1220.
குலவு மறையும் பலகலையுங்கொளுத்து வதன்முன்
                             கொண்டமைந்து
நிலவு முணர்வின் றிறங்கண்டு நிறுவு மறையோ
                                ரதிசயித்தார்;
"அலகில் கலையின் பொருட்கெல்லை யாடுங் கழலே"
                             யெனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினிற் றெளிந்தார் சிறிய
                             பெருந்தகையார்.
15

     (இ-ள்.) வெளிப்படை. அறிவு விளங்குதற்கு ஏதுவாகிய
மறைகளையும் அவைகளை உள்ளிட்ட பல கலைகளையும்
ஆசிரியர்கள் கொளுத்துவதன் முன்னே தமது உள்ளத்திற்
கொண்டு அமைந்து நிலவுகின்ற அறிவின் திறத்தினைக்கண்டு,
போதிக்கின்ற ஆசிரியர்கள் அதிசயித்தனர். அளவில்லாத
கலைகளிற் குறிக்கப்படும் பொருளுக்கொல்லாம்
எல்லையாயுள்ளபொருள் அருட்பெருங் கூத்தியற்றும்
திருவடியேயாம் என்று கொண்ட உறுதிமிக்க
தமது சிந்தையினால் அந்தச் சிறிய பெருந்தகையாளர் தெளிந்து
கொண்டனர்.

     (வி-ரை.) குலவும் என்ற பெயரெச்சம் மறை என்னும்
ஏதுப்பெயர் கொண்டது. அறிவு எனக் குலவுதற்கு வினைமுதல்
வருவித்துரைக்க. "குலாத்தில்லையாண்டான்" (திருவாசகம்),
"கூனுங் குருடுந் தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம்"
(கூற்றுவர் - புராணம் - 9), "குலாவு பாதம் விளக்கியே" (443)
முதலியவைபார்க்க.

     கொளுத்துதல் - கொள்ளச் செய்தல். சொல்லுதல் என்ப.
தீக்கொளுத்து என்ற பொருளில் பெரும்பாலும் வழங்கும்
இச்சொல் தீயைக் கொள்ளச் செய்தல் என்ற பொருளில்
வருவதாம். இங்கும் அறிவாகிய தீயைக்கொளுவி அறியாமையைப்
போக்குதல் என்ற குறிப்பும் காணப்படும்.

     கொண்டு அமைந்து அறிவின் நிலவும் திறம் - "முந்தை
யறிவின் தொடர்ச்சி யினான் முகைத்த மலரின் வாசம்போல்" (1218)
என்ற தன்மை.

     முன் - முன்னரே. ஏகாரம் தொக்கது. இவ்வாறு முற்பிறப்பிற்
கற்ற கல்வியறிவு, இப்பிறவியில் கலைபயில்வதன் முன்பே சில
மக்களிடை விளங்குதல் இந்நாளிலும் அரிதின் காணப்படுவதறிக.

     நிறுவும் மறையோர் - ஓதுவிக்கும் ஆசிரியராகிய
பிராமணர்கள். நிறுவுதல் - கலைப்பயிற்சியை உணர்வினுள்
நிற்கச்செய்தல்.

     அதிசயித்தார் - அதிசயமாவது காரணம்இன்னதென்றறியுமாறு
கண் கூடாகக் கண்ட பெருமித உணர்ச்சி, "அதிசயம் கண்டாமே"
(திருவாசகம்). இது போதித்த ஆசிரியர்களது மனநிலை.

     தெளிந்தார் - இது போதிக்கப்பெற்ற மாணவராகிய
விசாரசருமரின் மன நிலை. " ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும்
பெருமை யாசானும்" (1208) என்றபடி ஆசானும் மாணவரும் ஒரு
சேரக் காண நிற்பவர்களாதலின் இருவரது மனநிலைகளும் ஒரு
பாட்டில் ஒரு சேரக் கூறிய இயைபு காண்க.

     அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே
என
- இது எல்லாக் கலைகளாலும் முடிவாகக் கொண்ட துணிபு.
எவ்வகைக் கலையும் ஓரோர் பொருளை நிச்சயிப்பன; ஆதலின்
எல்லாக் கலைகளாலும் நிச்சயிக்கப்படும் எல்லாப்பொருள்களும்
முடிந்த இடம் திருவடி என்க. முடிந்த இடமாவது அவை யாவும்
போய்ச் சேர்ந்து அதற்குமேல் இன்னதென்றறிய முடியாது ஓய்ந்து
நிற்கும் இடம் என்பதாம். "உலகுய்ய நடமாடு, மெல்லையினைத்
தலைப்பட்டார் யாவர்களுங் கண்டிலரால்" (1075) என்றது காண்க.
"பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர், போதார்
புனைமுடியு மெல்லாப் பொருண் முடிபே" (திருவெம்பாவை - 10)
என்ற திருவாசகங்களும் இக்கருத்துப் பற்றியன. கற்றதனாலாய
பயன் நற்றாள் தொழுதல் என்பது திருக்குறட் கருத்துமாம்.

     எனச் சிந்தையினில் - தெளிந்தார் - என்று கூட்டுக.
கொண்ட செலவு மிகுந்த சிந்தை - முன்னரே உட்கொண்ட
உணர்ச்சி போந்திருந்த சிந்தை. செலவு - செல்லுதல். செலவு
மிகுதலாவது
"அறிவின், எல்லா மியைந்த" (1219) என்ற கருத்து;
அதாவது உறைப்பு முற்றியிருத்தல்.

     தெளிந்தார் - ஐயமின்றித் துணிந்தார். "உள்ளத்தின்ஒருமை
நினைவால்" (1242), "கருத்தின் றிடநேர் நிற்கும்" (1221), "ஒன்று
முள்ளத் துண்மையினால்" (1252), "மண்டு காதலருச்சனையில்
வைத்தார் மற்றொன் றறிந்திலரால்" (1254) எனப் பின்வருவன
காண்க.

     சிறிய பெருந்தகையார் - முரண்தொடை. சிறுமை
பருவத்தாலும் உருவத்தாலும், பெருந்தகைமை - உள்ளத்தின்
உயர்வாலும் ஆகும். "அச்சிறியபெருந்தகையார்" (திருஞான -
புரா - 73) என்று இவ்வாறே ஆளுடைய பிள்ளையாரைக்
கூறுதலும் காண்க. 15