711.
|
வீரக்கழல்
காலின் விளங்க வணிந்து பாதஞ்
சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத்திருத் தாண்மடித் தேற்றி வியந்து தாங்கி, 62
|
711.
(இ-ள்.) வெளிப்படை. காலில்,
வீரக்கழல் விளங்கும்படி
அணிந்து, திருப்பாதங்களிற், பொருந்தத்தொடுகின்ற நீடுசெருப்பு
விருப்புவாய்ப்ப, பாரமாகிய பெரிய வில்லினை வலங்கொண்டு
பணிந்து, திண்ணனார், தமது திருத்தாள். பொருந்த வைத்துவளைத்து
நாணேற்றி வியந்து தாங்கி, 62
711. (வி-ரை.)
காலில் வீரக்கழல் அணிந்து எனவும்,
தொடுநீடுசெருப்பு பாதம்சேர எனவும் மாற்றி
யுரைத்துக்கொள்க.
செருப்புத்தொடுதல் என்பது வழக்கு. முன் சொல்லிய ஏனை அணி
ஆடை வகைகள் அந்தந்த அங்கங்களின்மீது சேர்த்து
அணியப்படுவனவாகச், செருப்பு, அவ்வாறல்லாது பாதமாகிய
அங்கம் அதனுட் சென்று சேர்தலால் செருப்புப் பாதம்சேர
என்னாது பாதம் செருப்புச் சேர என்றமைத்தனர்.
நீடு செருப்பு
- இறைவனது திருமுடியிலும் திருமுகத்திற் கண்ணருகிலும்
ஏறும் பெருமையும், அதுபற்றி "செருப்புற்ற சீரடி" (திருவாசகம்)
முதலிய அருண்ஞானத் திருவாக்குக்களில் ஏறித் துதிக்கப்பெற்ற
பெருமையும் நோக்கி நீடு என்று சிறப்பித்தார்.
நீடுதல் பெருமையால்
நீடியிருத்தல்.
விருப்பு
வாய்ப்ப (வில்லினைப்) பணிந்து என்று
கூட்டியுரைப்பினுமமையும்.
பாரப்பெருவில்
- ஏந்துதற்கரியதாய் மிகப் பாரமுடைய
வில். இது மேரு மலைபோன்றதென (681) முன்னர்க்கூறியது காண்க.
வில்வலங்கொண்டு பணிந்து - அவ்வத் தொழிலாளரும் தத்தம்
தொழிற்குரிய கருவிகளை வணங்கித் தொழிலிற் புகுவது இன்றும்
வழக்கமாதல் காண்க. ஆயுதபூசை என்ற சிறப்பாகிய திருநாட்
கொண்டாட்டமும் காண்க. முன்னரும் "விதிமுறை வணங்கி" (690)
என்றார். இதுபற்றியே இங்குத் திண்ணனாரும் கன்னிவேட்டை
புகுவதன் முன் நமது வில்லினைச் சுற்றி வலம்வந்து வணங்கி
ஏந்தினார் என்க.
விருப்பு
வாய்ப்ப - தாம்புகும் காரியமாகிய வேட்டையானது
தாம் விரும்பிய பலன் தருவதாக என்று பிரார்த்தித்து. இது
இப்போது விரும்பிய வேட்டை வினையோடொழியாது முன்
பிறவியில் கயிலையில் அருச்சுனனா யிருந்து தவஞ் செய்த
காலையில் விரும்பிவேண்டிய முத்தியாகிய பேறு வாய்க்கும்படி
என்றதோருட்குறிப்பும் தருதலும், அது வாய்த்தற்கும் இவ்வில்லே
துணையாதலும் காண்க.
சார
- வில்லினைவணங்கி அது திருத்தாளினைச்சார மடுத்து
என்றதாம். திருத்தாள் மடுத்து ஏற்றி -
வில்லினைத் தாளில்வைத்து
நாண்ஏற்றி. தாளில் மடுத்தல் வில்லின் இருதலையும்பற்றிவளைத்து
இறுகும்படி நாண்கட்டும் பொருட்டாம்.
வியந்து
- தெய்வந் துதித்து. "வியந்தலறேன்" (திருவாசகம் -
திருச்சதகம் - 12); "வியவேனயவேன் றெய்வ மிக்கனவே"
(திருக்கோவையார் - 6).
பாரப்பொரு
- மடித்தேற்றி - என்பனவும் பாடல்கள். 62
|