684.
செந்தினை யிடியுந் தேனு மருந்துவார்; தேனிற்
                                 றோய்த்து
வெந்தவூ னயில்வார்; வேரி விளங்கனிக் கவளங்                               கொள்வார்;
நந்திய வீய லுண்டி நசையொடு மிசைவார்;
                              வெவ்வே
றந்தமி லுணவின் மேலோ ராயின ரளவி லார்கள்.
35

     (இ-ள்.) வெளிப்படை. செந்தினை மாவும் தேனும் கூட்டி
உண்பார்களும், வெந்த இறைச்சியைத் தேனிலே தோய்த்து
உண்பவர்களும், விளாம்பழத்தைத் தேன்கலந்து பிசைந்து
கவளமாக்கி உட்கொள்வார்களும்; இறந்த ஈசல் உண்டியை
ஆசையொடும் மிசைவார்களுமாக இவ்வாறு வேறு வேறாகிய
அளவில்லாத பலவுணவுகளிலும் மேலவர்களாக ஆயினர்
அளவில்லாத வேடர்கள்.

     (வி-ரை.) செந்தினை - செந்நெல் என்பதுபோலத் தினையின்
உயர்ந்த ஒரு வகை. இடி - மா. இடி - இடிக்கப்பட்டது.
செயப்படுபொருள் விகுதி குறைந்து நின்றது.

     தேன் - அறுசுவைகளில் இனிப்புத் தரும் இயற்கைப்
பண்டம். இது குறிஞ்சிக் கருப்பொருள்களில் ஒன்றாய் - மலைகளில்
- மிகுதிபெறக் கிடைப்பது. உடல் நலத்திற்கு மிகவும் அடுத்தது.
சுவையும் மணமும் குணமும் ஒருங்கே உதவும் உணவுப்பொருள்
இதுபோன்றது பிறிதில்லை. இக்காரணங்கள் பற்றியே கானவர்
இதனைத் தமதுணவில் மிகுதியும் பயன்படுத்தினார் என்று ஆசிரியர்
இப்பாட்டில் மூவகையானுங் குறித்தது காண்க.
இவ்வுணவுவகைகளுக்குள்ளே வெந்தவூனைத் தேனிற்றோய்த்து
உண்பது இவர்க்குள் உயர்ந்த உணவாகக் கொண்டனர் போலும்.
இது "பொச்சையில் நறவு மூனின் புழுக்கலு முணவு கொள்ளும்"
(656) எனத் தொடக்கத்திற் றேற்றம்பெற எடுத்துக்
காட்டியதனாலறியலாம். இதுபற்றியே நாயனார் காளத்தியடி
களார்க்குத் தம்மிச்சைப் படி தாமறிந்த வகையில் உயர்ந்த
அமுதமைப்பார் "நல்லபத முறவெந்து நாவின்க ணிடுமிறைச்சி
கல்லையினிற்படைத்துத் தேன்பிழிந்து கலந்ததுகொண்டு" (797)
"தேனுமுடன் கலந்ததிது தித்திக்கு மெனமொழிந்து" (799) ஊட்டினார்
எனப் பின்னர்க் காண்கின்றோம். "பிறந்தது, தேனழித் தூனுண்
கானவர் குலத்தே" என்ற நக்கீரர் - திருக்கண்ணப்பதேவர்
திருமறமுங் காண்க. இந்நாளினும் உலக உயர்
நிலையிலுள்ளோர்தேன்றோய்ந்த பலவகை உணவு உட்கொள்ளும்
திறமும் காண்க.

     வேரி விளங்கனிக் கவளம் - விளா குறிஞ்சிக்
கருப்பொருளாம். இதனையும் முன்னரே "வன்றிரள் வளவின்கோட்டு"
(652) என்று குறித்தது காண்க.

     பேரூணாகிய சோற்று வகைகளை அடுக்கித் தனிப்பட
முன்பாட்டிற்கூறி, அவற்றிற்கிடையிடை நுகரும் சிற்றூணாகிய
தினைமாவும் தேனும் கலந்த உணவை "அருந்துவார்" என அடுத்து
வைத்து, இன்னும் அருகியதாய் உணவுச் சுவைதர அதற்கிடை
நுகரும் இடையூண்வகையாகிய தேன்றோய்த்த வெந்தவூனை
அதற்கடுத்துக் கூறிய சுவையுங் காண்க. சிற்றூண் எனக் குறிப்போர்
பலகாரம் என இந்நாளில் வழங்கும் உண்மையிற்
பேரூண்வகைகளைப் போலல்லாமல், இவ்வேடர்கள் உண்மைப்
பலகாரமாகிய (பலம் - பழம் - பழத்தினாலாகிய ஆகாரம்) வேரி
விளங்கனிக்கவளம் கொண்டதுங் காண்க. இடியுந் தேனும் பிசைந்து
சேர்த்து உண்பதும், வெந்த வூன்றுண்டங்கள் தனித்தனி தேனிற்
றோய்த்து உண்பதும், தேன் கலந்த விளங்கனியை உருட்டிக்
கவளமாக உண்பதும் என்ற உண்ணும்வகை காட்டிய திறமுங்
காண்க.

     நந்திய ஈயல் உண்டி - பெருந்திரளாகச் சேர்த்துக் கூட்டிய
ஈயல்களைச் சுண்டல்போலப் பக்குவமாக்கி உண்ணுதல் குறிஞ்சிநில
மாக்களின் உணவுவகைகளில் ஒன்று. "புலபுலெனக் கலகலெனப்
புற்றீசல் போல" என்றுவமித்தவாறு ஈசல்கள் புற்றினின்றும்
பெருந்திரளாய் வந்து சிறிது போதில் உயிர்துறக்கும்; அவை
கூடையில் வாரிச் செல்லும் அளவிற் பெறக்கூடும். அவை கிளம்பும்
புற்றுவாய் முதலிய இடத்தில் ஒருவகை மறைப்ப - விளக்கு முதலிய
அமைப்புகளால் அவற்றை உண்டாகுமிடத்தினின்றும் திரளாய்
வெளிவரச் செய்வதும் தாம். என்றலுமாம். வைத்த கொள்கலத்திற்குள்வந்து வீழச் செய்வதும் குன்றவர்க்குக் கைவந்த
பழக்கமாம். "புற்றிலே கரடி. வாயை வைத்தாற்போல் உறிஞ்சுதல்"
என்பது பழமொழியாய் வழங்குவதாயிற்று. நந்திய - எனைப்
பிராணிகளின் இறைச்சிபோலல்லாமல் இவை தாமாக வெளிவந்து
வீழ்ந்து பிறராற் கொல்லப்படாது தாமே இயல்பின் இறந்துபடுவன
ஆதலின் நந்திய என்றார். நந்துதல் - குறைதல் - இறத்தல்.
மிகுந்த என்றுரைப்பாரு முண்டு. நசையொடு மீசைவார் என்றது
முன் கூறிய பிற பெரும் உணவுகளின் பின்னர் இதன் அமைப்பும்,
சுவையும், தொடர்ந்து சிறிது சிறிதாகக் கறித்துண்ணும் பெற்றியும்
முதலிய பல காரணங்களால் ஆசையோடும் வேடர்கள்
உட்கொள்ளும் இயல்பு குறித்தது. இது அவர்களது உணவில்
பெரும்பாலும் இன்றியமையாப்பகுதி என்பது "மென்றசையும்
ஈயலொடு நறவும்" (698) எனத்தேவராட்டி, நாகன் தனக்கு அமைத்த
திட்டப்படியின் முறையைப் பற்றிக் கூறுமிடத்துக் காணப்படும்.

     இவ்விரண்டு பாட்டுக்களானும் இவர்களது உணாவகைகள்,
உண்ணும் வகைகள், உணவின் மரபு, உணவுமுறை, உணவார்வம்
முதலிய வாழ்க்கைத்திறம் பலவும் கண்ணாடியிற் காண்பதுபோல
நாம் காணக்காட்டிய ஆசிரியர் திறங்கண்டு களிக்க.

     வெவ்வேறு அந்தமில் உணவின் மேலோர் - இதனால்
இங்குக் கூறியனவும் பிறவுமாகிய பற்பல வகையும் தொகையும்
குறித்தார். உணவின் மேலோர் - இயல்பாகிய அளவுக்குமேல்
மிக்கஉணவு கொண்டனர். தமது தலைவன் அழைத்து அன்புடன்
அளித்த கொண்டாட்டமாதலின் வயிறாரவும் அதற்குமேலும்
உட்கொண்டனர் என்பதாம். மேன்மை - மிகுதி குறித்தது.
மலையுறை மாக்கள் (682) என்றபடி இவர்கள் மக்கள்
இனத்தவரேயாயினும் உணவினால் மட்டும் மேலோராவதன்றி
உண்மையான உணர்வினால் மேலோராவரல்லர் என்ற குறிப்பும்
பெறக் கூறினார். "அழுக்குடைப் புலன்வழி யிழுக்கத்தி னொழுகி,
வளைவாய்த் தூண்டிலினுள்ளிரை விழுங்கும், பன்மீன்போல"
(பதினோராந்திருமுறை - கோயினான் மணிமாலை - 28) என்று
பட்டினத்தடிகள் இரங்கிக் கூறியருளியபடி, நாவின் சுவைக்
கடிமைப்பட்ட மாக்களை இழுத்தற்குப் பலநூறுவகைக் கேடுதரும்
பகட்டுச் செயற்கை உணவுப்பண்டங்கள் மலிந்து எவ்விடத்தும்
கணக்கிலடங்காது பெருகும் இந்நாளின் உணவு விற்பனைச்
சாலைகளில் மனம்போனபடி உண்டுகளித்து மருத்துவச்
சாலைகளைப் பெருக்கும் நகர நாகரிகப் பேர்பெற்ற மாக்களும்
கேட்டு வாயூறிப் பொறாமைப்படுமாறு குறிஞ்சிநிலப் பழங்குடி
மாக்களின் இயற்கை யுணவு வகைகளைச் சுவைபெறத்
தன்மையணியில் எடுத்துக்காட்டியது ஆசிரியரது தெய்வப்
புலமையாம். உடல்நலக் கேடு விளைக்கும் நமது செயற்கை
உணவுவகை போலல்லாது இவை பலவும் இயற்கை
யுணவாயமைந்தன வென்று வரும்பாட்டில் இயல் வகையுணவு
என்றதும் சிந்திக்க.1

     அந்தமிலுணவின் மேலோர் ஆயினர் என்றதற்குச்
சாவாமருந்தாகிய அமுதத்தை உண்டதேவர்கள் போலாயினர் என்று
அதிசயோத்தி பெற உரைப்பாருமுண்டு. (அந்தம் இல் உணவு -
சாவில்லாமற் செய்யும் அமுதம்.)

     அளவிலார்கள் - மாடுயர் மலைகளினின்றும் போந்த
மறக்குலத் தலைவர்களும் ஏனை வேடர்களும் அருங்குடி
யிருப்பினுள்ளாருமாகிக் கூடிய எண்ணிறந்தவர்களில் பெரும்பாலோர்
உணவின் மேலோராயினர். மேலோர் - மேற்கொண்டவர்கள்
அவ்வாறில்லாது அளவிற் பொருந்த உண்டு விழாவின்
உயர்பகுதியைக் கண்காணித்துச் செலுத்தியோர் சிலரே என்பதாம்.
நமது மணவிழாக்கூட்ட முதலியவற்றிலும் நிகழ்ச்சிகள் இவ்வாறே
இருத்தலும் காண்க. 35


     1எனது நண்பராகிய பெருநிலக் கிழவர் ஒருவர்
இம்மலைச்சர்களின் மணவிழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டுச்
சென்றார். அங்கு இவ்வேழைக் குன்றவாணர்கள் அவர்க்கு உரியபடி
உண்ணத்தக்கதாய் ஈந்த விருந்தின் வகையில் தேன், தினைமா,
செங்கீரை, விதைமா, பலவகைப் பழங்கள், கிழங்கு முதலிய
உணவுகளைப்பற்றி அவர் வியந்து பாராட்டிப் பேசியது இங்கு
நினைவிற்கு வருகின்றது. - பதிப்பாசிரியன்