692.
|
இவ்வண்ணந்
திண்ணனார் நிரம்பு நாளி
லிருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய
மைவண்ண வரைநெடுந்தோ ணாகன் றானு
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலங்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா
னானான். 43 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வண்ணமாகத் திண்ணனார்
பருவம் நிரம்பிய காலத்தில் வலியிற் பெரிய குறவர்கள் வாழும்
பெருமை வாய்ந்த சீறுர்க்குத் தலைவனாகிய கரிய மலைபோன்ற
பெருந்தோள்களுடைய நாகனும், மலைகளெங்கும் வனங்களெங்கும்
அளவில்லாத காலங்கள் கையிலேந்திய அழகியவில்லினாலே
வேட்டையாடியும் பகைக் கூட்டத்தார்களையுடைய ஆநிரைகள்
பலவற்றைக் கவர்ந்தும் தனக்குரிய கானங்களைக் காத்தும்
உடம்பின்கண் தளர்ச்சிதரும் மூப்புப் பருவத்தினை அடைந்து
விற்றொழிலின் பெருமுயச்சியில் குறைவுற்றவனானான்.
(வி-ரை.)
இவ்வண்ணம் - நிரம்பும் நாளில் - மேலே
662 முதல் 691 வரை திண்ணனார் அவதரித்துப் பதினாறாண்டு
வளர்ந்த சரிதங் கூறினார். இங்கு அதனை இவ்வண்ண மென்று
சுட்டியவாறு. இந்தப் பதினாறாண்டினும் நிகழ்ந்த நாகனுடைய
வரலாறு இவ்வொரு பாட்டிற் கூறிச்செல்கின்ற சரிதக் கவிச் சுவை
காண்க. இப்பாட்டு முதல் 705வரை பதின்மூன்று திருப்பாட்டுக்களில்
கதைப் போக்காக உரைநடை போன்று சரித நிகழ்ச்சி கூறிப்
போகும் உயர்ந்த கவி நடைச் சிறப்பும் யாப்பமைதியும்
குறிக்கொள்க. இவ்வாறு இடத்துக்கேற்றபடி மாற்றி யாப்பமைதியும்
செய்யுணடையும் மேற்கொண்ட சிறந்த காப்பிய இலக்கிய அமைதி
நமது ஆசிரியர்க்கேயுரிய சிறப்புகளில் ஒன்று. திருஞானசம்பந்த
சுவாமிகள் புராணம் 473 முதல் 483 வரை உள்ள பகுதியும் பிறவும்
காண்க. இதனைக் கதை சொல்லும் போக்குச் சுவை
(Narration)
என்பர் நவீனர்.
இருங்குறவர்
- மறக்குலமாதலின் இவ்வாறு குறித்தார். இவர்
வாழ்க்கைத் திறம்பற்றி முன் உரைத்தவை யெல்லாம் நினைவு கூர்க.
பெருங்
குறிச்சி - கானவர்களின் பெரிய குடிவாழ்க்கைகுரிய
இடங்கள் ஊர்கள் சீறூர்களேயாயினும் இவ்வாறு பல ஊர்களைக்
கொண்ட பெரிய மலை எல்லையாதலின் பெருங் குறிச்சி
என்றார்.
மைவண்ணவரை
(நெடுந் தோள்) - கரியமலை. "கருவரை
காளமேகமேந்திய தென்ன" (664) என்றது காண்க. வரை - சலியாது
தாங்கும் தன்மையும் நெடுமையும் பெருமையும் குறித்தது. "அளக்க
லாகா வளவும் பொருளும், துளக்கலாகா நிலையுந் தோற்றமும்,
வறப்பினும் வளந்தரும் வலிமையு மலைக்கே" (நன்னூல் - பாயிரம் -
28) என்ற இலக்கணமுங் காண்க.
வரம்பில்
காலம் - திண்ணணாரைப் பெற்றெடுத்த பின்
அவர் இப்பருவம் எய்தும் வரை அனேக முறைகள்.
மலையெங்கும்
வனமெங்கும் - தன்னுடைய
ஆட்சிக்குட்பட்ட நிலங்களேயன்றி அடுத்துள்ள மலைகளும்
காடுகளும். இவ்வாறு பிறபுலங்களிற் புக்கு வேட்டையாடுதலும்
ஆநிரை கவர்தலும் தகுமோ? எனின், அஃதவர்
திணையொழுக்கமென்க. "இம்மறக்குடியில் தாயம்பற்றிவருகின்ற
ஆறெறி, சூறை, ஆகோள் முதலியவற்றால் விளையும் வளங்குன்றி,
அறக்குடிகளைப் போலச் சினங்குறைந்து செருக்கடங்கி விட்டார்கள்"
என்று அடியார்க்கு நல்லார், "மறக்குடித் தாயத்து வழிவளஞ்
சுரவாதறக்குடி போலவிந்தடங்கின ரெயினரும்" என்ற (12. வேட்டுவரி
- 14 - 15) சிலப்பதிகாரத்தின்கீழ் உரைத்தவை காண்க. "தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து" "தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து
கொண்ட திண்சிலையின் வளம்" (704) என்றவை காண்க. அன்றியும்,
அயற்புலங்களில் மலைச்சாரல்களில் உள்ள மிருகங்கள் மீதூர்ந்து
வந்து இவர்களது புனங்களையும் பிறவற்றையும் அழிவு செய்யாத
வண்ணம் அவற்றை அங்கங்குச் சென்று வேட்டையாடுதலும்
இயல்பாம். இதுபற்றி அவர்கள் "மலைத்தடஞ்
சாரற்புனங்களெங்கும்...மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் கான்" என
வரும் பாட்டிற் கூறியதும், "திங்கண் முறை வேட்டைவினை
தாழ்த்த" தென்று வேட்டஞ் செய்தற்கு உரிய பருவங்களைக்
குறித்ததும் காண்க.
தெவ்வர்
கணம் - பகைவர் கூட்டம். நிரை - ஆநிரைகள்.
ஆகோள் குன்றவர் தொழில்களில் ஒன்று.
கானம்
காத்து - மேற்சொல்லிய வேட்டமும் நிரைகவர்தலும்
கானங்காக்குந் தொழிற்குரியவகைகள்.
மெய்வண்ணம்
தளர்முப்பின் பருவம் - மெய்தளர்ந்த
மிக்க மூப்புப்பருவம். "இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே, யரியதென்
றெவருஞ் சொல்ல" (659) என்றாராதலின் அதுபோழ்து நாகனுக்கு
அறுபதுக்கு மேலாயின ஆண்டுகள் சென்றிருக்கக்கூடு மெனவும்,
அதன்பின் இதுபோழ்து பதினாறாண்டுகள் சென்றன வாதலின்
இங்கு அவனுக்கு எண்பது ஆண்டு வரை சென்றிருக்குமெனவும்
ஊகிக்கக் கிடத்தலான் இவ்வாறு கூறினார். திண்ணனார் அவதரித்த
பின்னரும் அவன் பலகாலம் வேட்டையாடியும் நிரைகவர்ந்தும்
கானங்காத்தும் வந்தானெனப்படுதலால் மிக மூத்த வயதாகும் வரை
அவன் உறுதிபெற்ற உடல்வன்மையுடன் வாழ்ந்தான் என அறியலாம்.
இற்றைநாள் மக்கள் இளவயதில் மூப்படைந்து ஒன்றுக்கு முதலாவது
மருத்துச்சாலைகளை நிரப்பியுழலும் அல்லல்வாழ்ககையை இதனுடன்
ஒப்பிடுக. மூப்புப்பருவத்தி னியல்புகளைக் "கனைகொ ளிருமல்
சூலைநோய் கம்பதாளி குன்மமும், இனையபலவு மூப்பினோ டெய்தி
வந்து நலியாமுன்" (ஆளுடைய பிள்ளையார் - பண் நட்டராகம் -
திருவிராகம் - திருக்கோவல் வீரட்டம்), "தனித்தொரு தண்டூன்றி
மெய்தளரா முன்னம்" (தனித்திருத்தாண்டகம்), "குயிலொத்
திருள்குஞ்சி கொக்கொத் திருமல், பயிலப் புகாமுன்னம்"
(பதினோராந்திருமுறை - க்ஷேத்திர திருவெண்பா 12) என்பனவாதி
திருவாக்குக்களிற் காண்க. உடல்வலி குறைந்தகாலத்து உடல்
முயற்சியாற் செய்யப்படும் வில் முதலிய தொழில்கள் பயன்படா
என்க. வண்ணம் - அழகு எனக் கொண்டு, மெய்யினது அழகு
கெடும்படியான மூப்புப் பருவம் என்பாருமுண்டு.
வில்
உழவு - உழவு தொழிற் பெயர். "வில்லே ருழவர்" -
குறள்.
மெலிவதனான்
- என்பதும் பாடம். 43 |