679.
மலைபடு மணியும் பொன்னுந் தரளமும் வரியின்
                                 றோலுங்
கொலைபுரி களிற்றுக் கோடும் பீலியின் குவையுந்
                                 தேனுந்
தொலைவில்பன் னறவு மூனும் பலங்களுங் கிழங்குந்
                                 துன்றச்
சிலைபயில் வேடர் கொண்டு திசைதொறு நெறுங்க
                                  வந்தார்.
30

     679. (இ-ள்.) வெளிப்படை. மலைபடு பொருள்களாகிய
மணியும் பொன்னும் முத்துமாகியவற்றையும் புலித்தோலும்,
கொலைபுரி யானைக் கொம்பும் மயிற் பீலியின் சுமையும் தேனும்
அளவல்லாத பலவகை நறவும் ஊனும் பழங்களும்
கிழங்குமாகியவற்றைச் செறிய விற்பயிற்சி மிக்க வேடர்களும்,
எடுத்துக்கொண்டு பல திசைகளினின்றும் நெருங்க வந்தனர். 30

     679. (வி-ரை.) இப்பாட்டிற்கூறிய மணி - முதலியனயாவும்
இவ்வேடர்கள் வாழும் மலைகளிற்படும் கருப்பொருள்களேயாம்.
அவ்வநாட்டில் வாழும் மக்கள் தமது நித்திய வாழ்வுக்கும் மணம்
முதலிய சிறப்புக்களுக்கும் வேண்டும் அணி - உணவு - உடை
முதலிய எல்லாப்பண்டங்களையும் தாம் வாழும் அவ்வநாட்டிற்படும்
பொருள்களினின்றுந் தேடி அமைத்துக்கொள்ளுதலே
அமைவுடைத்தாம் என்று குறிக்க மலைபடு என்றார். இதுவே
மனிதருள் எல்லா வகையார்க்கும் இயற்கை வற்புறுத்தவும் மக்கள்
கேடுபடாது வளம்பட வாழ்த்தின்புறவும் கரு திக்கருணையே
யுருவாகிய ஆசிரியர் மலைபடு எனத் தலைமைபெற முதலிற்
குறித்தார். இஃதாவது தெய்வமணக்கும் செய்யுளியல்பாமென்க.

     மணியும் - மலையிற் படுவனவற்றில் முத்தல்லாத ஏனை
மணிகள். தரளம் எனப் பின்னர்ப் பிரித்துக் கூறியதும், பொன்னை
இடையில் வைத்துக் கூறியதும் பற்றி 235, 492 முதலிய
திருப்பாட்டுக்களில் உரைத்தவை காண்க.

     பொன்னும்..............கிழங்கும் - பொன் - மணி தரளம் -
இவை விலைபெற்ற அணிகளுக்காம். இவற்றை இந்நிலமாக்களும்
அணிந்து கொள்ளுதல் வழக்கு என்பதறியப்படும். வரித்தோல்
இருக்கையு முடையுமாம். களிற்றுக்கோடு வேலியும் அணியுமாம்.
பீலியின்குவை
அணிவகையும் உடைவகையுமாம். தேன் முதலியன
உணவுப் பண்டங்களென்க. இவற்றுள்ளே தேனும் நறவும் பருகுவன;
பலம் முதலியவை உண்பன என்றிவ்வாறு கண்டு கொள்க.
இவைகளுள்ளே உணவு வகை 684 - 685 - ல் விரித்தல் காண்க.
மயிற்பீலி அணியாயும் உடையாயும் பயன் படுதல் 706, 710
முதலியவற்றிற் காண்க. இப்பண்டங்களைக் கொண்டுசெல்லுதல்
அவ்வேடர் தமது தலைவனுக்குச் செலுத்தும் காணிக்கை
முறையாகவும் விழாவிற்குப் பயன்படும் முறையாகவும் உள்ள
உலகநிலை நயமும் காண்க. இது அந்நாட்டு நல்வழக்குக்களில்
ஒன்று. இது இந்நாள் நாகரிக உலகமும் படியெடுத்
தொழுகற்பாலதாம்.

     சிலைபயில் வேடர் - விற்படிக்கும் விழாவாதலின்
அவ்வித்தை பயின்றோர் பலரும் கூடுதல் முறையாமென்பார்
இவ்வாறு கூறினார்.

     திசைதொறும் நெருங்க - எல்லாத் திசைகளிலுமிருந்தும்
செறிந்து கூட. 30