701.
தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு
    திண்ணனார் சிலைத்தாதை யழைப்பச் சீர்கொள்
மைவிரவு நறுங்குஞ்சி வாசக் கண்ணி
    மணிநீல மலையொன்று வந்த தென்னக்
கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து
    காதல்புரி தாதைகழல் வணங்கும் போதிற்
செவ்வரைபோற் புயமிரண்டுஞ் செறியப் புல்லிச்
    செழும்புலித்தோ லிருக்கையின்முன் சேர
                            வைத்தான்.
52

     (இ-ள்.) வெளிப்படை. தேவராட்டி போயின பின்னர்,
வில்லையுடைய தந்தை அழைக்கக் கேட்டுச் சிறப்புக் கொண்ட
கரிய நல்ல குடுமியினையும் வாசமிக்க மாலையையுமுடைய நீல
மணிமலையொன்று வந்தது போலத் திண்ணனார் கையிலே
பொருந்திய வில்லையுடைய வேடர் பலரும் போற்ற வந்து தம்பாற்
காதல்புரி தந்தையின் கழல்களை வணங்கியபோது, தாதையாகிய
நாகன் நேர்மை பெற்ற குன்றுபோல் உயர்ந்த இரு தோள்களையும்
பொருந்தத் தழுவிக் கொண்டு செழுமையான புலித்தோல்
ஆசனத்திலே தன் முன்புகூட வீற்றிருக்கும்படி வைத்தான்.

     (வி-ரை.) தெய்வதிகழ் குறமுதியாள் - தேவராட்டியின்
மரபும் தொழிலும் படிமமும் வயதும் குறித்தது காண்க. நிகழ்தல் -
ஆவேசித்தல்.

     சிலைத்தாதை அழைப்ப - சிலை - வேந்தர்க்குக்
கோல்போல வேடர் தலைவனுடைய ஆட்சிக்குறி என்றபொருளில்
வந்தது. சிலைக்கீழ் (695) என்றதுகாண்க. அழைப்ப -
அழைத்தாராதலின். "கொண்டுவரச் செப்பிவிட்டு" (696). அழைப்ப
என்றதனால், அழைக்கப்படாமல் இளவரசன் தன்தலைவனைக்
காண்பது முறையன்று என்பதாம்.

     சீர்கொள் - குஞ்சி என்று கூட்டுக. சீர் - சிறப்பு.
இக்குஞ்சிக்குச் சிறப்பாவது பின்னர்க் காளத்திநாதரது பூசனைக்குரிய
திருப்பள்ளித்தாமந் தாங்கப் பெறுதல். சீர் கொள்குஞ்சி, மைவிரவு
குஞ்சி எனத் தனித்தனிக் கூட்டுக.

     மணி - அழகு என்றலுமாம். மலை ஒன்று வந்ததென்ன -
உருவம்பற்றி வந்த இல்பொருளுவமம்.

     கைவிரவு சிலை வேடர் போற்ற - கையிற்
சிலைபிடித்தவாறே நின்று வேட்டைப் போர்க்கோலத்துடன்
வேடர்கள் தமக்குத் தலைவனாகப் பட்டம் சூடும் இளவரசனைக்
காவல் செய்ய. Military Guard of honour என்பர் நவீனர்.

     செவ்வரை போற் புயமிரண்டும் - செம்மை - நேர்மை.
நேர்மையாவது திரண்டு உருண்டு வளர்ந்திருத்தல்

     புயமிரண்டும் செறியப்புல்லி - திண்ணனாரது
புயமிரண்டையும் தனது புயமிரண்டும் நெருங்கத் தழுவி. "கருவரை
காளமேக மேந்திய தென்னத் தாதை, பொருவரைத் தோள்களார"
என முன்னர் இவனது தோள்களைக் கரிய மலையாகக் கூறியதும்
காண்க. இக்கருத்தைத் தழுவியே தசரதன் இராமனைத் தழுவிய
வதனைக் கூறும்போது"நிலங்க டாங்குறு நிலையினை நிலையிட
நினைந்தான், விலங்க லன்னதிண் டோளையு மெய்த்திரு விருக்கும்,
அலங்கல் மார்பையும் தனதுதோள் மார்புகொண் டளந்தான்" என்று
கம்பர் சமத்காரமாகக் கூறியதுங் காண்க.

     புலித்தோல் இருக்கை - இது இவர்களது அரசு
வீற்றிருக்கும் அரசு கட்டில் என்பர். ஏனை அரசர் வீற்றிருக்கும்
சிங்காசனம் என்பது பொன், மரம் முதலியவற்றாற் சிங்கத்தின்
வடிவம் போன்றியன்று, உபசார மாத்திரையாற் போலியாக
அப்பெயர்பெறும். இவ்வேடர்களது அரச ஆசனமோ அவ்வாறன்றி
உண்மைப் புலித்தோ லாசனமாயுள்ளதாம். இருக்கை - அரசு
கட்டில். புலித்தோல் இருக்கை குறவர் மரபிற்கு உயர்ந்த
ஆசனமுமாம். இதனை முருகப்பெருமானுக்கு வள்ளிப்பிராட்டியாரை
மணம் செய்விக்க அமைந்த ஞான்று வேடர்கோமானாகிய
நம்பிராசன் "தன்றிரு மனையினூடே சரவண முதல்வன் றன்னை,
மன்றலங் குழலியோடு மரபுளி யுய்த்து வேங்கைப், பொன்றிக
ழதளின் மீது பொலிவுற விருத்தினானே"
என்ற
கந்தபுராணத்தானுமறிக.

     முன் சேர வைத்தான் - முன்வைத்தான் - சேரவைத்தான்
என்க. தனது தலைமையை மகனுக்குக் கொடுக்கும் செயலில் முதலிற்
செய்யும் செயலாவது தன் ஆசனத்தில் ஒருங்கே தன்னுடன் சேர
அவனை வைத்தலாம். முன் வைத்தல் மகனுக்கு வேண்டுவன கூறிச்
சுரிகையும் உடைதோலும் ஆகிய தனது அரச அடையாளங்களைக்
கையிற் கொடுத்துத் தலைமை சூட்டுவதற்கென்பது வரும்
பாட்டானறிக. 52

     செய்வரைப்போல் - என்பதும் பாடம்.