676.
அலர்பகல் கழிந்த வந்தி யையவிப் புகையு மாட்டிக்
குலமுது குறத்தி யூட்டிக் கொண்டுகண் டுயிற்றிக்
                                   கங்குல்
புலரவூ னுணவு நல்கிப் புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை யாண்டு செல்லச் சிலைபயில் பருவஞ்
                                சேர்ந்தார்.
27

     (இ-ள்.) வெளிப்படை. வேடர்குலத்து வந்த முதியவளாகிய
குறித்தி கதிரொளி அலர்ந்து விளங்கும் பகல்கழிந்த மாலைப்
பொழுதிற் கடுகின் புகையும் சுற்றி உணவு ஊட்டி, இம்மகவை
எடுத்துக் கொண்டு ஒரு இடத்து வைத்துத் துயிலச் செய்து, இரவு
கழிந்தபின் ஊன் உணவு கொடுத்துப், பின்னர் அது செய்யும்
விளையாட்டிலே பயிலும்படி விட்டு, இவ்வாறு சில ஆண்டுகள்
செல்ல இவர் வில்வித்தை பயிலும் பருவத்தை அடைந்தார்.

     (வி-ரை.) அலர்பகல் - ஞாயிற்றின் கதிர்கள் அலர்ந்து
வீசும் காலமாகிய பகற் பொழுது. பகல் - பகுதல் - பிளத்தல்.
ஒருநாட் பொழுதை இரு பகுதியாகப் பிளவு படுத்துவதில் ஒருகூறு.
தொழில் அதனாற் போந்த பொழுதிற்கு - கால அளவிற்கு -
வந்தது. ஆகு பெயர். நாட்பொழுதை இருகூறாகப் பகுத்தலைச்
செய்வோன் பகலோன்.

     புகையுமாட்டி - கடுகுப்புகை கமழச் சுற்றிக்
கண்ணேறுகழித்தல். இதனாற் சிறாரை விடம், கொடுந்தெய்வப்பீடை,
பிணி முதலியவையும் தாக்கா என்பர்.

     குலமுது குறத்தி - குலத்தவரில் முதியவளாயுள்ள குறத்தி.
குழவிகளை வளர்த்தலில் நீண்ட அனுபவமுடையவர்களாதலின்
முதியவராகிய பெண்களிடம் சிறாரை வளர்க்க விடுதல் உலகியல்.
இது முன்னாள் வழக்கு. இதுவும் இந்நாள் அருகி வருகின்றது.
குழந்தையுலகப் பாதுகாவலின் நேர்ந்துள்ள குறைபாடுகளில் இதுவும்
ஒன்று என்பர்.

     ஊட்டிக் கொண்டுகண் துயிற்றி - சிறாரை உணவூட்டிக்
கொண்டு துயில வைத்தல் மரபாம். தூக்கமிகுதியாற் சிறுவர் இரவில்
தாமே உண்ணார். ஆதலின், ஊட்டி என்றார். பகலில் அவ்வாறன்றித்
தாமே உண்பாராதலின், கங்குல் புலா, உணவுநல்கி என்றது காண்க.

     ஊண் உணவு - ஊனாகிய உணவு - ஊன்கலந்து சமைத்த
உணவு என்றலுமாம். விட்டு - விளையாட்டுப்பயிலுமாறு ஆடிடத்தில்
விட்டு. முறைசில ஆண்டு எனமாற்றுக.

     சிலை பயில் பருவம் - பன்னிரண்டண்டளவுள்ளது.
"பன்னிரண்டிற் கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்" - பிங்கலம். 27