691.
வண்ணவெஞ் சிலையு மற்றப் படைகளு மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல் பொங்கக் கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி யெய்தினா ரெல்லை
                                       யில்லாப்
புண்ணியந் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு
                                   போல்வார்.
42

     (இ-ள்.) வெளிப்படை. எல்லையில்லாத சிவ புண்ணியங்களெல்லாம்
ஒன்று கூடி அவதரித்து மேலுமேலும் வளர்வதன் பொலிவைப்
போன்றுள்ளராகிய திண்ணனார் அழகிய விருப்பந் தரத்தக்க
வில்வித்தையையும், அதனுடன் இனமாகிய ஏனைப்படைகளின்
வித்தைகளையும் நிரம்பக் கற்று, விரிந்த அழகு மேன் மேற் பொங்க,
எல்லாக் கலைகளும் நிரம்பியவாறே நிற்கும் திங்களேபோலப்,
பதினாறுவயது ஆகின்றபருவத்தை யடைந்தனர்.

     (வி-ரை.) வெம் - சிலை - சிலைக்கு முன்னர் உரைத்த
சிறப்புக்களைப்பார்க்க. சிலை, படை என்பன இங்கு அவ்வவற்றின்
பயிற்சி குறித்தன. வெம் - விருப்பந்தரும். "முந்தை யறிவின்
றோடர்ச்சியினான் முகைத்த மலரின் வாசம்போற், சிந்தை மலர
வுடன்மலருஞ் செவ்வி யுணர்வு" (சண்டீசர் புராணம் - 13) என்ற படி
முந்தைத் தொடர்பினால் இவர்க்கு வில்லின் கலையில் விருப்பம் மிக்கது;
அதனை விரைவிற் பயின்று நிரம்பினர் என்பதாம். சிலையை வேறு
பிரித்தோதியதும் இக்கருத்துப்பற்றியே.

     மற்றப் படைகள் - சுரிகை, வாள், வேல் முதலியன. "பயில்வது
வெந்திறற் சிலையொடு வேல்வாண் முதலிய, வந்தமில் படைக்கல
மவையே" - திருக்கண்ணப்ப தேவர் திருமறம் - நக்கீரதேவர் -
பதினோராந் திருமுறை.

     மலரக் கற்றல் - கலைமுழுதும் நிரம்பக் கற்றல்.

     கண்ணகன் சாயல் - இடம் விரிந்த அழகு.

     கலைவளர் திங்களேபோல் - ஏகாரம் பிரிநிலை. திங்கள் கலை
வளர்வதுங் குறைவதுமாயுள்ளது. வளர்ந்த கலைகள் என்றுங் குறையாமல்
வளர்ந்தபடியே நிற்பதொரு திங்கள் உளதாயின் அதுபோல. "கண்ணிறை
கதிரே கலைவளர் மதியே" (93), "வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர்
மதிக்கொழுந்தை" (728) என்ற திருஞான சம்பந்தமூர்த்திகள் புராணத்
திருவாக்குக்களுங் காண்க.

     எண்ணிரண் டாண்டின் செவ்வி - பதினாறுவயதாகிய பருவம்.
இதனை மணப்பருவம் - காளைப்பருவம் எனப் பலவாறும் விதந்து
பேசுவர். "புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும் புகலி வேந்தர்"
(திருஞான - புரா - 1109) என்றது காண்க. புகலிவேந்தரைப் போன்று
நாயனாரும் இப் பதினாறாண்டின் பருவத்திலே இறைவனை அடைந்து
மீளா நெறிபெற்றது குறிக்கற்பாலதாம். செவ்வி - பருவம். முழுமதிக்குக்
கலைகள் பதினாறாம். மார்க்கண்டேயர் சரிதமுங் காண்க.

     எல்லையில்லாப் புண்ணியம் - அளவில்லாத - குறைவுபடாத -
என்றும் அழியாத சிவபுண்ணியம். புண்ணியம் என்பது இங்குச்
சிவபுண்ணியங் குறித்தது. ஏனைப் பசு புண்ணியம் என்று
கூறப்படுவனவெல்லாம், இவைபோலன்றி அழியும் படியான ஏக தேச
இன்பங்களைக் கொடுத்து மீளப் பிறவிக்கு ஏதுவாவன. "புண்ணியப்
பொருளாயுள்ள பொருவில்சீ ருருவி னானை" (666)என முன்னர்ச்
சுட்டியதுங் காண்க. "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன்" முதலிய
திருவாக்குக்களுங் காண்க.

     புண்ணியந் திரண்டு - என்பதும் பாடம். 42