694.
|
சொன்னவுரை
கேட்டலுமே நாகன் றானுஞ்
சூழ்ந்துவரு தன்மூப்பின் றொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் "மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லே;
னென்மகனை யுங்களுக்கு நாத னாக
வெல்லீருங் கைக்கொண்மின்!" னென்ற போதின்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோ
னடிவணங்கி யிம்மாற்ற மறைகின் றார்கள் 45
|
694. (இ-ள்.)
வெளிப்படை. வேடர்கள் சொன்ன சொல்லைக்
கேட்டலுமே நாகனும் தன்னைச் சூழ்ந்துகொண்டு வருகின்ற மூப்பின்
றொடர்ச்சியை நோக்கி முன்னின்ற அவர்கட்குச் சொல்வானாகி,
"மூப்புக்காரணமாக முன்புபோல வேட்டையில் முயலும்
வலிமையில்லேன். ஆதலால், என்மகனை உங்களுக்குத் தலைவனாக
நீங்கள் எல்லீரும் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று உரைத்தபோதில்,
அவர்கள் முதலில் இரங்கிப், பின்னர் மகிழ்ந்து, தமது தலைவனை
வணங்கிப் பின்வரும் வார்த்தைகளைச் சொல்வார்களாய்- 45
694.
(வி-ரை.) சொன்ன
உரை - சிலைவேடர்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்றுசொல்லிய முறையீடு.
தன்
சூழ்ந்து வரும் என மாற்றுக. தன் சத்திகளை
யெல்லாம் ஒடுக்கித் தன்னைச் சுற்றிக்கொண்டு வருகின்ற,
மாலையில் இருள் கணந்தோறும் வந்து சூழ்ந்து கண்ணை
மறைப்பது போலவும், தனது நூல் வலயத்துட்பட்ட பிராணியினைச்
சிலந்தி வாய் நூலாற் சுற்றிச் சுற்றிப் பிணிப்பது போலவும்
கணந்தோறும் சூழ்ந்து உடற் சத்தியை ஒடுக்கும் என்பார்
சூழ்ந்துவரும்....தொடர்வு என்றார். தொடர்வு
- பிணிப்பு.
முப்பினாலே
முயலகில்லேன் - மூப்பினால் வரும்
ஏதங்கள் முன் பாட்டிலுரைக்கப்பட்டன. கில் - ஆற்றலுணர்த்தும்
இடைச்சொல். "கேட்கவுங்கில்லேனே" - திருவாசகம் -
திருச்சதகம் - 33.
நாதனாக
- அரசனாக, தலைவனாக.
கைக்கொண்மின்
- ஏற்று அவன்கீழ் அமைந்து நடந்து
கொள்ளுங்கள். வழிவழி அரசனாயினும் குடிகளின்
அங்கீகாரத்தின்மேல் அரசனாந் தலைமைத் தன்மை நிலை
பெறுவதாம் என்ற உண்மையினை இங்குக் காண்க. கொண்மின்
என்றலே அமையுமாயினும் கைக்கொண்மின் என்றார்.
கை
என்பது கைகூடும் என்புழிப்போல உபசர்க்கமாய் உறுதிப்
பொருள் தந்து நிற்பதோர் இடைச்சொல்.
இரங்கிப்
பின் மகிழ்ந்து - இஃது நாகனது உரை
கேட்டவுடன் வேடர்களின் மன நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக
உணர்த்துவதாம். முதலில் தமது தலைவனது மூப்பு நிலையினையும்
அதுகாரணமாக அவன் தமது தலைவனாந் தன்மையினின்று
நீக்குவதனையும் பற்றி இரக்கம் வந்தது; பின்னர் அவன் மகனைத்
தமக்கு மேன்மையுடைய தலைவனாகப் பெறும் பேறு பற்றி மகிழ்ச்சி
வந்தது என்க.
அடிவணங்கி
- தலைவனிடம் விசேட அறிக்கை செய்யும்
முறை.
முயல்கிலேனான்
- என்பதும் பாடம். 45
|