670.
பாசொளி மணியோ டார்த்த பன்மணிச் சதங்கை
                                  யேங்கக்
காசொடு தொடுத்த காப்புக் கலன்புனை யரைஞாண்
                                  சேர்த்தித்
தேசுடை மருப்பிற் றண்டை செறிமணிக் குதம்பை
                                   மின்ன
மாசறு கோலங் காட்டி மறுகிடை யாடு நாளில், 21

     670. (இ-ள்.) வெளிப்படை. பசிய ஒளியுடைய மணிகளோடு
ஏனைப் பல மணிகளையும் கோத்த சதங்கை ஒலிக்கக், காசுடன்
கூட்டிக் கட்டிய கலன்கள் புனைந்த அரைநாணையும் கட்டி,
ஒளியுடைய யானைக் கொம்பினாலியன்ற தண்டையும் மணிகள்
செறிந்த குதம்பையும் துன்ன இவ்வாறு குற்றமறும் திருக்கோலத்தைக்
காண்பார்க்குக் காட்டிக் கொண்டு வீதியில் விளையாடுகின்றநாளில்,
21

     670. (வி-ரை.) பாசொளி மணி - பசுமை ஒளி என்றது
பாசொளி எனப் புணர்ந்து நின்றது. நீலநிறமுடைய மணிவகைகள்.
இரத்தினங்கள் நாள் செல்லச் செல்ல நீலநிறம் பொருந்த விளையும்.
இவற்றைக் கொம்புநீல மென்பர். இவை மிக விலை யுயர்ந்தன.
இங்குக் குறித்தது பச்சையன்று, அது குறிஞ்சிப் பொருளன்மையின்.
பாசிகள் என்றலுமாம்.

     மணியோடு பன்மணியும் ஆர்த்த சதங்கை என மாற்றுக.
பன்மணி யென்பன ஏனை மணிகள். சதங்கை - இடையிலணியும்
அணிவகை. ஏங்குதல் - சத்தித்தல்.

     காசொடு.......அரைஞாண் - நாய்க்காசு முதலிய செப்புக்
காசுகளும் தாயித்துக்களும் வெள்ளெருக்க நாரில் கோத்துக்
குழந்தைகட்கு அரைஞாணாகக் கட்டுதல் மரபு. இது பைசாச
முதலியவை வாரா மற்காக்குமென்பது நம்பிக்கை.

     தேசுடைமருப்பின் தண்டை - யானைக்கொம்பு ஒளியுடையது.
அதனாற்றண்டை செய்தணிதல் அந்நாள் உயர்குடி வழக்கு.

     செறிமணிக் குதம்பை - குதம்பை - ஒருவகைக் காதணி.
இதனைப் பல மணிகளால் ஆக்கியதனாற் செறிமணி என்றார்.
சதங்கை ஏங்க
என்றும், அரைஞாண் சேர்த்தி - என்றும்
தனிவினைகளாற்கூறிய ஆசிரியர் மருப்புத்தண்டையும்
மணிக்குதம்பையும்
ஒளி செய்தலால் இவ்விரண்டையும் சேர்த்து
மின்ன என்ற ஒரு வினையெச்சத்தாற் பிணைத்தார். காலணியும்
காதணியும் கூறியதனால் கால்முதற்றலைவரையும் உள்ள எல்லா
அணிகளையுங் குறித்தவாறுமாம்.

     மாசு அறு கோலம் காட்டி - காண்பாரது மாசுகள்
அறுதற்கேதுவாகிய தமது புண்ணியக்கோலத்தைக்காணும்படி
காட்டி - ஆடும் - விளையாடும். 21