710.
அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி,
நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ்
விரையிற்றுவர் வார்விசி போக்கி யமைத்து வீக்கி,
61

     710. (இ-ள்.) வெளிப்படை. இடையில், மேலே .
மயிற்பீலியமைந்த புலித்தோலாடையின்மேல் கடல் அலைகளிற்
பொருந்தும் வெள்ளிய பலகறைகளைக் கோத்து விளிம்பாகக்
(ஓரத்திற்) கட்டி, வரிசையாக விளங்கும் நீண்ட உடை தோலினையும்
சுரிகையின் புறத்துச் சூழ்கின்ற வாசனையுடன் துவரேற்றிய வாரையும்
சேரக்கட்டும் விசியைப் பூட்டி அமைத்துக்கட்டி, 61

     710. (வி-ரை.) சரணத்து உரியாடை - சரணம் - மயிற்பீலி.
உரியாடை - புலி முதலியவற்றின் தோலாலாகிய ஆடை. மரவுரி
என்பாருமுண்டு. "தோல் தழைத்த நீடு தானையார்" (717) எனப்
பின்னர்க்கூறுவதால் இவர்கள் தோலாடை அணிவது வழக்கென்க.
இதற்குக் காலோடு கழற்றியணியும் ஆடை வகை என்பாருமுண்டு.

     படு - உண்டாகும். வெள்ளலகு - வெள்ளிய பலகறை.
அலகு - எண்ணல் அளவு. அதற்குக் கருவியாதலின் பலகறைக்கு
ஆகுபெயர்.

     ஆர்த்து விளிம்பு சேர்த்தி - சிறிய பலகறைகளை
ஆடையின் ஓரத்தில் விளிம்பாக வரிசையாகக்கட்டி யமைத்து.
நிரையிற் பொலிநீள் - வரிசையாக விளங்கிய நீண்ட உடைதோல்
- உரியாடையின்மேல் கட்டும்தோலில். சுரிகைப்புறஞ்சூழ்
விரையில் துவர்வார் விசிபோக்கி
- உடைவாளின் புறத்துச்சூழ்ந்த
உரையைச் சுற்றி வாசனை பொருந்திய பவளம்போன்ற
செஞ்சாயமேற்றியவாரினால் விசிபோக்கிக் கட்டி. புறம் - புறத்தே
சூழ்ந்த உறை. ஆகுபெயர். விசி - விசியை. விசி இணைத்துக்
கட்டும் கயிறு போன்ற தோல். விசித்தல் - கட்டுதல்.
விரையில்துவர் - தோல்வாரின் துர்நரற்றம் போக்கி அது
நீடுசெல்லுதற்குரிய பதம்தருதற்குத் துவர்ப்பட்டையில் ஊறவைப்பர்.
அழகின் பொருட்டுஞ் செஞ்சாயமேற்றுவர். நிரையிற் பொலிநீள் -
உடை தோலிற்கு அடைமொழி. உடைதோலும் சுரிகையும்
நாகனாற்றரப்பட்ட அரசடையாளமாதலின் அடைமொழிகளாற்
சிறப்பித்தார். 702 பார்க்க. விசிபோக்கி அமைத்து வீக்கி
என்றது விசிவாரினைப்புகுத்தித் தைத்ததுபோல அமைவுற
இழுத்துக்கட்டி. "போர்வைத்தோல் விசிவார்" (திருநாளைப்போவார்
புராணம் - 14) என்றது காண்க. 61