680.
மல்கிய வளங்க ளெல்லா நிறைந்திட மாறில் சீறூ
ரெல்லையி லடங்கா வண்ண மீண்டினர்
                       கொணர்ந்தா; ரெங்கும்
"பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க்கடன்
                            பலவுஞ் செய்து
வில்விழா வெடுக்க" வென்று விளம்பினான் வேடர்
                                கோமான்.
31

     (இ-ள்.) வெளிப்படை. மேற்கூறியவாறு நெருங்கிய வளங்கள்
எல்லாம் நிறைந்திடலாலே, தனக்கு மாறு இல்லாத அந்தச் சிற்றூரின்
எல்லைக்குள் அடங்காதபடி எங்கும் ஒன்று கூடினராகிக்
கொணர்ந்தார்கள்; "எங்கும் பல பெருங்கிளைஞர்கள் கூடிப்
பாராட்டத் தெய்வத்திற்குப் பராவுக்கடன் பலவும் செய்து வில்விழா
எடுப்பீராக" என்று வேடர் கோமானாகிய நாகன் சொன்னான்.

     (வி-ரை.) மல்கிய வளங்கள் எல்லாம் - மேற்பாட்டிற்
சொல்லியவையும் அவை போல்வன பிறவும் ஆகிய எல்லாம்.
எல்லாம்
என்றதனால் வகையின் நிறைவும், நிறைந்திட
என்றதனால் தொகையின் மிகுதியும் குறித்தார்.

     மாறு - ஒப்பும் மிகையுமாகிய எதிர்வு.

     சீறூர் எல்லையி லடங்கா வண்ணம் - ஊர் எல்லையுட்
கொள்ளாதபடி அளவின் மிகுதியாக. திருநாரையூர்ப்
பொல்லாப்பிள்ளையாருக்கு நிவேதிக்க இராசராசதேவர் கொணர்ந்து
வைத்த பழ முதலிய திரவியங்களின் வகையை "ஆங்கதனுக் கந்நகரி
லிடம்போ தாம வயல்சூழப் பதின்காத வகல வெல்லை,
மாங்கனிவாழைக்கனிகள் வருக்கை யாவும் வந்தனவவ்
வெல்லையெல்லாம் மருவ வைத்து" என்று திருமுறைகண்ட புராண
(7) த்தினுட் கூறியதனை இங்கு நினைவு கூர்க.

     ஈண்டினர் கொணர்ந்தார் - ஈண்டினராகிக் கொணர்ந்தனர்.
முற்றெச்சம் எங்கும் - எங்கும் ஈண்டினர் எனவும், எங்கும்
பலவுஞ்செய்து எனவும் கூட்டியுரைக்கவும் நின்றது.

     "பல்பெருங்.........எடுக்க" - இது நாகன் அங்குவந்து கூடிய
வேடர்களுக்கு இட்ட ஆணை. கிளைஞர் போற்றுதல் -
உறவினராகிய வேடர் உண்டுடுத்தி வாழ்த்திப் பாராட்டுதல். இது
இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாம். பராய்க்கடன் பலவும்
செய்து - இது மற்றொரு பகுதி. வில்விழா எடுக்க - விழாவின்
முடிபாகிய மூன்றாம் பகுதி. கிளைஞர் போற்றல் 681 - 684
வரையும், விழா 685 - 687 வரையும், பராய்க்கடன் 688 - 689 - ம்
கூறியது காண்க. பராய்க் கடன் - பரவுக்கடன் என்ப. தெய்வம்
பரவுதற்குரியனவாகி விதித்த செயல்கள். "பராய்க்கடனெறியினிற்பார்"
(659) என்றது காண்க. பல - துணங்கையாடல் முதலியன. வில்விழா
- பிடிப்பிக்கும் வில்லினைக் காப்புச் செய்வது முதல் அதனை
மாணவரைப் பிடிப்பிக்கும்வரை உள்ள திருவிழாக்
கொண்டாட்டமாம்.

     எடுக்க - செய்க - கொண்டாடுக. வேடர் கோமான் -
நாகன்.

     பலவும் நேர்ந்து - மிகவும் செய்து - என்பனவும்
பாடங்கள். 31