683.
ஐவன வடிசில், வெவ்வே றமைந்தன புற்பாற்
                               சொன்றி;
மொய்வரைத் தினைமென் சோறு, மூங்கில்வன்
                        பதங்கண், மற்றுங்
கைவினை யெயின ராக்கிக் கலந்தவூன் கிழங்கு
                               துன்றச்
செய்வரை யுயர்ப்ப வெங்குங் கலந்தனர் சினவில்
                                 வேடர்.
34

     (இ-ள்.) வெளிப்படை. மலைநெற் சோறும், வெவ்வேறு
வகையான புல்லரிசிச் சோறும், அடர்ந்த மலைவிளைவாகிய
தினையின் மெல்லிய சோறும், மூங்கிலரிசியின் வலிய சோறுகளும்,
சமைத்தற்றொழிலிற் கைவல்லவர்களாகிய வேடர்கள் சமைத்து
அவற்றோடு கலந்த ஊனும் கிழங்குகளும் சேரச் செய்குன்றைப்
போலக் குவிக்க, எவ்விடத்தும் கோபமிக்க வில் வேடர்கள்
உண்ணக் கலந்து கொண்டார்கள்.

     (வி-ரை.) அடிசில் - சொன்றி - சோறு - பதங்கள் -
இவை சோறு என்ற ஒரு பொருள்குறிக்கும் பலமொழிகள். பலவகை
அரிசிகளாலாக்கும் வெவ்வேறு பலவகைச் சோறுகளைக்குறிக்க
வெவ்வேறு மொழிகளாற் கூறினார். பொருட்பின் வருநிலை.

     ஐவன அடிசில் - தண்ணீர் பாய்வதின்றி
மழையினுதவிகொண்டே மலையிற் புன்செய் விளைவுபோல
விளைவதோர் நெல்வகை. இது குன்றவரது பெரும்பான்மையான
உணவுப் பொருளாதலின் இங்கு முதலில் வைத்துக் கூறியது மன்றிப்
"பாறை முன்றில் ஐவன முணங்குமெங்கும்" (652) எனத்
தொடக்கத்திற் கூறியதும் காண்க.

     வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி -
வெவ்வேறுவகைப் புற்களின் அரிசியும் அவற்றால் வெவ்வேறு
வகையில் அடப்பட்ட சோற்று வகையும் குறித்தார். சொன்றி -
சோறு. மொய்வரைத் தினைமென் சோறு - இது மலைநிலத்துக்குச்
சிறப்பாயுரியதாய் மிகுதியாக விளையும் அந்நிலக் கருப்பொருள்
ஆதலின் இவ்வாறு அடைமொழி தந்து சிறப்பித்தார். ஐவனத்தை
அடுத்துத் தினையும் குறிஞ்சி நிலத்தார்க்குரிய பெரும்பான்மை
உணவுப்பொருளாம். மென்மை - இச்சோற்றின் தன்மை குறித்தது.
இவ்வாறே மூங்கில் வன் பதங்கள் என்றதும் காண்க. பதங்கள் -
பன்மை இவ்வகையுட் பலவகைச் சோறும், வன்மை - மூங்கில்நெற்
சோற்றின் வலிமையும் குறித்தன. மற்றும் - இவ்வகையான
வேறுவகை உணவும்.

     கைவினை எயினர் - வேடர்களுள்ளே சோறாக்குதலிற்
கைவல்லவர்.

     கலந்த ஊன் கிழங்கு துன்ற - வெந்த சோற்றுடன் வெந்த
ஊனும் கிழங்கும் பதத்திற் கலந்து உண்ணும் வழங்குக் குறித்தது.
துன்ற - மிகச் சேர. துன்ற - ஆக்கி - உயர்ப்ப - எனக் கூட்டுக.

     செய் வரை உயர்ப்ப - செய்குன்று போலக் குவிக்க. உவம
உருபுதொக்கது. செய்வரை - மலைபோலச் செய்த கட்டுமலை.

     சின வில் வேடர் - வேடர்களின் சினம்
அவர்களதுவில்லின்மே லேற்றப்பட்டது. சின வேடர் - வில் வேடர்
என்று கூட்டி உரைத்தலுமாம். சினம் - அவரது இயல்புக்குணம்.

     கலந்தனர் - உண்ணுதற்குக் கூடினர். உண்ணும் இயல்பு
மேல்வரும் பாட்டுக்களிற் கூறுவார். கிழங்கு கூட - என்பதும்
பாடம். 34