690.
|
பொற்றட
வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன்முன்
செய்த
விற்றொழிற் களத்தி னண்ணி விதிமுறை வணங்கி
மேவு
மற்றைநாட் டொடங்கி நாளு மடற்சிலை யாண்மை
முற்றக்
கற்றன னென்னை யாளுங் கானவர்க் கரிய
சிங்கம்.
41 |
(இ-ள்.)
வெளிப்படை. அழகிய பெரிய மலையின் சாரலில்
விருப்ப மிக்க (விற்றொழிலின்) கடன்களை யெல்லாம் முன்னர்ச்
செய்துவைத்த விற்றொழிற் களத்திலே சேர்ந்து விதிப்படி முறையாக
வணங்கிப் பொருந்திய அன்றைய நாளிலே தொடங்கி,
ஒவ்வொருநாளும் வலியவில்லை ஆளுந்தொழிலினை முற்றுப்
பெறுமாறு முழுவதும் கற்று நிரம்பினர் என்னை ஆளுகின்ற
கானவர்குலத்தில் அரியராய் அவதரித்த சிங்க வேறுபோன்ற
திண்ணார்.
(வி-ரை.)
பொன்தட வரையின் பாங்கர் - இது
விற்றொழில் பயிற்றும் பயிற்சிக் களமிருந்த மலைச்சாரல் குறித்தது.
புரிவுறு
கடன்முன் செய்த - செய்யத் தக்கனவாகிய
கடன்களை முன்னமே செய்து வைத்திருந்த. அவை, தொழிற்
பயிற்சிக் களத்தில் முன்னர்ச் செய்து வைக்கத்தக்க கடவுட்
பராவுதல் முதலிய கடமைகள். வில்லினையும் மாணவகனையும்
காப்பணித்தலும், சிலையைச் சூழ்ந்து ஏழு நாள் குறிச்சியை
வலங்கொள்ளுதலும், விற்பிடிப்பித்தலும், முதலிய கடன்கள்
குறிச்சியிற் செய்யப்படுவன. விற்றொழிற் பயிற்சிக்களம் குறிச்சிக்குப்
புறம்பாய் அடுத்த மலைச்சாரலில் அமைவதாம். சிலைபிடிப்பிக்கு
நன்னாளின்முன்னர் அவ்விடத்திலும் இதுபோலவே செய்கடன்களை
முன்னரே செய்துவைத்தல் மரபு. சிலை பிடிப்பித்த பின்னர்க்
குறிச்சியினின்று மாணவகனை ஆசிரியன் அக்களத்துக்கு அழைத்துச்
சென்று விற்றொழில் பயிற்றுவிக்கத் தொடங்குவான். அச்சிறப்பு
இங்குக் கூறப்பட்டது.
விற்றொழிற்
களம் - விற்றொழில் கற்றற்குரிய களம்.
முற்காலத்தில் கலைபயில் இடங்கள் நகர முதலிய குடியிருப்பு
இடங்களை அடுத்துப் புறம்பே அமைப்பது ஊர் அமைப்பாகும்.
விற்றொழிற் பயிற்சி யிடமாகிய களமும் இவ்வாறே குன்றவர் வாழும்
ஊராகிய குறிச்சிக்குப் புறம்பே அதனை அடுத்த மலைச்சாரலில்
அமைவதாம். இவ்வமைப்பு இக்கலைப் பயிற்சிக்கு
இன்றியமையாததுமாம். என்னை? அம்புகளைக் குறிவைத்து எய்யும்
கலையாதலின் அதற்குரிய அகன்ற வெளியும், மரங்கள் முதலிய
பிறவும் வேண்டப்படும்; தனியிடமல்லாது குடியிருப்புக்கு
அணிமையாயின் அங்கு வாழ்வாருக்கு இப்பயிற்சியால் இடையூறு
நேரும்; இவை முதலிய காரணம் பற்றி விற்றொழிற்களம் பொற்றட
வரையின் பாங்கர் அமைக்கப்பட்ட தென்க. ஊர்ப்புறம்பே
ஒதுகிடைகளும் யாக சாலைகளும் அமைந்த அமைப்பினைச்
சண்டீசநாயனார் புராணம் 3,4,6 திருப்பாட்டுக்களிற் கூறியதும்
காண்க.
விதிமுறை
வணங்கி - வில்லின் தொழிற்கலை பயிலத்
தொடங்கும் மாணவகன் முதலில் வில்லினையும், ஆசிரியனையும்
அதற்குரிய கடவுளையும் வேலன் முதலியவர்களையும்
பெரியோரையும் வணங்குதல் மரபு. அம்மரபாலே வணங்கி.
மேவும்
அற்றை நாள் - வில்விழா முடிவுறுகின்ற
ஏழாநாளாகிய அன்று (688).
நாளும்
- ஒவ்வொருநாளும், கல்விப்பயிற்சி முற்றும்வரை
அதனை நாடோறும் பயிலவேண்டும் என்பது முறை. அடற்சிலை -
சிலைக்கு வலிமையாவது அதனை ஏந்தியோன் எண்ணியாங்கு
வினைமுடிக்கத் தக்கதாகி உதவுதல். உண்ணத் தகாத வற்றையும்
உண்ணத் தக்கதாக ஆக்கும் வலிமை (681) என்ற குறிப்பும்,
முற்பிறப்பில் இவர் அருச்சுனனாகி இருந்தபோது ஏந்திய
விற்சிறப்பின் குறிப்புமாம்.
சிலை
ஆண்மை - வில்லை ஆளுந்தன்மை. ஆண்மை -
வல்லமை என்பாருமுண்டு. அஃதீண்டைக்கேலா தென்க.
முற்றக்
கற்றனன் - முற்ற - நிறைவெய்த. கலையின்
முற்றுதலாவது அதனாலாகிய முடிந்த பயனைத் தருதல். "கற்றதனா
லாய பயனென்கொல் வாலறிவ, னற்றாடொழாஅ ரெனின்" என்பது
திருக்குறள். முற்றக்கற்றதனால் இது இறைவர்க்குப் பகலிற் கானவூ
னமுதமாக்குதற்கும், இரவிற் காவல்புரிவதற்கும் பயன்பட்டதென்பதும்
காண்க. அன்றியும் "கற்பனவும் மினியமையும்....கூத்தாவுன்
குரைகழற்கே, கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே"
(திருவாசகம்) என்றபடி இக்கலை முற்றியதனால் மேலும்
வேண்டப்படாது, இறைவன்பாலிற் "கன்றகல் புனிற்றாப் போல்வர்"
என்று கூறும் நிலையில் விடுவதற்கே அமைந்ததும் காண்க.
என்னை
ஆளும் - இது கவிக்கூற்று. சிலைக்கலை முற்றும்
கற்று நிரம்பிய இவ்விடத்தில் ஆசிரியர் நாயனாருக்கு ஒரு
வணக்கம்செய்து மேற்செல்கின்றார். நாயனாரது சரிதத்தை
உலகச்சார்பு பற்றியதும் சிவச்சார்பு பற்றியதும் என இருபகுதியாகப்
பிரிப்போமாயின் உலகச்சார்பின் பகுதி நிரம்புகின்றநிலை இது. இனி
இது முற்றியபின் நாயனார் வேட்டையிற் புக்குச் சென்றவாறே
சிவச்சார்பு பெறப்போக உள்ள பகுதி தொடங்குகின்றது. "ஐம்புல
வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென" (சிவஞானபோதம் - 8ம்
சூத்திரம்) என்றபடி உண்மையில் வேடர் சேரியில் வளர்கின்ற
மன்னவ குமாரராகிய திண்ணனாரது; அந்தச் சேரியில் வளரும்
வளர்ச்சித்திறங் கூறும் பகுதி இங்கு முற்றுப்பெறுகின்றது. இனித்
"தவத்தினி லுணர்த்த விட்டு....அரன்கழல்செல்" வதாகிய பகுதி
தொடங்குகின்றது என்ற உண்மையுங் காண்க. சிவவழிபாட்டுக்
கிரியைகளுட் புகுமுன் நியாசங்கள் முதலியவற்றாற்
சுத்திசெய்துகொண்டு புகும் ஆகமவிதிபோல இங்குச் சிவச்சார்பு
பெறப்புகும் நாயனார்க்கு வணக்கம்செய்து ஆசிரியர் மேற்பகுதி
தொடங்குகின்றார். இஃது ஆசிரியரது மரபு. "ஒருமணத் திறத்தி
னங்கு நிகழ்ந்தது மொழிவே னுய்ந்தேன்" (173), "மூவாண்டி
னுலகுய்ய நிகழ்ந்ததனை மொழிகின்றேன்" (திருஞான - புரா -
54) முதலியவை காண்க. பின்னரும் "செய்வண்ணத் திறமொழிவேன்
றீவினையின் றிறமொழிவேன்" (790) என்பது காண்க. என்னை
ஆளும் என்றது எமக்குத் தலைவர் என்றபடி.
கானவர்க்கு
அரிய - "அரும்பெறன் மறவர்தாயத்து" (658)
என்றதும் காண்க. வேடர் குலத்துக்குக் கிடைத்தற்கரிய பேறாகக்
கிடைத்தவர் என்பது கருத்து.
சிங்கம்
- சிங்கம் போன்றார். உவமையாகு பெயர். இங்குக்
கரிய சிங்கம் என்று கொண்டு கருமைநிறம்
பற்றிய விசேட உரைக்
குறிப்புக்கள் காண்பாரு முண்டு. அவை பொருந்தாமையறிக.
களத்தை
- என்பதும் பாடம். 41
|