712.
அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க வோங்கித்
துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப
வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத்தலத் தாற்றட விச்சிறு நாணெ றிந்தார்.
 63

     712. (இ-ள்.) வெளிப்படை. அங்கு, அப்பொழுது, புவனத்தின்
துன்ப நீங்கவும், ஒங்கி உயர்ந்த பெரிய காளமேகம்போன்று
துண்ணென்றொலிப்பவும், கொடிய கோபக் கண்ணுடைய
பெருவிலங்குகள் விலகிநீங்கவும், தமது செங்கைத்தலத்தினால்,
தடவி வில்லிற் சிறுநாணொலி செய்தார். 63

     இவ்வேழுபாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.

     நாயனாரது வேட்டைக்கோலத்தை உச்சிமுதல்
உள்ளங்கால்வரை தொடர்பாய் அலங்கரித்துக் காட்டுகின்றாராதலின்
இடையீடின்றி ஒருதொடர்பாய்க் கொண்டு முடித்தார். கோலஞ்
செய்யும் வினைஞர் (705) செய்வன அக்கோல முற்றியபின்னன்றி
வினை முற்றுப்பெறாது. அதுவரை செய்கின்றவை யாவும்
வினையெஞ்சியே நிற்பன. ஆதலின் இடைப்பட்ட செயல்களை
யெல்லாம், சேர்த்திச் - செய்து - என்பனவாதி வினையெச்சங்களாற்
கூறினர். வினைஞரும் தாமுமாகக் கோலஞ்செய்யும் வினை
திண்ணனார் கோலம்பூண்டு வில் ஏந்தி நாணெறிகொண்டதோடு
உடன்கூடி முற்றுப்பெறுவதால் அவ்வகையே நாணெறிந்தார் என
இவர்வினையோடு சேர்த்தி வினைமுற்றுத்தந்து முடித்தனர் என்க.
இது பொருளமைதிக்கேற்ற சொல்லமைதியாம்.

     இதுவேயன்றி இங்கு ஆசிரியர் கைக்கொண்ட யாப்பமைதியும்
கண்டுகளிகூர்க. 691 முதல் 705 வரை கதை சொல்லிச் செலுத்தும்
வகையால் யாப்புச் சென்றது. இங்கு நாயனார் வேட்டைக்கோலம்
பூண்டு புறப்படும் வரை 706 முதல் 716 வரை பாட்டுக்கள்
சித்திரித்துப் புறப்படும் பொருள் குறிக்கும் வகையாலியன்ற ஐஞ்சீர்
விருத்தத்தாற் கூறினார். அதன்மேல் 717 முதல் 727 வரை உள்ள
பாட்டுக்கள் வேடர் கூட்டம் ஊக்கத்துடன் வேட்டைக்கு
எழுந்துசெல்வதால் அதற்கேற்ற வலிய ஒசை மிக்க எழுசீர்ச்
சந்தப்பாவிலும், அதன்மேல் வேட்டையாடி ஒடிக்கொல்லும் வேட்டை
வினைகளை 728 முதல் 740 வரை பாட்டுக்களில் அவற்றிற்குரிய
தங்கிசை முடுகிசை கலந்த நாற்சீர்ச் சந்தப்பாவிலும், யாத்த இசையும்
சொல்லும் பொருளும் பொருந்தும் அமைதியும் காணத்தக்கன.
அதன்மேல் "அன்பெனு மாறு கரையது புரள, நன்புல னொன்றி
நாதவென் றரற்றும்" சரிதப் பகுதியை இயல்பின்
ஆற்றொழுக்கிற்செல்லும் அறுசீர் விருத்தத்தால் 741 முதல் 782
வரையில் உள்ளபாட்டுக்களாற் கூறினார். அதன்பின் நாற்பாதத்தில்
மிக்க ஞானபாதத்தாலே நாற்றானத் தொருவனாகிய இறைவனை
அணைந்து நிலைபெறநிற்கின்ற சரிதத் தொடர்பை முன்னையதனினும்
மிக்க இயலொழுக்குடைய நாற்சீர்க்கொச்சகக்கலிப்பாவினாற்
கூறிமுடித்த அழகும் அமைதியும் காண்க. நாற்சீர்க்கொச்சகக்கலிப்பா
ஆசிரியர் திருவாக்கில் மிக அழகுற அமைவதொன்றாம்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார்,
ஆனாயநாயனார் முதலிய பல பெரியார்களும்
இறைவன்றிருவடிசேர்ந்த சரிதங்கூறும் பகுதிகளை இதுபோலவே
கொச்சகக்கலிப்பாவிலே ஆசிரியர் கூறுவதும் காண்க.

     712. (வி-ரை.) புவனத்து இடர்வாங்க - உலகத்தின்
துன்பம் நீங்க. திண்ணப்பனார் இனிக் கண்ணப்பராவார்; ஆகவே,
அவரது திருவடிபிடித்து உலகம் உய்ய. புவனத்து - உலகத்தில்.
இடர்வாங்க - உயிர்கள் துன்பநீங்கிஉய்ய. வாங்குதல் - நீங்குதல்
என்றபொருளில் வந்தது. அந்நாட்டின் துன்பநீங்க
என்றுரைப்பாருமுண்டு.

     துங்கம் - பெருமை. உயர்ச்சி. பெருமாமழை - மிகப்பெரிய
மேகம். மழை - மழைமுழக்கம். ஆகுபெயர்.

     வெஞ்சினக்கண் நீடு விலங்கு என மாற்றுக. நீடு விலங்கு
- பெருவிலங்குகள். நெடுந்தூரத்தில் இருக்கும் விலங்குகள்
என்றலுமாம். சிறப்பும்மை தொக்கது. விலங்கு சாதி யொருமை.
நீங்க
- தாந்தாம் பதுங்கியிருந்த இடங்களினின்றும் நீங்க.

     சிறுநாண்எறிதல் - முதலில் நாண்ஒலிகொள்ளுதல் வில்லின்
நாணை எறிந்து அம்பு எய்வதற்கான பதம் பார்த்தல்.

     சிறு - சிறிதே எறிந்து அமைதிபார்த்தல் குறித்தது. நாண்
சிறிது எறிந்தார் என்க. நாண் சிறிதென்பதன்று. யாழ் முதலிய நரம்பு
இசைக்கருவிகளை மிழற்றும் முன்னர் நாணெறிந்து
சிற்றொலிகொள்ளும் வழக்கும் காண்க.

     706 முதல் 712 வரை உள்ள இவ்வெழுபாட்டுக்களாலும் ஒரு
தொடர்பாய்த் திண்ணனாரைத் தலைமுதல் பாதம் வரை
அலங்கரித்து வேட்டைக்குரிய வில்வேடத்துடன் எழும் வகையிற்
றாமும் தரிசித்து ஆசிரியர் நமக்குங் காட்கின்றார்.

     தலையில், சுருண்ட குஞ்சி நிமிர்ந்து பொங்கக் கட்டினார்;
அதில் தளிராலியன்ற கொண்டைமாலை சூட்டினார்; அதில்
மயிற்பீலி செருகினார்; தளிர் மாலையின்மேல் முல்லைமலர்மாலையும்
அதிற் குறிஞ்சிப்பூவும் வெட்சிப்பூவும் பின்புறம் சூட்டினார்;

     முன்னெற்றியின்மேல், மயிலிறகின் அடிப்புறத்துடன் குன்றி
மணிவைத்து முறுக்கிய மயிர்க்கயிற்றைப் பொருந்தச்சாத்தினார்; காதுகளில் முழுமதிபோல விளங்கும் வெண்சங்கத்
தோடுகளணிந்தார்;

     கழுத்தில், வெள்ளைப்பலகறைமாலையும், சங்கு மணிகளும்,
பிறைத்துண்டம் போன்ற பன்றிக்கொம்புகளும் இடையிடை
தொங்கவைத்து ஒருசேர அமைத்த தட்டையாகிய வேங்கைத்
தோலினாலாகிய சன்னவீரம் அணிந்தார்;

     மார்பில், யானைத்தந்தத்தை ஒழுங்குபெற அரிந்து
சிறுமணிகளாக்கிக் கோத்த மாலை சாத்தினார்;

     தோள்களில், வாகுவலயங்களும், முன்கைகளிற்
கங்கணங்களும், விரலுக்குக் கைக்கோதையும் பூட்டினார்;

     இடுப்பில், மயிற்பீலிசேர்த்த புலித்தோலாடை சாத்தி
அதனைப் பலகறைகளால் ஒழுங்குபெற விளிம்புசேர்த்தார்;
அதன்மேல் உடைதோல் பூண்டார்; சுரிகைப் புறஞ்சூழ
அவ்வுடைதோலுடன் சேர்த்துத் துவர்வார்விசித்து வீக்கினார்;

     காலில், வீரக்கழல் கட்டினார்; திருப்பாதங்கள்
நீடுசெருப்பைப் பொருந்தின; பெருவில்லைப்பணிந்து
தாள்மடுத்துத்தாங்கி நாணேற்றிச் சிறுநாணொலி கொண்டார்.

     இவ்வாறு வேட்டைக்கோலத்தை உச்சிமுதல் கால்வரை
விரிவாய்ச் சித்திரித்து "இவன் இறைவன் என்று எழுதிக்
காட்"டியதென்னை? எனின், இக்கோலத்துடனே நாயனார்
காளத்தியப்பரைக் காண்கின்றார்; கண்டு கண்ணப்பராய்
அவ்விறைவனுடன் ஒன்றி அவர்தம் வலப்பக்கத்தே என்றும்
மன்னி நிற்கின்றார்; இக்கோலமே பின்னர்த் திருஞானசம்பந்த
மூர்த்திகள் முதலிய ஆசாரியன்மார்கள்யாவரும் கண்டு தரிசித்துத்
துதித்தார்கள் ஆதலின் என்க. இதுபோலவே, வேய்ங்குழற்
கானவிசையமுதம் பரப்பி நின்ற நிலையிலே கயிலை சென்ற
ஆனாயநாயனாரையும் அவர் ஆநிரைகாக்கப் புறம்போந்தபோது
உள்ள கோலத்தைத்தலைமுதற்கால்வரை அலங்கரித்து ஆசிரியர்
கண்டுகாட்டிய அமைதியும் இறைவன் நேரேவந்து தடுத்தாண்ட
ஆளுடைய நம்பிகளது திருமணக்கோலத்தை விரிவாய்
அலங்கரித்துக் கண்டுகாட்டிய அழகும், திருமணத்தில்
நல்லூர்ப்பெருமணத்தானை அடைந்து "போதநிலை முடிந்தவழிப்
புக்கொன்றியுடனா"கிய ஆளுடையபிள்ளையாரது
திருமணக்கோலத்தையும் பாதமுதற் சிரம்வரை முத்ததணிகளால்
அலங்கரித்துக் கண்டுகாட்டிய அருளிப்பாடும் இங்கு வைத்து
உண்மை காண்க.

     குஞ்சி நிமிர்ந்துபொங்க - பீலி சேர்த்தி - சீர்கொளச் -
செய்து - சாத்தி - வைக - சேர - தூங்கிட - தயங்க - தாழ -
மின்ன (ச்செய்து) - கட்டி - சேர்த்தி - போக்கி - வீக்கி -
அணிந்து - சேர - வலங்கொண்டு பணிந்து . ஏற்றி - தாங்கி -
வாங்க - ஒலிப்ப - நீங்க நாணெறிந்தார் - என இவ்வேழு
பாட்டுக்களையுந் தொடர்ந்து முடித்துக்கொள்க. 63