693.
அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கு
     மடலேனம் புலிகரடி கடமை யாமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
     மிருகங்கண் மிகநெருங்கி மீதூர் காலைத்
"திங்கண்முறை வேட்டைவினை தாழ்த்த" தென்று
     சிலைவேடர் தாமெல்லாந் திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
     தண்டெரிய னாகன்பாற் சார்ந்து சொன்னார். 44

     (இ-ள்.) வெளிப்படை. அழகிய இடங்களையுடைய
மலைகளின் பெருஞ்சாரல்களும் புனங்களுமாகிய எவ்விடங்களிலும்
வலிய காட்டுப்பன்றியும், புலி, கரடி, கடமை, காட்டுப்பசு, மரை,
மான் முதலாகிய மிருகங்களும் மிகவும் நெருங்கி மேற்சென்று
அழிக்கத் தொடங்கியபோது, "திங்கள்முறை வேட்டைச் செயல்கள்
நிகழாது தாழ்த்தமையாலே இக்கொடுமைகள் நேர்ந்தன" என்று
வில்லேந்திய வேடர்கள் எல்லாரும் ஒருங்கு கூடிச்சென்று
தங்கள்குலத் தலைவனாயுள்ள குளிர்ந்த மாலைசூடிய நாகனிடத்துச்
சேர்ந்து சொன்னார்கள்.

     (வி-ரை.) மலைத் தடஞ் சாரல் அங்கண் புனங்கள் என
மாற்றியுரைத்தலுமொன்று. தடஞ் சாரல் - செறிந்து பரந்த சாரல்கள்.
சாரற் புனங்கள் - மலைச் சாரலில் குறவர் வாழிடங்களும்
அவர்களது தினைப்புன முதலியனவும்.

     அடல் ஏனம்.....முதலாயுள்ள - இவை அச்சாரல்களிலும்
அயற்புலங்களிலும் வாழ்ந்து இவர்களது புனங்களில் மீதூர்ந்து
வந்து பயிர்களையும் இவர்களது ஆநிரை முதலியபிராணிகளையும்
அழிப்பன. விலங்குகளை, இங்கு இவர்களுக்குக் கொடுமையும்
அழிவு செய்யும் சத்தியும் பற்றிய வரிசையாற் கூறினார். எனம்
புலியினும் சிறிதாயினும் பயிர்களை அழிக்கும் செயலிற் பெரிது.
அன்றியும் இச்சரித வேட்டையிற்பன்றி முதன்மைபெற்று நாயனாரைத்
திருக்காளத்திமலைகாணமுன் ஓடி அழைத்துச்சென்றது.
இச்சிறப்புக்கள்பற்றி இதனை முதலில் வைத்ததோடு அடல் என்ற
அடைமொழியும் தந்து சிறப்பித்தார். ஆளுடைய பிள்ளையார்
தேவாரத்தினும் ஏனத் திரளோடு என ஓடு உருபு தந்து வேறு
பிரித்து முதலில் வைத்ததும் காண்க.

     கடமை - ஒருவகைக் நாட்டுப் பசு. கடமையாகிய ஆமா
என்பாருமுண்டு. ஆமா - காட்டுப் பசு.

     வெங்கண்மரை - வெவ்விய கோபக்கண்ணுடைய மரைமான்.
மரை - மானின் ஒருவகை. கலை - மானின் மற்றொருவகை. இவை
மெல்லியவாய் நீண்டு கிளைத்த கொம்புகளையுடையன. மான் -
வேறுமான்வகை. கலை - ஆண் என்றும், மான் - பெண்மான்
என்றும் கூறுவாருமுளர். இங்குக் கூறியவை பலவகை
மானினங்களைக் குறிப்பன என்பது 726 - 728-ம்
பாட்டுக்களானுமறிக.

     மிகநெருங்கி மீதூர்தலாவது மிருகங்கள் தாந்தாம் வாழும்
நெருங்கிய காட்டினிடங்களை விட்டு வெளிப்போந்து குன்றவர்
வாழும் குறிச்சிகளிலும் அவரது புனங்களிலும் புக்கு உயிர்களுக்கும்
பயிர்களுக்கும் தீங்கு செய்தல்.

     திங்கள் முறை வேட்டை - குறித்த மாதங்களிலேனும்
இத்தனை மாதத்துக்கொரு முறையென்ற முறைபற்றியேனும்
காடுவளைத்து வேட்டையாடுதல். மாதந்தோறும் என்றுரைப்பாரு
முண்டு. அது பொருந்தாதென்க.

     தண்தெரியல் நாகன் - தெரியல் - ஈண்டு வேடர்க்குரிய
மாலை.

     கலைகளோடு முதலா - பலநெருங்கி - சினவேடர் -
என்பனவும் பாடங்கள். 44