700.
|
மற்றவன்றன்
மொழிகேட்ட வரைச்சூ ராட்டி
"மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக்
கெற்றையினுங் குறிகண்மிக நல்ல வான;
விதனாலே யுன்மைந்தன் றிண்ண னான
வெற்றிவரிச் சிலையோனின் னளவி லன்றி
மேம்படுகின்றா" னென்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன தெய்வங்கண் மகிழ வூட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்".
51 |
(இ-ள்.)
வெளிப்படை. அவனது வார்த்தைகளைக் கேட்ட
தேவராட்டி மிக மகிழ்ந்து "இங்கு அன்போடு வருகின்ற எனக்கு
முன் எந்நாள்களிலும் காணப்படாத மிகநல்ல குறிகள் உண்டாயின;
அதனாலே உன் மைந்தன் வெற்றிபொருந்திய வரிவில் ஏந்திய
திண்ணனானவன் உன் அளவில் மட்டும் அமையாது
மேம்படுகின்றான்" என்று விரும்பி வாழ்த்திக், கொற்றந்தரும்
வனதெய்வங்கள் மகிழும்படி காடு பலி ஊட்டுதற்கு
வேண்டுவனவற்றை யெல்லாம் குறைவில்லாது கைக்கொண்டு
போயினான்.
(வி-ரை.)
வரைச்சூர் ஆட்டி - மலைத் தெய்வங்களுக்குப்
பூசை செய்கின்ற படிமத்தாள். சூர் - தெய்வம்.
குறிகள் மிகநல்ல
ஆன - குறிகள் - நிமித்தங்கள். இவை வென்றிப்புள் முதலிய
புறச்சகுனங்களும், வலக்கண் துடித்தல் முதலாகிய உடற்
சகுனங்களுமாம். இவைபற்றி " மொய்த்தபல் சகுன மெல்லா முறை
முறை தீங்குசெய்ய இத்தகு தீய புட்க ளீண்டமுன் உதிரங் காட்டும்
அத்தனுக்கு" (812) என்றதும், "தீக்கனாக்களோடுந், துன்னிமித்
தங்களங்கு நிகழ்ந்தன" (631) என்று தொடங்கித் திருஞானசம்பந்த
மூர்த்திகள் புராணத்தில் 632, 633, 634-ம் பாட்டுக்களிற்
கூறியனவும் காண்க. "விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொனிமித்தம்" -
பிங்கலம். கண்ணாற் காண்பனவும், காதாற்
கேட்பனவும் என
இவற்றை வகுத்துக் கூறுவர்.
எற்றையினும்
- இதுநாள்வரை நேர்ந்தவற்றினும் மேலாக.
மிக
நல்லஆன - உண்மையில் இக்குறிகள் திண்ணனார்
செல்லும் உயர்கதியைக்குறித்தன என்ற குறிப்பும் காண்க.
இக்குறிப்பே பின்னர்த் தேவராட்டி "இதனாலே" என்று
தொடங்கிக்கூறும் மொழியிலும் விரவிநிற்றலும் காண்க. இதுவரை
இக்குறிச்சியினின்றும் போந்த மற்றெவரும் காளத்தியிறைவன
தருணோக்கமுற்று
மேம்பட்டாரில்லை என்பதும், நாகனும் காளத்தி
கண்டானாயினும் திண்ணனாரைப்போல மேம்பட்டானலன் என்பதும்
உன்னுக.
நின்
அளவினன்றி மேம்படுகிறான் - உன்னைப்போல
வேடர் தலைவன் என்ற அளவில் நில்லாது மேலோராகிய
எல்லாரினும் மிக மேம்பட்ட பெருநிலையை அடைகின்றான்
என்பதும் குறிப்பு.
கொற்ற
வனதெய்வங்கள் - வழிபாட்டின் வெற்றி தருவன
என்பது கருத்து. "கலையமர் செல்வி கடனுணினல்லது, சிலையமர்
வென்றி கொடுப்போ ளல்லள்" (சிலப் - வேட் - 16 - 17) என்றதும்
காண்க.
வெற்றி
வரிச்சிலையோன் - குறிகளின் பயன் வேட்டையின்
வெற்றியாதலின் இதனை இறுதியில் வைத்துக் கூறினார்.
குறைவின்றி -
பொருள்களாலும் அளவாலும் குறைவில்லாமல்.
இதனைத் திரவிய லோபமில்லாமல் என்பர். கொண்டு - பெற்றுக்
கொண்டு.
மனமகிழ்ந்து
நானிங்கு - என்பதும் பாடம். 51
|