687.
|
தொண்டக
முரசுங் கொம்புந் துடிகளுந் துளைகொள்
வேயு
மெண்டிசை நிறைந்து விம்ம வெழுந்தபே ரொலியி
னோடுந்
திண்டிறன் மறவ ரார்ப்புச் சேண்விசும் பிடித்துச்
செல்லக்
கொண்டசீர் விழவுபொங்கக் குறிச்சியை வலங்கொண்
டார்கள். 38 |
(இ-ள்.)
வெளிப்படை. தொண்டகச் சிறுபறையும், கொம்பும்,
உடுக்கையும் துளைகொண்டமூங்கில் இயமும் எட்டுத் திக்கிலும்
நிறைந்து எழுந்து ஓசைபட, அவற்றானெழுந்த பேரோசையினோடுங்
கூடித் திண்ணிய வல்லமையுடைய மறவர்களின் ஆரவாரம், நீண்ட
ஆகாய நிறைந்து முழக்கிச் செல்ல, அத்திருவிழாக்கொண்ட சிறப்புப்
பொங்கக் குறிச்சியை வலமாகச் சுற்றினார்கள்.
(வி-ரை.)
இங்குக் கூறப்பட்டன குறிஞ்சிக்குரிய பறை
வகைகள். இவற்றை முன்னர் 654ல் குறித்தது காண்க. அங்குக்
குறித்தவை நித்தியாங்கமும், இங்குக் கூறியவை நைமித்திகாங்கமுமா
மென்பது. "தொண்டகச் சிறுபறைக் குரவையயர" என்ற
திருமுருகாற்றுப்படையும் காண்க. தொண்டகப்பறை குறிஞ்சிக்
கருப்பொருளாம்.
துளைகொள்
வேய் - வேய்ங்குழல். இது பெரும்பான்மை
முல்லைத் திணைக்கு உரியதாயினும், திணை மயக்கத்தானும்
ஆனிரை கவர்தலும் அவ்வாறு கவர்ந்தவற்றை வளர்த்தலும்
குறிஞ்சித்திணையினுள் வருதலானும், அவற்றோடு முல்லைத்
திணைக்கு உரிய குழலும் போதருமாதலானும், சிறுபான்மை
வேய்ங்குழல் குறிஞ்சிக்கு முரியதாம். "வேறுபல் லுருவின் மிக்கு
விரவுமா நிரைகள்" (655) என முன்னர்க் கூறினார். "குழலன்
கோட்டன் குறும்பல் லியத்தன்" என்ற திருமுருகாற்றுப்படையும்
காண்க. ஆயின் இங்குக் குறித்தது கோவலன் வாயின் முல்லையந்
தீங்குழல் போலாது, வெஞ்சொல் வேட்டுவர் வாயினதாய்ப் பேரொலி
செய்வதா யுள்ளதோர் வகையென்பார் ஏனைப்பேரொலி செய்யும்
தொண்டகப்பறை, கொம்பு முதலியவற்றோடு உடன் வைத்ததுமன்றி
"எண்டிசை நிறைந்து விம்ம வெழுந்த பேரொலி" என்றார். பல
இயங்களும் முழக்கி மக்கள் ஆர்த்துக் கூவி விழாச் செய்தல்
இன்றும் மலைநாட்டில் வழங்கும் மரபு.
எண்டிசை
நிறைந்து விம்ம - பேரொலியாதலின் எழுந்து
எல்லாத் திசைகளிலும் பரந்தது. எண்டிசையினின்றும் போந்த
வேடர் இசைத்த பறையொலிமிக்கது என்றதொரு குறிப்புமாம்.
வேடர் திசைதொறு நெருங்கவந்தார்" (676).
திண்
திறல் மறவர் - அசைவிலாத் திறனும் மிகுவலிமையும்
குறித்தது. யானை, புலி, முதலாயின பெருங்கொடு விலங்குகளுடன்
கலந்துவாழும் வாழ்க்கையுடையாராதலின் இவ்வாறு கூறினார்.
சேண்
விசும்பு இடித்து செல்ல - விசும்புசேண் - என்க.
ஆகாயத்தில் நெடுந்தூரம். பேரொலிகளாதலின் இவை நெடுந்தூரம்
சென்று பரவுதலும் எதிரொலி தருதலும்பற்றி இடித்து - செல்ல
என்றார். முன்னர் "ஏறுடை வானந் தன்னிலிடிக்குர லெழிலி யோடு,
மாறுகொண் முழக்கங் காட்டும்" (655) என்றது. நோக்குக. "வண்
பூங்கொடிகள், பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும்" என்ற
திருக்கோவையாரும் நினைவு கூர்க.
விழவு
கொண்ட சீர்பொங்க - என மாற்றுக.
குறிச்சியை
வலங் கொண்டார்கள் - விழாவில் நகர்வலம்
வருதல் எத்திணையிலும் மரபாம். குறிச்சி -
குறிஞ்சி நிலவூர். 38
|