703.
தந்தைநிலை யுட்கொண்டு தளர்வு கொண்டு,
     தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
     மனங்கொண்ட குறிப்பினான் மறாமை
                                 கொண்டு,
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
     முதற்சுரிகை யுடைதோலும் வாங்கிக் கொண்டு,
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
     திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான் 54

     703. (இ-ள்.) வெளிப்படை. தமது தந்தையின் நிலையினை
உட்கொண்டு அதனால் பரிவடைந்து, பின்னர்த் தங்கள்
குலத்தலைமைக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டப்படுவதாகிய குறையை
நீக்குதல் வேண்டுமென்று மனத்தினுட் கொண்ட குறிப்பினாலே
தந்தையினது சொல்லை மறுக்காமையை மேற்கொண்டு, தமது
முன்னவனாகிய அவன் கழலை வணங்கி, அவன் முறைமையாற்
கொடுத்த முதற் சுரிகையையும் உடைதோலையும் ஏற்றுக்கொண்டு,
தமது சிந்தை பரங்கொள நின்றவராகிய திண்ணனார்க்கு அவரது
திருத்தாதை முகமலர்ந்து சொல்வானாகி - 54

     703. (வி-ரை.) தந்தை நிலை - மேற்பாட்டில் சொல்லியபடி
நாகன் நிலைமை. உட்கொண்டு - உட்கொண்டு அதனாலே
தளர்வுகொண்டதற்குக் காரணங்காட்டியவாறு.

     தளர்வு கொண்டு - மனம் பரிந்து; வருந்தி. இவ்வாறே
"அன்னவருமிரங்கி" (694) என்று வேடர் மனநிலை குறித்தவாறும்
காண்க.

     குறைபாடதனை நிரப்புமாறு என்றது குறையை நீக்கி
நிறைவாக்குதல் குறித்தது.

     மனங்கொண்டகுறிப்பினால் - மனத்தில் தோன்றி எழுந்த
குறிப்பினாலே கருதியதனாலே. முதலில் திண்ணனாரது
மனத்திற்றோன்றினது வருத்தம்; அதன் பின்னே தோன்றியது
குலத்தலைமைக்குச் சார்வுதோன்ற வந்த குறைபாடு; அதன் பின்னர்த்
தோன்றியது அக்குறையை நிரப்பும் குறிப்பு என்றிவ்வாறு
ஒன்றன்பின் ஒன்றாகப் போந்த அவரது மனநிலைகளைக்
குறித்தவாறாம்.

     மறாமை கொண்டு - தந்தையிருக்க மகன் தலைமைபூணுதல்
தகாதென்று மறுக்காமல். தளர்வு கொண்டாராயினும் மறாமையும்
கொண்டார். அதன் காரணம் மனங் கொண்டகுறிப்பு என்பது.
அரசுரிமை தாங்கவேண்டு மென்ற ஆவல் அவர்க்கில்லை என்பதும்
கூறியபடி.

     முந்தை - முன்னோன் - தாதை - தலைவன். முன்னே
என்பாருமுண்டு.

     கழல் வணங்கி - அவ்விடத்துக்கு வந்தவுடனே
முறைமையால் வணங்கினார் (701). இங்கு வணங்கியது அவனது
சொல்வழி அமைந்துநின்ற தமது இசைவு காட்டுதற்கும் கரிகையும்
உடைதோலும் பெற்றுத் தலைமைபூணுவதற்குமுன் அவ்வுரிமையைப்
பெரியோர்பாற்பெறும் முறைமையில் ஒழுகுதற்குமாம். புலித் தோல்
இருக்கையில் தந்தையுடன் சேர இருந்தவர் (701) எழுந்து
வணங்கிநின்று சுரிகையும் உடைதோலும் வாங்கினார் என்க.

     முதற் சுரிகை - முதன்மைக்கு - தலைமைக்கு -
அடையாளமாகியசுரிகை. வழி வழியாய்த் தமது குலத்தலைவர்
தாங்கும் சுரிகை என்றலுமாம்.

     வாங்கிக் கொண்டு - பெரியோர் பணித்ததனை உடனே
ஏற்றுக்கொள்ளல் வேண்டுமென்னும் மரபுபற்றி முதலில் வாங்கிக்
கொண்டு பின்னரே சிந்தித்தார். இதன்பின் சிந்தைபரங்
கொளநின்ற
என்றது காண்க.

     பரம் - பாரம். அரசாங்மாகிய பாரத்தைச் சிந்தையிலே
கொண்டு. அதுவே இராச்சியபாரம் எனப்படும். பரித்ததன்மேல்
என வரும்பாட்டிற் கூறுவதும் காண்க. இது உடம்பானன்றி
மனத்தாற் பரிக்கப்படுவதாம். அரசாட்சியானது பெரும்
பொறுப்புடையது - பெரும்பாரமானது - என்ற பயமுடைய எண்ணம்
உடைதோலும் சுரிகையும் ஏற்றவுடன் உண்டாகியது. கழறிற்றறிவார்
நாயனார் அரசுரிமை ஏற்குமுன் இறைவனிடம் விண்ணப்பித்து
அதற்குரிய தகுதிகள் பெற்றபின்னரே அதனைத் தாங்கிய சரிதத்தை
இங்கு நினைவுகூர்க. தலைமை தாங்குதலில் விருப்பும்
வெறுப்புமின்றித் தந்தை மூப்படைதலினால் வேடர்களைத்
தாங்குதற்குரியவர் இல்லாக் குறை நேர்ந்தது - இதனை நீக்குதல்
தாதை வழிநிற்கும் நமதுகடமையாயிற்று என்ற கடப்பாடுபற்றிச்
சிந்தையை அதில் நிறுத்துதல் இங்குக் குறித்தநிலை.

     இனி இங்கு இன்று மறாமைகொண்டு தோலும் சுரிகையும்
கைக்கொண்டார். இவர் சிந்தையைப் பரம் - காளத்தியப்பர் -
கடவுள் - நாளைக்கைக்கொள்ளும் நிலையில் நின்றார் என்றதோ
ருட்பொருளும் போந்தவாறு காண்க.

     திருத்தாதை - திரு - நாயனார்க்குத் தாதையாகியசிறப்பும்
அதனாற் பெரியார் பலரும் போற்றநின்ற சிறப்பும் குறித்தது.
இதனைப் பின்னர் "செய்தவத்தின் பெருமைபெற்ற வெங்கண்விறற்
றாதை" எனவிரித்தனர். முன்னரும் "தவமுன் செய்தான்" (657)
என்றார்.

     முகமலர்ந்து செப்புகின்றான் - பின்னர் மறுநாட்பகலில்
நேர்வதறியாது கூறினான் என்பது உட்குறிப்பு. வரும்பாட்டில்
இக்கருத்தே பற்றி "இயல்பினின்றான்" என்றதும் காண்க.

     சாய்வு தோன்ற - என்பதும் பாடம். 54