671.
தண்ழல ரலங்கற் றாதை தாய்மனங் களிப்ப வந்து
புண்ணியக் கங்கை நீரிற் புனிதமாந் திருவாய் நீரி
லுண்ணனைந் தமுத மூறியொழுகிய மழலைத்
                                தீஞ்சொல்
வண்ணமென் குதலைச் செவ்வாய் குதட்டியே வளரா
                               நின்றார்.
 22

     671. (இ-ள்.) வெளிப்படை. குளிர்ந்த மலர்மாலை சூடிய
தந்தையும் தாயும் மனமகிழச் குறுநடை நடந்துவந்து, புண்ணியமான
கங்கை நீரினும் புனிதமாகிய திருவாய்நீரிலே உள்ளே நனைந்து
அமுதமாக ஊறி மேல்வழியும் இனிய மழலைச் சொற்களை அழகிய
மெல்லிய செவ்வாயினைக் குதட்டிச் சொல்லி வளர்கின்றார். 22

     671. (வி-ரை.) அலங்கல்தாதை தாய் - வெற்றிமாலை
முதலியன இங்குத் தாதையாகிய தலைவனுக்குரியன வாதலின்,
அலங்கல்தாதை என்ற ஆசிரியர், தாய் என வாளாகூறியது காண்க.

     வந்து - தாம் இருக்குமிடத்தினின்றும் ஆடுமிடத்தினின்றும்
ஓடிவந்து. இது தந்தை தாயரிடத்துக் குழந்தைகள் ஓடிவரும் இயல்பு
குறித்தது.

     களிப்ப - இவர் அவதரித்ததனாலே தந்தைதாய் களித்தனர்
என்பதுண்மை. ஆயினும் பின்னரும் இவர் தம்பால் வருந்தோறும்
களிக்கும்படி. குழவிகள் தம்மிடம் வருந்தோறும் பெற்றோர்
களிகூர்வது இயல்பு. திருஞானசம்பந்த மூர்த்திகள் புராணம் 49
பாட்டுப் பார்க்க. இவ்வாறன்றி, களிப்ப மழலைத் தீஞ்சொல்
குதட்டி
என்று கூட்டி உரைப்பதுமாம். "மக்கண்மெய் தீண்ட
லுடற்கின்ப
மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு", "குழலினி
தியாழினி தென்பதம் மக்கள், மழலைச்சொற் கேளாதவர்" (குறள்)
என்றபடி குழவிகளின்மழலை கேட்டலாற் பெற்றோர் மிகக்களிப்பர்
என்பது. மேலே குறித்த குறளில் மழலையைச் சார
வைக்கப்பட்டமையின் யாழ் குழலினுஞ் சிறந்ததென்பது
காட்டப்பட்டதென்று கூறுவர். யாழில் சொல்லின் தன்மை தோற்றும்;
குழலில் அது தோற்றாது என்ப.

     புண்ணிய.....நீரில் - கங்கை நீர் புண்ணியமுடையது;
தானுங்கேடுறாது தன்னுட்படிந்தாரையும் கேடுறாமற் புண்ணியம்பெறச்
செய்யும். இறந்துபட்ட சகரர்களுக்கு நலஞ்செய்த சரிதமுங் காண்க.

     நீரின் - நீரினும். இன் - ஐந்தனுருபு உறழ் பொருவுப்
பொருளில் வந்தது.

     புனிதம்ஆம் திருவாய் நீரில் - கங்கையைச் சடையுள்
வைத்து அதில் எந்நாளும் தோய்ந்து ஆடிநிற்கும் இறைவர்
அதனினும் இது புனிதமென்று இவர் திருவாய் நீரின் ஆடுகின்றார்
எனப் பின்னர் இச்சரிதத்துக் காண்பதன் குறிப்பாக இவ்வாறு
முன்னுணர்த்தினார். இவ்வாறே வரும்பாட்டில் "இருசுடர்க்
குறுகண்டீர்க்கும் எழில் வளர்கண்" என்றதுங் காண்க. நாயனாரது
வாய்நீருங் கண்ணும் முதலியவை முன்புசெய் தவத்தினீட்டத்தால்
முற்றியனவாம். இங்கு மேற் செய்வினையால் இனிப் பக்குவப்பட
எஞ்சி நிற்கும் குறை யொன்றுமில்லாதன; ஆதலின் இப்பருவத்தே
அவற்றின் முற்றிய தன்மைபற்றிக் கூறினார். "மகவு மனிதனின்
தந்தை" (The child is the father of the man) என்ற நவீனர் பழமொழிக்
கருத்தும் காண்க.

     நீரில்உள்.........ஒழுகிய மழலை - மழலைச் சொற்கள்
வாய்நீரொழுக்குடனே கலந்து வெளிவருகின்ற இயல்புபற்றி
வாய்நீரில் நனைந்து ஊறி ஒழுகிய மழலை என்றார். சொல் என்ற
ஒலியுருவம் நீரில் நனைந்து ஊறி ஒழுகியதென்பது உபசாரம்.
தீஞ்சொல் - இனிய சொல்.

     வண்ணம் - அழகு. மென்மை - மெல்லிய தன்மை.
பவளம்
- பவளம்போன்ற நிறம்.

     குதட்டுதல் - மழலைச் சொல் சொல்லப் பழகும்போது
குழவிகள் வாயிதழ்களைக் கூட்டி அசைத்து ஒலிக்க முயலுதல்.

     வளராநின்றார் - வளர்கின்றார். நாளுநாளும் வளர்ந்து
கொண்டே செல்லும் தொடர்ந்த செய்தியை ஆநின்று என்ற
நிகழ்கால இடைநிலையாற் குறித்தார். 22