705.
|
செங்கண்வயக்
கோளரியே றன்ன திண்மைத்
திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண்விறற் றாதைகழல் வணங்கி நின்று
விடைகொண்டு புறம்போந்து வேட ரோடு
மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி
வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப்
பொங்குசிலை யடல்வேட்டைக் கோலங் கொள்ளப்
புனைதொழிற்கை வினைஞரொடும் பொலிந்து
புக்கார். 56
|
(இ-ள்.)
வெளிப்படை. சிவந்த கண்களையுடைய
வெற்றிபொருந்திய சிங்க ஏறுபோன்ற வலிமையுடைய திண்ணனார்,
செய்தவத்தின் பெருமைபெற்ற வெவ்விய கண்ணும் விரலுமுடைய
தாதைகழலிலே நிலமுறவீழ்ந்து அடிபணிந்து எழுந்து நின்று
விடைபெற்றுக் கொண்டு வெளிப்போந்து வேடர்களோடும் போய்ப்
பின்னர் மங்கலஞ் செய்யும் நீரையுடைய சுனையிற்படிந்து நீராடி
மனையிலே தங்கித், தங்கிய இருள் புலர்கின்ற வைகறைக்காலத்தில்
வரிவிற் சாலையிலே பொங்குசிலைகொண்டு செய்யும்
வலியவேட்டைக்கோலங் கொள்ளுதற்காக அலங்கரிக்கும் தொழில்
செய்கின்ற கையுடைய ஏவலாளர்களுடன் மகிழ்ந்து புகுந்தனர்.
(வி-ரை.)
கோளரி - சிங்கம். இதற்குக் கொள்
என்ற பகுதி
முதனீண்டதெனக்கொண்டு, எதிர்ந்தாரைப்பற்றி உயிர்கொள்ளுதலை
உடைய அரி - சிங்கம் என்று பொருள்
கூறுவாருமுண்டு. இங்குத்
திண்ணனார் மாவேட்டைக்குச் செல்லுதலால் எந்தமிருகங்களும்
இவர்கீழ்ப்பட்டு வெல்லப்பட்டும் கொல்லப்பட்டும் போம் என்பதுங்
குறிப்பு. முன்னரும் இவரைச் சிங்கமென்றே கூறியதும் காண்க (690).
செய்தவத்தின்
பெருமை பெற்ற - எல்லாப் பேற்றினும்
திண்ணனாரை மகனாகப் பெறும்பேறே சிறந்ததாகலின் அதனைக்
கூட்டுவித்ததவமே பெருமையுடையதென்றபடியாம். திண்ணனாரால்
வணங்கப்பெற்றதும் பெருந்தவமாம்.
புறம்
போந்து - நாகன் இருந்து தமக்குத் தலைமைசூட்டிய
அவ்விடம்விட்டு வெளிப்போந்து. இதனாலும், "மைந்தனை
ஈண்டழைத்து" (695), "திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி
விட்டு" (696), என்றமையாலும் நாகனது இருக்கைவேறு,
திண்ணனாரது இருக்கைவேறு என்பது பெறப்படும்.
மங்கலநீர்ச்
சுனைபடிந்து - மங்கலஞ்செய்யும் நீர்
பொருந்திய சுனையிற்றோய்ந்து நீராடி. மங்கலம் - இன்பம். சுனை -
குறிஞ்சியின் நீர்நிலைப் பெயர். புதிய ஊற்றுடையதாகித்
தோய்ந்தார்க்கு உடற்சுகந்தருவது. படிந்து -
தோய்ந்து குறிக்கும்
முறை. குறிஞ்சிநில மக்கள் மாலையில் மங்கலம் - இன்பம் -
தருகின்ற நீர்ச்சுனைபடிந்து மனைவைகுதல் மரபு என்க. இதுவரை
வேடர்மகனாராகிய மங்கலத்துக்கு மாறாகிய கொல் - எறி - குத்து
என்பனவாதி செயலேசெய்து ஊன் உண்ணுதல் முதலிய அசுத்த
உலகபோகங்கள் துய்த்துவந்தவற்றையெல்லாம் கழுவி எறிந்து,
இனிப்பிற்றைநாளே மங்கலமாகிய சிவமாந்தன்மைப்பெருவாழ்வு
பெறநின்றாராதலின் அதற்குத் துணை செய்த நீர் என்ற குறிப்பும்
பெற மங்கலநீர் என்றார் என்பதுமாம்.
வைகிருளின்
புலர்காலை - இடையாமத்துத் தங்கியஇருள்
புலர்கின்றகாலம் வைகறையாதலின் இவ்வாறு கூறினார். இனி -
வைகுதல் நீங்குதல் எனக்கொண்டு, நீங்குகின்ற இருளினையுடைய
புலர்காலை என்பதுமாம். "நீத்ததுயரினவாகி" (திருமூலர்
புராணம் - 14) என்புழிப்போல. வேட்டையிற் புகுகின்ற காலம்
வைகறையேயாம். பின்னர் 781 - 782-ம் பாட்டுக்களில் இதனை
விரித்துக் கூறியிருத்தல் காண்க. விலங்குகள் புட்கள் என்பவை
தத்தம் இருப்பிடங்களை விட்டெழும் முன்னரே தாம்
அவ்விடங்களில்அவ்வவற்றைக் காணவும், அவை தம்மைக்
காணாவண்ணம் தாமிருக்கவும் வசதிபெறுங் காலம் இதுவென்பது
வேட்டைவினையாளர் கைகண்டமுறை. எத்தொழிலிற் புகுதற்கும்
வைகறைப் பொழுது உரித்தாம் என்பது உடல்நூல் உளநூல்களின்
துணிபுமாம். இரவிற்றுயின்று இளைப்பாறி மதிக்கலைகளினால்
அமுதம் பெற்று உடற்பகுதிகள் ஊக்கத்துடன் நிற்கும். பலவிகரணி
என்னும், பலத்தை வேறுபாடு படுத்தும் ஞாயிற்றின் "வெம்புந்திய
கதிர்" கள்மேல் வந்து தாக்கி உடற்பகுதிகளின் பலத்தைக்
குறைக்கும்முன் தொழிலிற் புகுதல் பலன்றரும் என்பது ஒரு பொது
விதி. அதுவேட்டைக்குரிய சிறப்புவிதியு மாயிற்று.
வரிவிற்
சாலை - வரிந்து பலப்படுத்திய வில் முதலிய
படைகள் இருக்கும் சாலையில். ஏழாம் வேற்றுமையுருபு தொக்கது.
சாலை - புக்கார் என முடிக்க.
வேட்டைக்
கோலம் - வேட்டைவினை செய்தற்குரிய
கோலம். இது அவ்வேட்டை வினையிலே உடல்வசதி - படைவசதி
முதலியவை ஒழுங்குபெற நிற்கும்படி அமைவுபடுத்தும் கோலமாம்.
போர் முறையிலும் இவ்வாறு முன்னர் வசதிநிலைபெற அமைத்த
கோலங்கொள்ளுதல் முறை. 618 பார்க்க. இக்கோலத்தை மேல் 706
முதல் 712 வரை ஏழு திருப்பாட்டுக்களில் விரித்தனர்.
பொங்கு
சிலை - வேட்டைவினையாகிய புல்லிய கொல்
வினையல்லாது அத்தனுக்கு அமுதூட்டிக் காவல்புரியும் நல்வினை
செய்து அன்பு பொங்குதற்கேதுவாய் நிற்றலால் இவ்வாறு கூறினார்.
அடல்
வேட்டை - அடல் - அடுதல் எனக்கொண்டு
அடுதலைச் செய்யும் - கொலை புரியும் - வேட்டை என்பாருமுண்டு.
புனைதொழிற்கை
வினைஞர் - வேட்டைக்கோலத்தை
வழுவின்றிச் செம்மை பெறச் செய்யவல்ல கைத்தொழிலிற்
றேர்ந்தவர். இவ்வாறு ஒவ்வொரு தொழிலுக்கும் உரிய கோலஞ்
செய்யும் கைவல்லார் உளராதல் மரபு. "கைவலான்" (162) என்றதும்
காண்க.
பொலிந்து
- மகிழ்ந்து. இது உள்ளப் பொலிவு. மேல்வரும்
சிவப்பொலிவின் முன்னறிகுறியாம். 56
|