675.
கடுமுயற் பறழி னோடுங் கானவே னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய்க் கொடுஞ்செவிச்
                                 சாப மான
முடுகிய விசையி லோடித் தொடர்ந்துடன் பற்றி
                                 முற்றத்
திடுமரத் திரளிற் கட்டி வளர்ப்பன வெண்ணி
                                 லாத.
  26

     675. (இ-ள்.) வெளிப்படை. மிக்கவேகமுடைய
முயற்குட்டியுடன் காட்டுப் பன்றியின் குட்டியும் புலிக்குட்டியும்
வளைந்த காதுகளையுடைய செந்நாயின் குட்டியும் ஆகிய இவற்றை
முடுகிச் செல்லும் வேகத்தாற் பின்றொடர்ந்தோடிப் பிடித்துத் தமது
வாயில் முற்றத்தில் உள்ள மரங்களிற் கட்டி (இவ்வாறு) திண்ணனார்
வளர்க்கின்ற பிராணிகள் எண்ணில்லாதனவாம். 26

     675. (வி-ரை.) பறழ் - குட்டி - குருனை - சாபம் -
என்பன மிருகச்சாதி யிளமைக்குரிய மரபுப் பெயர்கள். வெவ்வேறு
சாதி குறிக்க வெவ்வேறு பெயராற் கூறினார். 653 - ம் பிறவும்
பார்க்க. தொல்காப்பியம் மரபியலுட் கூறியனவும் காண்க.

     கடுமுயல் - வேகத்தாற் கடிய முயல். இது மனிதராற்
பின்றொடர்ந்தோடிப் பற்ற முடியாத வேகமுடையது. பின்னர்க்
கூறும் மூவகைப் பிராணிகளின் வேறாகிய இனமாதலின் இதனை
ஓடு
உருவு தந்து பிரித்தோதினார்.

     கானஏனம் - காட்டுப்பன்றி. மிக்க மூர்க்கத் தன்மை
யுள்ளது. யானைக்கிருத்தல் போல் முன்னால் வளைந்து நீண்ட
இரண்டு பற்களுடையது. இவ்வினத்தில் ஒருபெரும் பன்றி பதினான்கு
ஆள் சுமக்கும் பாரமுள்ளது என்றும், அதனை உண்போர்
பெருவிலை தந்தும் பெறுவர் என்றும் கூறுப.

     காட்டுப்பன்றிக் குட்டிகளை இளமையில் முடுகியவிசையிற்
சென்று பற்றிய பயிற்சியே பின்னர் நாயனார், மொய்வலைகளை
யறுத்துக் கடுவிசையில் முடுகி நெடிதோடிய (736) ஏனத்தைக்
காதங்கள் பலவும் (741) அதன் முடுகிய விசையுடன்
தொடர்ந்தோடிச் சுரிகையாற் குத்தி வீழ்த்திய திறமாக விளைந்தது
என்று பிற் சரிதக் குறிப்பும் காண்க.

     கொடுவரி - புலி. வளைந்த வரிகளையுடையது என்பது
பொருள். "கொடுவரியியங்கும் கோடுயர் நெடுவரை" - புறம் - 135.
இது வீரம் மிகுந்த சாதி. செந்தாய் ஒருவகைக் கானவிலங்கு. மிகக்
கொடுமை யுடையது. இதுமுதலில் ஒன்றிரண்டாய் வந்தபின்
பெருந்திரளாகக் கூடி மக்களையும் வேற்று விலங்குகளையும்
கொடுமையாய்க் கடித்தும் அடர்த்தும் கொல்லுந் தன்மையுடையது.

     கொடுஞ் செவிச் செந்நாய்ச் சாபம் - சாபம் குட்டி.
வளைந்த காதுகளையுடைய செந்நாயின் குட்டி என்க. இச்சாதியின்
குட்டிகள் நாய்க்குட்டிகள் போல வளைந்து தொங்கிய காதுடையன
என்பர். கொடுஞ்செவிஞமலி (652) என்றது காண்க.

     இங்கு, சரபமான எனப் பாடங்கொண்டு கொடிய
காதுகளையுடைய சரபம் (பறவை) போல வேகத்திற் சென்று
என்பாருமுண்டு. இவர்கள் ஆன - உவம உருபென்பர். சாபம் -
எனவே கொண்டு - வில் என்று பொருள்கூறி, இருபுறமும் வளைந்த
காதுகளையுடைய வில்லிற் கோத்த அம்பின் விசையில் எனப்
பொருள் கூறுவாரும், வில்லின் ஆனவிசை - பாணவேகம்
என்பாருமுண்டு. இவற்றின் பொருத்தங்கள் ஆராயத் தக்கன.

     முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்துடன்பற்றி - இங்குக்
கூறிய பிராணி வகைகள் மிக விசையில் ஓடும் இயல்புடையனவும்
மூர்க்கமும் வீரமும் கொடுமையும் உடையனவும் ஆம். இவை
இளைய குட்டிகளேயாயினும், இவரும் ஏழாண்டுடைய சிறுவரேயா
மாதலின் அவற்றிற்கேற்ற வேகத்தின் மிக்கு ஓடித்தொடர்ந்து
பற்றினார் என்பதாம். இதனால் இளமையில் இவர்பால் முனைந்து
முளைத்து வளர்ந்த குணங்களினியல்பு குறித்தார்.

     முற்றத்திடு மரத்திரள் - 652 பார்க்க.

     கட்டி வளர்ப்பன - பார்வை மிருகங்கள் முன்னரே
கட்டப்பட்டிருக்கின்றன வாதலின் இனமாகிய இவற்றையும்
அவற்றின் பக்கத்தே சிறார்கள் கட்டிவளர்க்கக் காரணமாயிற்று.
வளர்ப்பன - குட்டிகளுக்கு ஊறில்லாதவாறு பற்றிக் கொணர்ந்து
வளர்த்தல் இவர்பால் மேற்குறித்த குணங்களுடனே முனைந்து
வளர்ந்த அன்பின் நிலையும் காட்டுவதாம். பின்னர் "விளைத்த
அன்பு" என்றதுங் காண்க. கொடிய வேட்டையினும்
இளவிலங்குகளைக் கொல்லாமை இவர்க்குரிய குலவொழுக்கமுமாம்.
735 பார்க்க. ஆயின் குலவொழுக்கம் பயிலும் பருவமுற்றாத
இவர்க்கு இங்கு அன்பின் நிலையே இதற்குப் பெரிதும்
ஏதுவாயிற்றென்பது.

     மரத்தாளில் - என்பதும் பாடம். 26