677.
|
தந்தையு
மைந்தனாரை நோக்கித்தன் றடித்த
தோளாற்
சிந்தையுண் மகிழப் புல்லிச் சிலைத்தொழில் பயிற்ற
வேண்டி
முந்தையத் துறையின் மிக்க முதியரை யழைத்துக்
கூட்டி
வந்தநாட் குறித்த தெல்லா மறவர்க்குச்
சொல்லிவிட்டான். 28 |
(இ-ள்.)
வெளிப்படை. மைந்தனார் செவ்விதிற் சிலைபயில்
பருவஞ்சேர்ந்தது கண்டு தந்தையும் மனமிக மகிழ்ந்து தனது
தடித்த தோள்களினால் அவரைத் தழுவிக் கொண்டு, அவருக்கு
விற்றொழிலைப் பயில்விக்க எண்ணி முன்னே அத்துறையில்
முதியோரை அழைத்துக்கூட்டி, அவர்களுடன் ஆராய்ந்து,
அதற்குரிய நன்னாட்குறித்து, அவ்வரலாறெல்லாம் மறவர்களாகிய
வேடர்களுக்குச் சொல்லிவிட்டான்.
(வி-ரை.)
தந்தையும் - சிறப்பும்மை. நோக்கி
-
நோக்குதல் - எண்ணம் வைத்து ஊன்றிப்பார்த்தல். அவன்
நோக்கமிது என்பதாதி வழக்குக்கள் காண்க. புதல்வரைப் பெற
வரங்கிடந்து பெற்றவன், அவர் செம்மைபெற வளர்த்தலையும்
தனது வரையாட்சி கைக்கொள்ளத் தகுதியுடையவராதலையுங்
காணவிரும்பி அதுவே கருதிக் கொண்டிருந்தானாதலின், இப்போது
அவர் சிலை பயில் பருவஞ் சேர்ந்ததனை ஊன்றி
நோக்கினான்
என்றார். பருவநோக்கமே இங்குக்குறிக்கோள் என்பது.
சிந்தையுள்
மகிழத் தன் தடித்த தோளாற் புல்லி -
மகிழ்ந்து - என்பது மகிழ எனத் திரிந்து நின்றது. மகிழ்ச்சியின்
காரணம் மேல் உரைக்கப்பட்டது. தடித்த பெருத்த.
இத்தோள்கள்
ஊன்வளர்ச்சியாகிய புறஉடற் பெருக்கம் மட்டில் உள்ளனவேயன்றி
வேறு உட்பெருமையற்றன என்பது குறிப்பு. "பிறப்பின் சார்பாற்
குற்றமே குணமா வாழ்வான்" (657) "செவ்வரைபோற் புயமிரண்டுஞ்
செறியப் புல்லி" (701) என்பவை காண்க. நாயனாரது
தோள்களைப்பற்றிக் "குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார்"
(823) என்று பாராட்டுஞ் சிறப்பும் இங்கு நினைவு கூர்க.
சிலைத்தொழில்
பயிற்ற வேண்டி எவரும் உரியவயதில்
அவ்வவர்க்குரிய கல்வி பயிலுதல் வேண்டும் என்ற நியதி
விளக்கப்பட்டது. பயிலப்படும் வித்தை பற்றி இப்பருவம்
பலதிறப்படும். கல்விப் பயிற்சி ஐந்துவயதளவிற் றொடங்குதல்மரபு.
"ஐந்துவருட மலர்க்கணைய" என்ற சண்டீசர்புராணமுங் காண்க.
ஆயின் இங்கு வில்வித்தை உடலைப் பற்றிய கலையாதலின்
அதற்குரிய உடல் வளர்ச்சி பெற்ற பின்னர்த் தொடங்கப்
பெறவேண்டுதலின் இப்பருவம் பன்னிரண்டாண்டென்ப.
சிலைத்தொழிலே
வேடர்க்குரிய சிறந்த வித்தையாம்;
அதனில் வலியனாயினன்றி ஒருவன் அக்குலத்தலைமைபூணத்
தகுதியுள்ளவனாகான்; தகுதியில்லாத ஒருவனுக்குத் தலைமைவரினும்
அதனைத்தாங்கலாற்றாது இடர்ப்பட்டு இழக்க நேரிடும்; கலைகளை
உரியபருவத்தே பயிலுதல் வேண்டும் என்பனவாதி
உள்ளுரைகளையெல்லாம் இங்கு நாகன் கருத்தில் வைத்துப், பயிற்ற
வேண்டினான் என்று ஆசிரியர் காட்டிய அழகு காணத்தக்கது.
முந்தை
அத்துறையில் மிக்க முதியரை - அத்துறை -
தன்மரபிற் சிலைத்தொழில் பயில்விக்கும் அந்தத் துறை. "மன்னர்க்கு
வென்றி வடிவாட் படைபயிற்றுந், தன்மைத் தொழில் விஞ்சை" (610)
என வாட்படைபயிற்றும் ஆசிரியத்தன்மை பற்றிக் கூறியது காண்க.
அகரச்சுட்டு, தான் எண்ணிய சிலைத்தொழில் பயிற்றும் அந்த எனச்
சேய்மை சுட்டியது. முதியர் - வயது பயிற்றும்வன்மை
முதலியவற்றால் முதிர்ந்தவர். இதனால் பயிற்றுங் கலைக்குத்தக்க
ஆசிரியனிலக்கணமும் நல்லாசிரியனைத் தேர்ந்து கொள்ளும்
அவசியமும் கூறப்பட்டன.
அழைத்துக்
கூட்டி - பலரையும் அழைத்து ஒன்று
கூடும்படிசெய்து ஆலோசித்து. இவ்வேடர்களும் மந்திராலோசனை
முறை கையாண்ட வகை காண்க. வந்தநாள் - முதியர்
ஆய்ந்தமையாற் பெறபட்ட நன்னாட்குறித்து அதனை.
மறவர்
- வீரத்தினையுடைய வேடர். காரணவிடுகுறி.
சொல்லிவிட்டான்
- அழைக்கும்படி தூதுவரைப்
போக்கினான். சொல்லி வருமாறு தூதரை விடுத்தான். சொல்லிவிட்ட
மொழிகள் வரும்பாட்டிற் காண்க.
|