698.
|
நின்றமுது
குறக்கோலப் படிமத் தாளை
நேர்நோக்கி "யன்னை! நீ நிரப்பு நீங்கி
நன்றினிதி னிருந்தனையோ?" வென்று கூறு
நாகனெதிர் நலம்பெருக வாழ்த்தி, "நல்ல
மென்றசையு மீயலொடு நறவும் வெற்பில்
விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லா
மன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வே;
னழைத்தபணி யென்?" னென்றா ளணங்கு
சார்ந்தாள். 49 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறுவந்து போற்றி நின்ற
குறத்தியாகிய மூப்புடைய தேவராட்டியை நேர்நோக்கி,
"அன்னையே! நீ வறுமையினின்றும் நீங்கிப் பெரிதும் இனிது
வாழ்ந்திருந்தனையோ?" என்று நாகன் கேட்க, அவனுக்கு
நன்மையுண்டாக என்று முன்னே வாழ்த்தி, நல்ல மெல்லிய
மாமிசமும் ஈயலும் தேனும் மலைபடுவளங்களும் ஏனைவளங்களும்
எனக்கு வேண்டியவையெல்லாம் ஆதியில் நீ வகுத்துவைத்த
நிபந்தப்படி குறையின்றிப் பெற்று வாழ்ந்து வருகின்றேன்; என்னை
அழைத்தபணி யாது?" என்று கேட்டாள்.
(வி-ரை.)
நின்ற - சேடைநல்கிப் போற்றி நின்ற. நன்று -
பெரிதும். "நன்று பெரிதாகும்" (தொல் - உரு - 4).
குறமுதுகோலப்
படிமத்தாள் எனமாற்றுக. கோலம்
மேற்பாட்டிற் கூறியது.
அன்னை!
- அண்மைவிளி பெண்மகளாதலானும் தெய்வஞ்
சார்ந்தளாதாலானும் தன் சொல்வழிப் பணிகேட்கும் இவளை,
அரசன், அன்னையே! என்றழைத்த மரபு காண்க.
தன்
மனைவியல்லாத பெண்மக்கள் யாவரேயாயினும் அவரைத் தாய் என
விளித்தல் தமிழ் நாட்டு வழக்கு. "தன்மனைக் கிழத்தி யல்லதைப்
பிறர்மனை, யன்னையிற் றீரா நன்ன ராண்மை" (ஞானாமிர்தம் 17 -
39) என்றதுங் காண்க. தமிழர்க்குப் பெண்ணின் பெருமை காட்டிப்
பெண்மக்களிடத்து ஒழுகும் உயரிய ஒழுக்க முறை கற்பிக்க
முன்வரும் நவீனநாகரிகக்காரர்கள் இவ்வுண்மை கண்டு
தெளிவாராக.
நீ
நிரப்பு நீங்கி நின்று இனிதின் இருந்தனையோ? -
மேலும் இங்கு நாகன் தன் சொல்வழிப் பணிசெய்யு மிவளை
இவ்வாறு கேட்ட வகையால், அரசன் தன்கீழ் வாழும் குடிகள்
பணியாளர் முதலியோர் வறுமை முதலிய துன்பநீங்கி இன்பம்
பெற்று நல்வாழ்வு வாழ்வதில் வைத்திருந்த கவலையும் கருத்தும்
விளங்குதலும் காண்க. அரசர் கடமையின் உயர்ந்த நோக்கத்தை
இதனால் ஆசிரியர் விளக்கி யிருத்தலும் உன்னுக. நிரப்புநீங்கி
என்றது துன்ப நீக்கமும், நன்றினிதினிருந்தனையோ?
என்றது
இன்பப் பேறும் குறித்தன. துன்ப நீக்கம் முதற்கண்
வேண்டப்படுவது. அதன் பின்னரே இன்பம் வருவதாம். துன்ப
நீக்கமும் இன்பப் பேறுமாகிய இவையே சைவ சித்தாந்த முடிபின்
உள்ளுறை யாதலும் உன்னுக.
அன்று
நீ வைத்தபடி - அரசன் தன்கீழ் உள்ள பணியாளர்
வறுமையின்றி நல்வாழ்வு பெற்றிருக்குமாறு மானியங்கள் வகுத்து
வைப்பது முந்தைநாள்முதல் நமது நாட்டு வழக்கு. இங்குத்
தேவராட்டிக்கு வைத்த நாட்படி முறை நிபந்த விவரம் அவள்
வாக்கில்வைத்து ஆசிரியர் அறிவிக்கும் அழகு காண்க. அன்று
-
இவ்வூழியத்தைத் தொடங்கி நியமித்தது முதல். வைத்த - நியமித்த;
உத்தரவு செய்து ஒழுங்குபடுத்திய. படி - நிபந்தம்
- நாட்படி.
வெற்பில்வினை
வளனும் பிறவளனும் - உணவுக்கும்
உடைக்கும் வேண்டப்படுவன பெரும்பாலும் அந் நாட்டிற்
பெறப்படும். சிறுபான்மை அவ்வாறு பெறப்படா. இன்றியமையாத
உப்புப் போன்ற ஏனை நெய்தல் முதலிய நிலப்பண்டங்களும்
வேண்டப்படும். அவற்றைப் பிறவளன் என்றார்.
இவற்றைப்
பண்டமாற்று வகையாற் பெறுவது முன்னாள் வழக்கு. இவைபற்றித்
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும் பிறாண்டுங் காண்க.
வெற்பில்விளைவளன் - கிழங்கு கனி வகைகளும்
தேன்
முதலியனவும். 683, 684 முதலியவை காண்க.
அணங்கு
சார்ந்தாள் - அணங்கு - தெய்வம். சார்தல்
-
எப்போதும் தெய்வத்தினை வழிபாடாற்றி அதனைச்சாரும்
கோலத்தோடு விளங்குதல். (சிலப்பதிகாரம் வேட்டுவவரி.)
நன்றுமினி
திருந்தனையே? - என்பதும் பாடம். 49
|