673.
துடிக்குற டுருட்டி யோடித் தொடக்குநாய்ப் பாசஞ்
                                   சுற்றிப்
பிடித்தறுத், தெயினப் பிள்ளைப் பேதைய ரிழைத்த
                                    வண்ட
லடிச்சிறு தளிராற் சிந்தி, யருகுறு சிறுவ ரோடுங்
குடிச்செறி குரம்பை யெங்குங் குறுநடைக் குறும்பு
                                 செய்து,  24

     673. (இ-ள்.) வெளிப்படை. உடுக்கைபோன்ற குறட்டினை
உருட்டி ஓடியும் நாயைக் கட்டிய கயிற்றைச் சுற்றிப்பிடித்து
அறத்தும், வேட்டுவச் சிறுமியர் விளையாடக் கட்டிய சிறுவீடுகளைத்
தமது தளிர்போன்ற சிற்றடியினால் அழித்தும் பக்கத்துக்கூடிய
வேட்டுவச் சிறுவர்களோடும் கூடி அந்தச் சிறுகுடியிற் செறிந்த
குடில்களிலெங்கும் குறுநடைக் குறும்பு விளையாடல்களைச்
செய்தும், 24

     673. (வி-ரை.) துடிக்குறடு - உடுக்கை வடிவினதாய்
மரக்கட்டையாற் செய்யப்பட்ட இது சிறார் விளையாடுகருவிகளில்
ஒன்று. துடியின் கட்டை என்பாருமுண்டு. உருளுஞ் சிறுகட்டைகளை
உருட்டி விளையாடும்பருவம் சிறு தேர்ப்பருவம் எனப்படும்.

     பேதையர் இழைத்த வண்டல் அடிச்சிறு தளிரால் சிந்தி
- இது சிற்றிற்பருவம்
குறிப்பதென்ப. சிறுமிகள் இழைத்து
விளையாடும் சிறுமணல் வீடுகளை இப்பருவத்துச் சிறார்கள்
காலினால் அழிக்க, அதுபற்றி அச்சிறுமியர் "சிறியேஞ் சிற்றில்
சிதையேலே" என்று வேண்டுவதாக வைத்துப் பாராட்டிப் பிள்ளைத்
தமிழ் கூறுதல் மரபு.

     நாய் தொடக்கும் பாசம் எனவும், தளிர்ச்சிறு அடி
எனவும் மாற்றுக.

     நாய்ப்பாசம் அறுத்தல் நாய்களுடன் ஓடி விளையாடுதற்கு.
பாசம் சுற்றிப் பிடித்து அறுத்து என்றது கயிற்றினை அறுக்கும்
வகை குறித்தது.

     எயினர் - வேடர். பிள்ளைப்பேதையர் -
பிள்ளைமைப்பருவங் கடந்து பேதைமைப்பருவம் புகுந்த பெண்கள்.
ஐந்து முதல் ஏழு வயதுவரையுள்ள சிறுமியர் 282 உரை பார்க்க.
பேதையர் - இங்குப் பருவங் குறித்தது.

     வண்டல் - மண்ணிற் புரண்டும் மண் கூட்டியும்
மணற்சிறுவீடு கட்டியும் விளையாடும் சிறுமியர் ஆடல் வகை.
"வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்த சடை,
அண்டர்பிரான் திருவார்த்தை யணையவரு வனபயின்று" என்ற
காரைக்காலம்மையார் புராணமுங் காண்க.

     குரம்பை - சிறுகுடில். குறுநடைக் குறும்பு - குறுநடை -
தளர்நடைக்கும் பெருநடைக்கும் இடைப்பட்ட நடை. இப்பருவத்தே
செய்யும் சிற்றாடல்கள் குறும்பு எனப்படும்.

     இவ்விரண்டு பாட்டுக்களானும் இரண்டாண்டுவரை உள்ள
வளர்ச்சி கூறப்பட்டது. 24