681.
|
பான்மையிற்
சமைத்துக் கொண்டு படைக்கலம்
விளைஞரேந்தத்
தேனலர் கொன்றை யார்தந் திருச்சிலைச் செம்பொன்
மேரு
வானது கடலி னஞ்ச மாக்கிட வவர்க்கே பின்னுங்
கானவூ னமுத மாக்குஞ் சிலையினைக் காப்புச்
சேர்ந்தார். 32 |
(இ-ள்.)
பான்மையில்...எந்த - வினைஞர் உரிய தன்மையில்
படைக்கலத்தையமைத்து ஏந்த; தேனலர்........சிலையினை - தேனுடன்
அலர்கின்ற கொன்றையணிந்த சிவபிரானுடைய திருச்சிலையாகிய
செம்பொன் மேருமலையானது அவர்க்குப் பாற்கட லமுதினை
நஞ்சமுதாக்க, இவரது கையில் வந்தபோது அதற்குப் பரிகாரமாக
அவருக்கே பின்னும் கானவூனைத் திருவமுதாக்கும் சிலையினைக்
காப்புச் சேர்த்தனர்.
(வி-ரை.)
படைக்கலம் - இங்கு வில்லைக் குறித்தது.
ஏந்திய பின்னரே வில் எனப் பெயர் பெறுதலின் வினைஞர்
சமைத்த அப்போது படைக்கலம் எனப்பட்டது.
வினைஞர்
பான்மையில் படைக்கலம் சமைத்துக்
கொண்டு ஏந்த என்க. விழாச் செய்து பிடிப்பிக்கும் பொருட்டுத்
தனியானதொரு வில் தக்கவாறு தக்க வினைஞராற் சமைக்கப்பட்ட
தென்பதாம். பான்மை - ஏற்ற தன்மை, வினைஞர்
- படைக்கலம்
சமைக்கும் பண்புடைய கைவன்மையுடையோர். இதற்கு வேறு வேறு
படைக்கலம் என்றும், விழாவிற்கு வேண்டிய வெவ்வேறு
படைக்கலமென்றும் பற்பலவாறுரைப்பாருமுளர். அவை ஒன்றும்
ஈண்டைக் கேலாமையுணர்க. பான்மையின் -
ஈண்டு ஊழின்படி -
நியதியின்படி என்ற குறிப்புந் தருதல் காணப்படும். முன்பு
அருச்சுனனாயிருந்த இந்நாயனார் இறைவனை அடைதற்பொருட்டே
இப்பிறப்பில் வேடராய்வந்தார் என்ற சரிதம் சீகாளத்திப்
புராணத்தாலும் பிறவாற்றாலும் அறியப்படும். இதன் விரிவு "முன்பு
செய்தவத்தினீட்டம்" (751) என்ற இடத்துக் காண்க.
அவ்வூழினைப்பற்றியே, இங்கு இவர் கையில் விற் பிடிப்பிக்க,
இதுவே இறைவனுக்கு ஊனினை அமுதமாகச் செய்தது. இவரையும்
அமுதம் (மீளா இன்பநிலை) பெறுவித்தது என்ற குறிப்பும்பெறக்
கானவூன் அமுதம் ஆக்கும் சிலையினை - என்று கூறியது காண்க.
தேனலர்
கொன்றையார் - சிவபெருமான். சிலை -
சிலையாகிய மேரு. சிலை - வில் என்க. கடலின் நஞ்சமாக்கிய
மந்தரத்தை மேருவென்றது மலையாகிய சாதி பற்றிய உபசாரம்.
பாரப்
பெருவில் (711) என்றதும் குறிக்க.
பொன்மேருமலையினைச் சிவபெருமான் திரிபுரமெரித்த காலத்தில்
வில்லாகக் கைக்கொண்டனர் என்பது சரிதம். "நாணென்றா
னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம்" என்ற புலவர் பாட்டும் காண்க.
தேனலர்......ஆக்கும்
- திண்ணனார் பிடிக்கும் வில்லின்
சிறப்பு. சிவபெருமான் ஏந்திய வில்லாகிய மேருமலை தேவர்கள்
திருப்பாற்கடல் கடைந்த காலத்துமத்தாக நின்றது. "மத்தாவரை
நிறுவிக்கடல் கடைய" என்ற தேவார முதலியன காண்க.
அதுபோழ்து நஞ்சு எழுந்தது. தேவர்களைக் காக்கும்பொருட்டு
அதனைச் சிவவெருமான் உண்டு கண்டத்தடக்கித் திருநீலகண்டராய்
விளங்கினர். தேவர்கள் நஞ்சினாற் சாவாது காக்கப்பட்டுப் பின்னர்
அமுதமுண்டனர் என்பது வரலாறு. ஆதலின் மேரு கடலினஞ்ச
மாக்கிட என்றார். அந்த மேருவே பின்னர் இங்கு நாயனாரது
கையிற் சேர்ந்தபோது சிவபெருமானுக்கு ஊனினை அமுதமாக்கிக்
கொடுத்தது என்றபடி. சிவபெருமானது திருச்சிலை கடல்கடைந்து
தேவர்களது கரத்தில் நின்றபோது விரும்பத்தக்க நல்ல அமுதத்தை
விடமாக்கியது. அதுவே நாயனார் திருக்கையில் வந்தபோது
விரும்பத்தகாத தீமை பயப்பதாகிய - விலக்கப்பட்ட பொருளாகிய
- ஊனினை அமுதமாக்கி உதவிற்று என்ற தொரு நயமும் காண்க.
இந்த வில் மேரு மலை போலப் பெருத்த தென்பதாம். ஊன்
விலக்கப்பட்ட பொருள் என்பதும் குறிப்பாம். அவர்க்கே
- அந்தச்
சிவபெருமானுக்கே. ஏகாரம் தேற்றத்தோடு பிரிநிலையுமாம்.
ஊனமுதம் என்றதற்கேற்ப, மேல், ஆக்கிட
என்பதற்கு அமுதினை
என்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
காப்புச்
சேர்த்தார் - வில் விழாவினில் முதலிற் செய்யும்
சடங்காவது சிலையினையும் அதனைப்பயிலும் மாணவரையும்
காப்பிடுதலாம், வரும்பாட்டில் திண்ணனார் கையிற் காப்பணிதல்
கூறுவது காண்க. இங்கு இவ்விரண்டுகாப்பும் ஒரே புலி நரம்பினால்
அமைத்தமரபும் காப்புச் செய்தல் பற்றி முன் உரைத்தனவுங்
காண்க. 32
|