696.
சிலைமறவ ருரைசெய்ய நாகன் றானுந்
    திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு
"மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை
    மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத்
தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி
    தனையழைமி" னெனவங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமையவ டனக்குரைப்ப நரைமூ தாட்டி
    நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.
47

     (இ-ள்.) வெளிப்படை. வில்லேந்திய வேடர்கள் இவ்வாறு
சொல்ல, நாகனும், திண்ணணாரை அழைத்துக் கொண்டு வரும்படி
முன்னர்ச் சொல்லியனுப்பி விட்டு, "மலைகளிற் பொருந்திய
பெருங்காட்டில் என்மகள் கன்னிவேட்டைக்குப் போவதற்காக்
காட்டுத் தெய்வங்கள் மகிழுமாறு பலிகளை ஊட்டுவதற்கு எனது
தலைமை பெற்ற மரபின் வழிவழி வந்த தேவராட்டியை
அழைமின்கள்" என்று சொல்ல, அங்குள்ளோர் சென்று
அந்நிலைமையை அவ்வாறே அவளுக்கு அறிவிக்க,
நரைமூதாட்டியாகிய அவளும் பெரிதும் மகிழ்ந்து விருப்பத்தோடும்
விரைந்து வந்தாள்.

     (வி-ரை.) உரைசெய்ய - வரை ஆட்சியை மகனுக்கு
அருள்க என்று சொல்ல.

     கொண்டுவர- அழைத்துக் கொண்டுவருமாறு. முன்
செப்பிவிட்டு
என்க.

     மலைமருவு.....அழைமின் - இவை நாகன் அங்கிருந்த
வேடர்களைப் பார்த்துக் கூறியவை. நாடகச் சுவைபெற முன்னிலைக்
கூற்றாக அவன் சொல்லியவாறு கூறினார். மேலிரண்டு
பாட்டுக்களினும் இவ்வாறே கூறியதுங் காண்க. நாகன் வேடர்கள்
கேட்டவாறு தன்மகன்பால் வரையாட்சியைச்சூட்டி அவனை
அவர்களுக்குத் தலைவனாக்குவது மன்றி, அன்றைக்கே அவன்
கன்னிவேட்டைக்குச் செல்லுமாறு காடுபலியூட்டச் செய்யவும்
தொடங்கிவிட்டான். இது குடிமக்களின் முறையீடு கேட்ட
நற்றலைவன் செய்யும் தன்மையாம்.

     மலைமருவும் நெருங்கான் - "அங்கண்மலித் தடஞ்சாரற்
புனமெங்கும்" (693) என்றது காண்க.

     கன்னிவேட்டை - பயிற்சிப் பொருட்டா னன்றித் தொழிற்
பொருட்டான் முதல் முறையாக வேட்டையிற் றொடங்குதலை
இவ்வாறு கூறுதல் மரபு. இவ்வாறே நவீனரும் Maiden speech -
Maiden attempt
என்று வழங்குதல் காண்க. மகன் கானில்
கன்னிவேட்டைபோக
எனக் கூட்டுக.

     காடு மகிழப் பலி ஊட்டுக - என்க. காடு - இங்கு
ஆகுபெயராய்க் காட்டில் வாழுஞ் சிறு தெய்வங்களைக் குறித்து
நின்றது. "காட்டிலுறை தெய்வங்கள் விரும்பியுண்ணக் காடுபலி
ஊட்டு" (699) என்றது காண்க. காடுபலி என்றது ஒரு
சொன்னீர்மைப்பட்டு வன தெய்வங்களுக்குக் காட்டிற் பலியிடுவதைக்
குறிக்கும் குழூஉக்குறி என்றலுமாம்.

     தன்மரபின் வழிவந்த - தன்மரபு - தலைமைபெற்ற மரபு -
தங்கள் மரபில் வழிவழியாகவந்து அக்குலத்தவர்பொருட்டுத் தெய்வந்
தொழுவதற் கென்று அக்குலத்தில் முதியாளொருத்தியை வழிவழியாக
நியமித்து அவளுக்கு வேண்டுவன படிமுறை அளித்து வருதல்
பெருமரபுகளின் பழைய வழக்கு. இவ்வாறு நாகன் இத்தேவராட்டிக்கு
அமைத்த படிமுறை 698-ல் காண்க.

     தேவராட்டி - உபாசனையினால் தெய்வ ஆவேசம் தன்
வடிவிலே வரப்பெற்று அதன் அருளிப்பாடுகளை வழிபடுவோருக்கு
அளிப்பவள்; தெய்வத்தால் ஆளப்பெற்றவள்; தெய்வ
மேறப்பெற்றவள் என்பார். இவளைப், "படிமத்தாள்" "அணங்கு
சார்ந்தாள்" (698), "வரைச்சூராட்டி" (700), "தெய்வநிகழ் குற
முதியாள்" (701), "கடவுள் பொறையாட்டி" (714), "அணங்குடையாட்டி"
(716), "அணங்குறைவாள்" (802) என்று கூறுகின்றவாற்றால்
இவளியல்புகள் தெரிவிக்கப்பட்டன.

     நிலைமை - நாகன் மகனுக்கு வரையாட்சி யருளுதலும்
கன்னிவேட்டைக்குக் காடு பலியூட்டலும் ஆக உள்ள செய்திகள்.
நாகன் கூறிய செய்தியை அவளுக்கு உரைத்தார் என்னாது
நிலைமை உரைசெய்து
என்றது இங்கு நிகழ்ந்தவை யாவும் மேல்
ஆகவேண்டுவனவும் அவள் உளங்கொளத் தெருட்டுதல் குறித்தது.

     நரை மூதாட்டி - நரைத்துமிக்க மூப்பு அடைந்தவள்.
மூதாட்டி - முதுமையால் ஆளப்பட்டவள். இவளுடலின்
முதுநிலையைப்பற்றி மேல்வரும் பாட்டிற் கூறுவதும் பிறவும்
காண்க. 47