704.
|
"நம்முடைய
குலமறவர் சுற்றத் தாரை
நான்கொண்டு பரித்ததன்மே னலமே செய்து
தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்ட
திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின்
வாழ்வாய்!;
வெம்முனையில் வேட்டைகளு முனக்கு வாய்க்கும்;
விரைந்துநீ தாழாதே வேட்டை யாட
இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடு
மெழுக!" வென விடைகொடுத்தா னியல்பி
னின்றான். 55 |
704. (இ-ள்.)
வெளிப்படை. "நம்முடைய குலத்தவராகிய
வேடர்களையும் சுற்றத்தார்களையும் நான் கொண்டு
தாங்கியவதனினும்மேலாக அவர்களுக்கு நன்மையே செய்து,
பகைமுனையில் அயற்புலங்களைக்கவர்ந்து அதனிற்கைக்கொண்ட
வலிய வில்லினால் விளையும் வளங்குறையாத சிறப்போடு
வாழ்வாயாக! விரும்பத்தக்க வேட்டை முனையிலே நல்
வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்; நீ தாமதியாது விரைவாய்
வேட்டையாடுதற்கு, இந்த வலியகொடிய வில்வேடர்களுடனே
எழுவாயாக!" என்று இயல்பின் நின்ற நாகன் திண்ணனார்க்கு
விடைகொடுத்தான். 55
704.
(வி-ரை.) மறவர் சுற்றத்தாரை
- மறவரையும்
சுற்றத்தாரையும். இரண்டனுருபும் உம்மையும் விரிக்க.
சுற்றம்
- சுற்றியிருப்பவர். சார்ந்து பலவாற்றானும்
சூழ்ந்திருப்பவர்.
கொண்டு
பிரித்தது - கொண்டு - நான் எனது
முந்தையோரிடமும் பெற்றுக் கொண்டு. பரித்தது - தாங்கியது.
நலமே
செய்து - ஏகாரம் பிரிநிலை. எக்காலமும்
அவர்கட்கு நன்மையே செய்து என்றபடி. அவரால் தமக்கும்
பிறர்க்கும் எவ்வகையானும் ஒரு தீங்கு நேர்ந்தபோதிலும் நலமே
அவர்க்குச் செய்து என்றபடியாம். இது அரசாங்கத்தின் மிக உயர்ந்த
நோக்கமும் குறிக்கோளுமாம். ஆயின் குற்றஞ் செய்தாரைத்
தண்டித்தலிலதோ? எனின், உண்டு; அதுவும் அவரை ஒறுக்கும்
வகையானன்றி அவர்பால் இரங்கித் திருத்தி நன்மைசெய்யும்
வகையாற் செய்யப்படுதல் வேண்டுமென்பது. இறைவன் உயிர்களை
ஆட்கொண்டு பரிக்கும் செய்தியும் இவ்வாறே ஞானநூல்களா
லுணர்த்தப்படும். "எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும்" என்பது
ஞானசாத்திரம்.
தெம்முனையில்
அயற்புலங்கள் கவர்ந்து - பகைமுகத்தில்
அயலாரது புலங்களின் பொருள்களைக் கவர்ந்து. உயிரைவாட்டிப்
பகைசெய்யும் அயற்புலங்களாகிய ஜம்புலங்களையும் கவர்ந்து
அவற்றின் பகையை ஒழித்து என்றதும் குறிப்பாம்.
கொண்டவளம்
- திண்சிலையின் வளம் எனக்கூட்டுக.
சிலைவலியாற் பெறும் வளம் என்க. திண்சிலை - இறைவனுக்குக்
கானவூனை அமுதமாக்கிக் காவல்புரியும் வலிமை
பெற்றமையாற்றிண்
என்றார். தோள்வலியாற் பெறுவதனைச் சிலையின் மேல் ஏற்றியது
உபசாரம்.
வளம் ஒழியாச்
சிறப்பு -
சிலையினாற் பெறும்வளம்.
என்றைக்கும் அழிவு பெறாது நிலைத்து இறைவனது ஆணைப்படி
அவரது வலப்பக்கத்தில் என்றும் நிற்கப்பெற்ற சிறப்பின் குறிப்பும்
காண்க. வாழ்வாய் - வாழ்க என்றது நாகன்
சொன்ன ஆசி.
வெம்முனையில்
- வெம்மை - விருப்பம். சிலையின் வளம்
மேலே சொல்லப்பட்டமையால் இது வெறும் வேட்டைப்பலன் பற்றிய
ஆசிமட்டு மன்றாகித், தேவராட்டி "மேம்படுகின்றான்" என்றபடி, நீ
இறைவனுக்கு ஊட்ட விரும்பியவாறே வேட்டைகள் வாய்க்கும்
என்பதைக் குறிப்பாலுணர்த்திற்று. வேட்டை - அதனாலகப்படும்
மிருக முதலியவற்றைக் குறித்தது.
முரண்
வெஞ்சிலை வேடர் - முரண் - வலிமை -
வெம்மை - கொடுமை - கொலைத் தொழில் புரிவதனைக் குறித்தது.
எழுக
- செல்க எனின் அமங்கலக் குறிப்புத் தருமாதலின்
மங்கலமாகக் கூறினார். "போங்கள்" என்பதற்கு "வாருங்கள்"
என்னும் உலகவழக்குக் காண்க. வேடர்மகனாகிய
கீழ்நிலையினின்றும் மன்னவ குமாரனாகிய உயர்நிலைக்கு எழுக
என்றது குறிப்பு.
விடைகொடுத்தான்
- இதுவே இறுதியாக உலகநிலையில்
நாகனுக்கும் திண்ணனாருக்கும் இருந்த தொடர்பு. இனி இத்தொடர்பு
அற நிகழ்வது சரிதம். மறுநாட் புலர்காலை வேட்டைக்குச் செல்லும்
திண்ணனார் உச்சிப்போதில் இறைவனைப் பிடித்து உலகப்பற்றை
அறவே விடுவர். ஆதலின் அக்குறிப்புப்பெற இவ்வாறு முடித்துக்
கூறினார்.
இயல்பின் நின்றான்
- நின்றானாகிய நாகன்.
வினையாலணையும் பெயர். இதனை வினைமுற்றாகவே கொண்டு,
விடை தந்த இச்செயலிலே, உலக இயல்பில் நின்றான் எனவும்,
விடைகொடுத்தபின் இனித் திண்ணனார்க்குத்தாதை என்றநிலை
யில்லையாகத் தன் முன்னையியல்பாகிய வேடர் தலைவனாம் நாகன்
என்ற இயல்பிலே அமைந்து நின்று கொண்டவனானான் எனவும்
உரைத்தலுமாம்.
கொண்டுதிண்
- இயல்பின் மிக்கான் - என்பனவும்
பாடங்கள். 55
|