678.
"வேடர்தங் கோமா னாகன் வென்றிவே ளருளாற்
                                    பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன்விற் பிடிக்கின்
                                  றா"னென்
றாடியற் றுடியுஞ் காற்றி யறைந்தபே ரோசை கேட்டு
மாடுயர் மலைக ளாளு மறக்குலத் தலைவரெல்லாம்,
29

     678. (இ-ள்.) வெளிப்படை. "வேடர்களுடைய அரசனாகிய
நாகன் வெற்றியுடைய கந்தவேளினது திருவருளினாற் பெற்ற
அறிவுடையாரினும் மிக்குச் சிறந்த செயலையுடைய திண்ணனார்
விற் பிடிக்கின்றார்" என்று, வெற்றி தரும் இயல்பினையுடைய
உடுக்கை ஒலிப்பித்து, வாக்கினாலும் சொல்லிய, பேரோசையைக்
கேட்டுப் பக்கத்து மலைகளை ஆட்சி செய்யும் மறக்குலத்
தலைவர்கள் எல்லாரும், 29

     678. (வி-ரை.) "வேடர்......பிடிக்கிறான்" - இவை
வேடர்கள் அச்செய்தியைத் துடிசாற்றி அறைவித்த சொற்கள்.
மேற்பாட்டில் சொல்லிவிட்டான் என்றும், இங்கு என்று -
அறைந்த
- என்றும் கூறியது காண்க. அரசாங்கத்தார் பெரு
நிகழ்ச்சிகளைப் பலரறியச் செய்யுங்கால் முரசு, பறை முதலியன
முழக்கியும் அதனோடுகூட அவ்விவரத்தினைச் சொல்லாற்
சாற்றியும் அறிவித்தல் பண்டை நாள் முதல் வழங்கும் வழக்காம்.
திருவீழிமிழலையில் பஞ்சம் வந்தகாலத்து அடியார்க்கெல்லாம்
அமுதளித்த ஆளுடைய அரசுகளும், ஆளுடையபிள்ளை யாரும்
"பரமனடியா ரானார்க ளெல்லாமெய்தி யுண்கவென விரண்டு
பொழுதும் பறை நிகழ்த்திச், சொல்லாற் சாற்றிச் சோறிட்டார்"
(திருநா - புரா - 259) என்றதும் இங்கு நினைவுகூர்க. இந்திர
விழாச் செய்தியை நாடறியுமாறு யானையின்மீது முரசறைந்து
அறிவித்ததாகிய சிலப்பதிகார வரலாறும் காண்க. இங்குத் துடியாற்
சாற்றுதல் அந்நில வழக்கு. பறைமுதலியன முதலில் முழக்குதல்
அச்செய்தி சொல்லும் மொழிகளைக் கேட்குமாறு பலருடைய
கவனத்தையும் கவரும்பொருட்டு.

     ஆடு இயல் - ஆடு - வெற்றி. துடியின் ஒலி வெற்றிக்குத்
துணையாதலின் ஆடியற்றுடி என்றார். "ஆடுகொணே மியான்" -
(கலித் - 105 - 70).

     மாடு உயர் மலைகள் - அந்நாட்டின் மலைத்தொடரில்
வரிசையாய்ப் பக்கத்தே தோன்றும் உயர்ந்த பல தனிமலைகள்.
"திருக்காளத்தித் திருமலையிம் மலைகளில் யாதென்று கேட்டார்"
(திருஞான - புரா - 1019) என்றதுகாண்க.

     தலைவர் எல்லாரும் - சிலைபயில் வேடரும் - கேட்டுத்
துன்றக் - கொண்டு - வந்தார் - என இவ்விரண்டு பாட்டுக்களையுந்
தொடர்ந்து முடித்துக் கொள்க. எல்லாரும் - வேடரும் -
எண்ணும்மைகள் தொக்கன.

     இவருள், மணி - பொன் - தரளம் - முதலியன கொண்டு
முன்னே வரும் தலைவர்களை முன்னர் இப்பாட்டிலும், தோல் -
கோடு - குவை - தேன் - நறவு - ஊன் - பலம் - கிழங்கு
முதலியன சுமந்து அத்தலைவர்களைப் பின்பற்றி வரும் வேடர்களை
அடுத்த பாட்டிலும் வைத்துக்கூறிய வைப்புமுறை நயமும் காண்க.

     வேடர்தம் கோமான் நாகன் - வேடர் தலைவனாகிய
நாகன். சிறப்புப் பெயர் முன் வந்தது.

     வென்றிவேள் அருளால் பெற்ற - "அயிலுடைத் தடக்கை
வென்றி அண்ணலார் அருளினாலே" (661) என்றது காண்க. வென்றி
- எஞ்ஞான்றும் தவிராது எப்பகையையும் வெல்லும் ஞானவெற்றிக்
கடையாளமாகிய வேல் ஏந்தியதைக் குறித்தது. வேள் - முருகன்.

     வென்றிவேள் - பிறதினியைபு நீக்கிய விசேடணம். வேள்
என்ற பெயர் பெறினும் சிவபெருமானிடம் வெற்றி பெறா
தொழிந்தழிந்த காமவேளினும் பிரித்துணர்த்த வென்றிவேள்
என்றார். 659 - ல் உரைத்தவையும் காண்க. அருளாற் பெற்ற
வரலாறு முன்னர் உரைக்கப்பட்டது.

     சேடரின் மிக்க செய்கை - சேடர் - அறிவுடையோர்.
மிக்கசெய்கை
- மிகுதியாய அறிவுடைச் செயல் "அறிவானிலு
மறிவான்" (திருக்கேதாரம். பண் - நட்டபாடை. 2) என்ற ஆளுடைய
நம்பிகள் தேவாரமுங் காண்க. அருளாலும் அறிவாலும் செயலாலும்
சிறந்த என்றபடி. இச்செய்கையும் அறிவும் அருளும் இவர்க்குப்
பிறந்தது முதல் இயல்பின் விளங்கின. அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவும் காற்றும் தன்மை (665) என்றது காண்க. இவை
தம் தலைவரது மெய்க்கீர்த்திகளாக வேடர்களாற்
சாற்றப்பட்டனவாம்.

     வில்பிடிக்கின்றான் - வில்வித்தைப் பயிற்சி தொடங்கப்
பெறுகின்றான். வித்தை பயிலத் தொடங்குதல் ஒருசடங்கு. இது
அவ்வநிலத்துக்கும் அவ்வமக்கட்கும் அவ்வவித்தைக்கும் ஏற்றபடி
பற்பலவாறு கொண்டாடப்படும்; கல்விப்பயிற்சியில் எழுத்துக்களை
வாயாற் சொல்லியும் கையால் எழுதியும் படிப்பித்தல்போல
வில்வித்தையில் வில்லைப்பிடித்தலே முதலிற் கற்றுக்
கொடுக்கப்படுவது. "பொருசிலை பிடிப்பித்தார்கள்" (689)
என்றது காண்க. பிடிக்கிறான் என்றது முதலாவதாக நன்னாளிற்
பிடித்துப் பயிலத் தொடங்குகின்றான் என்ற பொருளில் வந்தது.