702.
முன்னிருந்த மைந்தன்முக நோக்கி நாகன்
     "மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட
     வினியெனக்குக் கருத்தில்லை; யெனக்கு
                                 மேலாய்
மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு
     மாறெரிந்து மாவேட்டை யாடி யென்றும்
உன்னுடைய மரபுரிமை தாங்கு வா"யென்
     றுடைதோலுஞ் சுரிகையுங்கைக் கொடுத்தா
                               னன்றே.
 53

     (இ-ள்.) வெளிப்படை. நாகன், முன்னால் வீற்றிருந்த
மைந்தனாரது முகத்தைப் பார்த்து "என்னை மூப்புவந்து
அடைந்ததனாலே முன்புபோல என்னுடைய முயற்சியினாலே
வேட்டையாட இனி எனக்குக் கருத்தில்லை; என்னிலும் மேலாக நீ
நிலைபெற்ற மலையர்களாகிய இவ்வேடர்குலக் காவலை
மேற்கொண்டு பகைப்புலங்களை வென்று மா வேட்டையாடி உனது
மரபுரிமையாகிய தலைமையை என்றுந் தாங்குவாயாக" என்று
ஆசிகூறித் தன் அரசாங்க அடையாளமாகிய உடைதோலையுஞ்
சுரிகையையும் அவர் கையில் அப்பொழுதே கொடுத்தான்.

     (வி-ரை.) முன் இருந்த - தன் முன்பு இருக்கவைத்தபடி
இருந்த.

     மூப்பு வந்து எனை அடைதலினால் என மாற்றுக.
என்னுடைய முயற்சியினால் உடல் வலிமையின் துணைகொண்டு.

     வேட்டையாடக் கருத்தில்லை - உயிர்களின் பக்குவ
நோக்கி உடலும் கரணங்களும் புவன போகங்களும் இறைவனாலே
தரப்படுகின்றன. அவ்வுடல்தானும் பிறந்தது முதல் இறக்கும்வரை
பருவந்தோறும் மாறுதலடைந்து கொண்டே வருகின்றது. அதனுள்ளே
தங்கியிருக்கும் உயிரோ அவ்வாறு மாறுத லடைகின்றதில்லை.
ஆனால் அதன் இச்சை ஞானம் கிரியை என்ற சத்திகள் உடலின்
தகுதிக்கேற்றபடி மாறுகின்றன. ஆதலின் ஏனைய எல்லா
உதவிகளுமிருப்பினும் மூப்பு வந்தடைதலினால் இனி
வேட்டையாடக் கருத்தில்லை என்றான். கருத்து - மன எழுச்சி.
நோய்கொண்ட ஒருவனுக்குக் காமம் மோகம் முதலியவற்றில்
இச்சையும் அவைபற்றிய அறிவும் செயலும் செல்லாமை
இயல்பாதல்போலக் காண்க. இவ்வுண்மையை யாவரும் எப்போதும்
மனத்திற் கொண்டுவைத்தல் நன்மை பயப்பதொன்றாகும்.

     எனக்குமேலாய் - இது பின்னர் உண்மையாகவே விளைதல்
காண்க.

     மன்னுசிலை மலையர்குலம் - வேடர்களது நிலை
பெற்றகுலம். இங்கு சிலைமலையர் - மலைச்சிலையர் - சிலை -
வில். மலையாகிய வில்லினையுடையவர் - சிவபெருமான். குலம் -
கோயில் - தேவகுலம் என்று கொண்டு காளத்தியப்பரது
திருக்கோயிலுக்குக் காவல் பூண்டு என்ற பொருளும், மாறு எரிந்து
- அன்பு நிலைக்கு மாறாகிய மும்மலச்சார்புக ளெல்லாவற்றையும்
அறப்போக்கி என்ற பொருளும் தொனித்தல் காண்க.

     உன்னுடைய மரபுரிமை - நீ இதுகாறும் (ஐம்புல)
வேடர்களாகிய எங்கள் பால் வளர்ந்தனை; இது உனது மரபன்று;
மன்னவ குமாரனாவது உன்னுடைய மரபு; இனி உனக்குரிமையாகிய
மன்னவமரபுரிமையைத் தாங்குவாய் என்பன முதலாகச்
சிவஞானபோதம் எட்டாஞ் சூத்திரத்திற் கூறிய உண்மையின்
குறிப்பும் இங்குப் படுதல் காண்க. முன்பு உண்மையில் இவர்
மன்னவகுமாரன் - அருச்சுனன் - ஆதலும் உன்னுக.

     உடைதோல் - சுரிகை - வேடர்களது அரசாங்க
அடையாளங்கள். இவை நாகன் தாங்கியவை. இந்நாளினும்
இராணுவப் பட்டைத்தோல்வாரும், வாளும் (Belt and Sword)
சேனைத்தலைமை முதலிய பெருநிலைகளின் அடையாளங்களாய்
அரசராற்றரப்படுதல் காண்க.

     கைக்கொடுத்தான் - இவற்றை மகன்கையிற் கொடுத்தலாலே
முடிசூட்டுதல் போலத் தனது தலைமைத்தானத்தை மகன்பாலதாக
ஆக்கினான்.

     அன்றே - வேடர்கள் முறைசொல்லிய அப்பொழுதிலே.
அவசியம் கண்ட பின் ஒரு கணமேனும் பயனில்லாதவனாகத் தான்
தலைமைதாங்க விரும்பாது உடனே கொடுத்தான். நாகன்
குடிகளைக்காக்கும் தன் கடமையைச் செம்மை பெற
உணர்ந்தொழுகியதிறம் எடுத்துக்காட்டப்பட்டது. நோய் - மூப்பு -
முதலியவற்றால் தாம் தாங்கச் சத்தியற்றபோதும் அதிகார
ஆசைவயப்பட்டு, அதனைத் தக்கார்பால் ஆக்கிக் கடமைசெலுத்த
இசையாது, இடர்ப்பட்டுநிற்றல் மக்களிற் பெரும்பாலோர் செய்கை.
உண்மைகண்டு உலகம் திருந்துமாறு அமைச்சர் பெருமானாகிய
ஆசிரியர் இதனை இங்கு இவ்வாறு எடுத்துக்காட்டினர் என்க.

     அன்றே - அசையென் றொதுக்குவாருமுளர். 53