப்பேர், பேரன் (பாட்டன்) பேர், பண்புபற்றிய பேர்
எனப் பற்பல காரணங்களால் ஒருவற்கு ஒருபேர் இடுதல் உலக
வழக்கு.
"திண்ணன்
என்று இயம்பும்" என்ன - இது சொல்லியது
மகவைக்கையில் எடுத்துக்கொண்டு கண்ட நரகன். எனவே
திண்ணன் என்பது நாயனாருக்குத் தந்தையினால் இடப்பட்ட இவரது
பண்புபற்றிய காரணப்பெயராம் என்க. அவன் இவரது உடலின்
திண்மைபற்றியே இப்பெயரிட்டான். உண்மையில் அது அவனை
அறியாமலே முன்னமே நிரம்பிய இவரது தவத்தின் திண்மையும்,
தலையன்பின் திண்மையும் குறித்ததும் காண்க. இவ்வாறு
தெய்வச்செயலாய்ச் சிலர்க்குப் பொருத்தமாகப் பெயர்கள்
அமைவனவாம்.
திண்சிலை
வேடர் ஆர்த்தார் - பேரிட்ட அழகும் மரபும்
பற்றி வேடர் மகிழ்ச்சி பொங்கி ஆர்த்தனர். நாமகரணம் என்பது
வேடர்களுள்ளும் மகிழ்ச்சிக்குரிய தொரு சிறப்பாயிருந்தது போலும்.
புண்ணியப்
பொருள் - புண்ணியம் செய்தலாற் பெறப்படும்
பொருளாகிய. பொருவில் - ஒப்பற்ற.
சீர்உருவம் - சிறப்புக்களின்
உருவம். சீர் - மேம்பாட்டிற் சொல்லிய பெருமைகாட்டிய
குறிபலவுடைய சிறப்பு.
கண்ணினுக்கு
அணியா - புண்ணியப் பொருளாயுள்ள
பொருவில் சீருருவுடைமையின் அவர்க்கு வேறு அணி
மிகையாயினும், தங்கள் கண்பார்வையில் அழகு தரும் பொருட்டு.
தங்கள் கலன்பல - தங்கள் நாட்டுக்கும் வேடர்
தலைமைக்கும்
குலத்துக்கும் உரிய பலஅணிகள். இவை மேல்வரும் பாட்டினும்,
669 - 670 பாட்டுக்களினும் காண்க. அன்றே
- அப்பொழுதே.
அசையென் றொதுக்கு வாருமுளர். 17
|