709.
மார்பிற்சிறு தந்த மணித்திரண் மாலை தாழத்,
தாரிற்பொலி தோள்வல யங்க டழைத்து மின்னச்,
சேர்விற்பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கைக்
கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி கட்டி,
60

     709. (இ-ள்.) வெளிப்படை. மார்பில், யானைத்
தந்தத்தாலாகிய சிறுமணிகளின் மாலை தாழ்ந்துதொங்க,
மாலைகளினால் விளங்குகின்ற தோளில் வாகுவலையங்கள் பொங்கி
விளங்கப், பொருந்திய பொலிந்த கங்கணமானது தன்மேல் விளங்கும்
முன்கையிலே வில்லிற் பூட்டிய நாணைக் கார்முழக்கம் போல
எறிவதற்குதவும் கைக்கோதையைக் கட்டி, 60

     709. (வி-ரை.) தந்தச் சிறுமணித்திரள் என்க. யானைத்
தந்தத்தை அளவு படச் சிறுமணிகளாக அறுத்து அவற்றை
மாலையாகச் சேர்ப்பது வழக்கு. தோல் வலயங்கள் -
வாகுவலயமென்பர். இது பரப்புடையதாய்க் கவசம்போலத் தோளை
மூடிநிற்கும் ஒரு வகை அணி. இது தோண்மாலைபோல
நின்றதென்பார் தாரிற்பொலி என்றார்.

     சேர்விற்பொலி கங்கணம் - இவரது கையிற்சேர்தலினாலே
கங்கணம் பொலிவு பெற்றது என்க. சேர்வு - சேர்தல். அவ்வாறு
சேராதபோது கங்கணத்திற்குத் தனியாக மதிப்பும் விளக்கமும்
இல்லை என்பார் சேர்விற் பொலி என்றார்.

     கார்நாண் எறி - மேக முழக்கம்போல, நாணொலிசெய்யும்
கார் - கார் முழக்கம். ஆகுபெயர், "துங்கப்பெரு மாமழை போன்று
துண்ணென் றொலிப்ப" (712).

     நாண்எறி கைச்செறிகட்டி - கட்டி - வில் நாணில்
அம்புபூட்டி எய்வதற்குதவியாக உள்ள கைக்கோதையைக்கட்டி,
கைச்செறிகட்டி - கைக்கோதை, விரலுறை, கைவிரற்சட்டை, இது
அம்பு பூட்டுதலாலும், இறுகக்கட்டிய புலிநரம்பு முதலியவற்றானியன்ற
வின்னாணை வலித்தெய்வதனாலும், விரலுக்கு ஊறு உண்டாகாதபடி
காவலாக விரலில் அணியும் ஒரு உறைபோன்றது. இது காழகம்,
விரற்றலைப் புட்டில் முதலிய பெயர்களாற் பழந்தமிழ்
இலக்கியங்களிற் பேசப்படும். இந்நாள் நவீனர் Gloves
என்பதொருவகைக் கைச்சட்டை அணிவதும், தையல்வேலை
செய்வோர் விரல் முனையில் உலோகக்குப்பாயம் அணிவதும்
காண்க. ஆயின் கைக்கோதை விரலின் அளவில் நிற்பதாய்க்
கையில்வரிந்து கட்டப்படுவது என்க. 60