682.
|
சிலையினைக்
காப்புக் கட்டுந் திண்புலி நரம்பிற்
செய்த
நலமிகு காப்பு நன்னா ணாகனார் பயந்த நாகர்
குலம்விளங் கரிய குன்றின் கோலமுன் கையிற்
சேர்த்தி
மலையுறை மாக்க ளெல்லாம் வாழ்த்தெடுத்
தியம்பினார்கள். 33 |
(இ-ள்.)
வெளிப்படை. சிலையைக்காப்புக் கட்டிய அந்த
வலிய புலி நரம்பினாற் செய்யப்பட்ட நலமிகும் காப்பினை
நல்லவேளையிலே, நாகனார் பெற்ற மலையர்களாகிய வேடர் குலம்
விளங்க அவதரித்த அரிய மலைபோன்ற திண்ணனாரின் அழகிய
முன் கையிலே கட்டி, மலைவாசிகளாகிய அந்த வேடமாக்கள்
எல்லாரும் மரபுக்குரிய வாழ்த்துக்களை எடுத்துச் சொல்லி
வாழ்த்தினார்கள்.
(வி-ரை.)
சிலையினை - நலமிகு காப்பு - சிலைக்குக்
காப்பு எந்தப்புலியின் நரம்பினால் அமைத்தனரோ அதே புலியின்
நரம்பினால் திண்ணனாருக்கும் காப்புக் கட்டினார்கள் என்பதாம்.
இது அவர் நாட்டு மரபு. சிலைக்கும் புலிநரம்பினாலமைந்த காப்புச்
சேர்த்தனர் என்பது இதனாற் பெறப்பட்டது
நலமிகு
காப்பு - நலமிகும் என்றது பிற்சரிதவிளைவு பற்றிய
குறிப்பு. 704-705 முதலியவை காண்க.
நாகனார்
- பெற்றியாற் றவமுன் செய்தான் (657) என்றபடி
இவரை மகனாராகப் பெறச் செய்த இவனது உயர்தவம்பற்றி ஆர்
விகுதிதந்து சிறப்பித்தார். காப்புச் சேர்க்கும்போது வேடர்கள் தம்
தலைவன்பால் அமைந்துகொண்ட வரம்பி னுயர்வு குறித்த பன்மை
யென்றலுமாம்.
நாக
குலம் - வேடர் மரபு. நாகம் - மலை. "மலையர்
குலம்" (702), "குலம் விளங்க" (662) பார்க்க.
முன்கை
- முன் கையிற் காப்புக்கட்டும் மரபு குறித்தது.
நல்நாள்
- நன்னாளோடு நல்வேளையும் பார்த்து
நற்செயல்களும் சிறப்புக்களும் தொடங்கும் மரபு குறிஞ்சிநில
மக்களாகிய பழைய வேடர்களுள்ளும் நிலவியது. வேடர்களுள்
கதிரவன் உச்சிசேரும் நேரம் நல்வேளையாகக் கருதப்பட்டது
காணலாம். 685 முதலியன காண்க.
மலை
உறைமாக்கள் - மலை வாழ்நராகிய தலைவர்களும்
வேடர்களும் ஆகியோர் (678-679) மக்கள் என்னாது மாக்கள்
என்றது, இவர்கள் ஆறு அறிவுடைய மக்களுக்குரிய
அறிவிச்சைசெயல்களின் விளக்க மிலாது, 654-ம் பாட்டிற் கூறியபடி,
கொல் - எறி - குத்து என்ற சொற்களானறியப்படும் மலைவாழும்
கொடிய விலங்கு வாழ்க்கையே வாழ்வாராவர் என்ற குறிப்புப்பற்றி.
அன்றியும் இவர்கள் வாழ்த்தியபடி உலகநிலைத் தாழ்வுக்குறியின்
வாராது இவ்வில்வித்தை உயர்ந்த தெய்வக் குறியின் முற்றியதாதலின்
இவ்வேடர்களது அறிவுக்குறைவுகாட்ட மாக்கள் என்றார்
என்பதுமாம். இராமன் முடிசூட்டுதற்கு நாள்வைத்த கணிதநூல்
வல்லோரை அந்நாளே அவன் முடிதுறந்து காடு செல்ல அமைந்த
பின்விளைவு நோக்கிக் "கணித மாக்கள்"
என்ற கம்பர்பாட்டும்
காண்க.
வாழ்த்து
எடுத்து இயம்பினார்கள் - தமது மரபுக்கும்
வழக்குக்கும் உரிய பல வாழ்த்துச் சொற்களை உரத்த ஓசையிற்
கூறினார்கள். 33
|