697.
|
கானில்வரித்
தளிர்துதைந்த கண்ணி சூடிக்
கலைமருப்பி னரிந்தகுழை காதிற் பெய்து
மானின்வயிற் றரிதாரத் திலக மிட்டு
மயிற்கழுத்து மனவுமணி வடமும் பூண்டு
தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத்
தழைப்பீலி மரவுரிமேற் சார வெய்திப்
பூநெருங்கு தோரைமலி சேடை நல்கிப்
போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள். 48 |
(இ-ள்.)
வெளிப்படை. தேவராட்டி வரிபொருந்திய காட்டுத்
தளிர்களாலாகிய முடி மாலையைச் சூடிக், கலைமான் கொம்பின்
அரிந்த குழையைக் காதிலணிந்து, மான்வயிற்றி னரிதாரத்தாற்
பொட்டிட்டு, மயிற் கழுத்துப் போன்று வன்னமிட்ட சங்குமணி
வடமும் பூண்டு, முலை தொங்கித் திரங்கிச் சரிந்து தாழ, இடையிற்
கட்டிய மரவுரிமேல் தழையுடன் மயிற் பீலியும்தொங்க வந்து
சேர்ந்து பூவும் மலை நெல்லுஞ் சேர்ந்த அட்சதையைக் கொடுத்துப்
போர்வல்ல வேடர் தலைவனாகிய நாகனைத் துதித்து நின்றாள்.
(வி-ரை.)
இதனால் தன் அரசனைக் காணவந்த
தேவராட்டியின் வடிவங்கூறினார்.
இங்கு அவள் அலங்கரித்துக்
கொண்ட அணியும் உடையும்
ஆகிய பொருள்கள் யாவும் குறிஞ்சியாகிய அந்நிலத்துக்குரிய
கருப்பொருள் விளைவுகளாகி விலைகொடுத்துத் தேடி
யிடர்ப்படாமல் அங்கு எளிதிற்பெறும் பண்டங்களே யாதல் காண்க.
இதுபற்றி 667-ல் உரைத்தவையும் பிறவும் காண்க. தேவராட்டியின்
அணியையும் உடையையும் விளக்கும் நெறியால் அந்தந்த
நிலப்பொருள்களினின்றே மக்கள் தம் உணவு உடைகளை ஆக்கிக்
கொள்ளும் மரபினையும் ஆசிரியர் உடன் காட்டியவாறு காண்க.
வரித்தளிர்
- வரிகளையுடைய தளிர்கள். முடிமாலை
கண்ணி எனப்படும். "மாதர் பிறைக்கண்ணி யானை" என்ற தேவாரங்
காண்க.
கலைமருப்பின்
அரிந்தகுழை - கலைமானின் கொம்பில்
அளவுபட அரிந்தெடுத்துக் குழைபோலச் செய்த காதணி.
மானின்
வயிற்று அரிதாரத் திலகம் - "கள்ளிவயிற்றி
னகில்பிறக்கு மான் வயிற்றி, னொள்ளரி, தாரம் பிறக்கும்" என்றபடி
மான் வயிற்றினின்றும் எடுப்பது அரிதாரம். இது உயர்ந்த அரிய
பொருள், ஆன் வயிற்றிற் கோரோசனை எடுப்பதுபோல. இதுவன்றி
கல்லினின்றும் எடுப்பது ஒருவகை அரிதாரம். அது மனோசிலை
எனப்படும் தாழ்ந்த வகை யென்பர்.
மயிற்
கழுத்து மனவுமணி வடம் - மயிலின் கழுத்துப்போல
நீலமிக்க நிறம் பொருந்தச் சங்குமணிகளைச் சாயமேற்றி வடமாகப்
பூணுதல் வழக்கு. மயிலின் கழுத்தை அரிந்து உலர்த்தி யிடையிடை
பலகறைமணியும் கோத்த வடமென்றுரைப்பாருமுண்டு. இது
பொருந்தா உரை யென்க. இந்நாளில் செவந்திப் பூத்திருகு,
மாங்காய்மாலை முதலியனவாக வழங்கும் அணிவகைப்
பேர்களைப்போல அந்நாள் அந்நாட்டில் மயிற்கழுத்துப்போல
அமைந்த மனவு மணிவடம் அப்பெயர் பெற்றதென்பதுவே
அமைவுடைத்தாம்.
இழிந்து
திரங்கி முலை சரிந்து தாழ - தேவராட்டியினது
மிக மூத்தபருவங்குறித்தது. "கொங்கைதிரங்கி" - அம்மை
மூத்ததிருப்பதிகம். அம் மலைநாட்டுப் பெண்கள் இடையில்
உடையணிவதன்றி மேலால் எவ்வகை ஆடையுமணிவது
வழக்கிலாமையறிக.
தழைப்பீலி
- தழையுடன் கூடிய பீலி. உடனிகழ்ச்சிப்
பொருளில் வந்த மூன்றனுருபு தொக்கது. தழையாலாகிய மயிற்பீலி
என்பாருமுண்டு. இடையிற் கட்டிய மரவுரியாடையின் மேல்
தழைகளை வரிசைபெற மேலாடைபோலத் தொங்கவிடுதல் மரபு. தன்
அரசனைக் காணவந்தா ளாதலால் மயிற்பீலியுஞ் சேர்த்தணிந்தாள்.
பூ - தெய்வத்தை அருச்சித்த பூ. பூ நெருங்குதோரைமலி
சேடை
நல்கி - பூவும் மலைநெல்லரிசியுஞ் சேர்த்து ஆசிர்வதித்துக்
கொடுக்கும் மரபு கூறியபடி. தோரை - மலை நெல். சேடை -
அட்சதை. முனை முறியாமல் பிளவு படமால் நீர்தங்காமல் உள்ள
முழு அரிசியே அட்சதைக்குரிய அரிசியாம். முன்னாள்களிற்
கும்பாபிடேக முதலிய சிறப்புக்களில் அட்சதைக்கு வேண்டிய
அரிசிக்காகப் பலவீடுகளிலும் நல்ல நெல்லுத்தந்து அரிசிதேய்த்துப்
பெற்றுக் கொள்ளும் வழக்கும் இருந்தது. இந்நாளிலும் நியதியாகச்
சிவபூசை செய்வோர் பலர் இவ்வழக்கினைக் கையாள்வதுமுண்டு.
இவ்வாறு முழு அரிசியாற்செய்யப்படும் வாழ்த்தும் பிளவுபடாது
முற்றி நீடிநிற்குமென்பது கொள்கை.
போற்றி
நின்றாள் - அரசன் பால் துதித்து நின்று
பணிகேட்கும் முறைபற்றிப் போற்றினாள். 48
|