714.
மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதிற்
பானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன்
றேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள
கானப்பலி நேர்கட வுட் பொறை யாட்டி வந்தாள்.
65

     (இ-ள்.) வெளிப்படை. பெரிய வில்லேந்திய வேடர்கள்
வேட்டைக்கு ஆயத்தமாய் அவர்பக்கம் நெருங்கியபோதில்
பெருந்தொகுதியாகிய நீலோற்பல மலர்களின் ஒளிபோன்று வீசுகின்ற
நீலவொளியுடைய திண்ணனார் முன்பு, தேனும் நல்லதசையும்
கள்ளும் சருவும் பொரியும் இன்னும் இவைபோன்ற பிறவுமாகிய
பொருள்களாற் காடுபலியூட்டிய தேவராட்டி வந்தனள்.

     (வி-ரை.) மானம் - பெருமை. மானச்சிலை - பெரியவில்.
"மானமா மடப்பிடி வன்கையா லலகிட," "மானக் கயிலை மலையாய்
போற்றி" என்பனவாதி திருவாக்குகள் காண்க. மானவேடர்
என்றுகூட்டிக் குலப்பெருமையுடைய வேடர் என்றுரைத்தலுமாம்.
இவர்கள் குலப்பெருமையுடைமை கந்தபுராணத்தில் வள்ளியம்மையார்
திருமணவரலாற்றில் முருகப்பிரானை வேடர்கள் வேண்டுவதாகக்
கூறும்.

"அடுந்திற லெயினர் சேரி யளித்திடு நீயே யெங்கண்
மடந்தையைக் கரவில் வௌவி வரம்பினை யழித்துத் தீரா
நெடுந்தனிப் பழிய தொன்று நிறுவினை; புதல்வர் கொள்ள
விடந்தனை யன்னை யூட்டின் விலக்கிடு கின்றா ருண்டோ?"(191)

என்ற திருப்பாட்டானறிக. மானவேடர் (722) என்பதுங் காண்க.

     மருங்கு நெருங்குதல் - திண்ணனாரோடுகூடி வேட்டைக்கு
ஆயத்தமாக இவர்களும் புறப்படுவதற்காக என்க.

     மாக்குலப் பானல் மலரில் பானல் - நீலோற்பலம் - மா
- குலம்
- தொகுதியின் பெருமை குறித்தது. மலர்களின்
பெருங்கூட்டம். "செந்தாமரைக்கா டனையமேனி" (திருவாசகம்) இல்
- ஒப்புப் பொருளில் வந்த ஐந்தனுருபு. மலர்க்குலத்தில் என்றது
அதன் ஒளிபோல என்றதாம். ஆகுபெயர்.

     பானற்குல மலரிற்படர் சோதியார் - அளவில்லாத
நீலோற்பலமலர்கள் ஒருங்கே புதிதின்மலர்ந்து ஒளிகாட்டி
வருதல்போன்ற கரியதாய்வீசும் ஒளியுடைய திண்ணனார்.
கருமையிலும் விரிகின்றஒளியும் அழகும் உளதென்பார் நீலமலரின்
ஒளியை உவமித்தார். காளமேகம் (664), மைவிரவு நறுங்குஞ்சி
வாசக் கண்ணி மணிநீல மலை (701), கருங்கதிர் விரிக்குமேனி (665)
என்றவை காண்க. இப்போது புறப்படும் வேட்டையின்பின்னர்ச்
சோதியாகிய இறைவனை அடையநின்றாராதலின் இங்குச் சோதியார்
என்றார்.

     தேன் முதலியவை வனதெய்வங்களுக்கு ஊட்டத் தேவராட்டி
கொண்டு போன பலிப்பண்டங்கள். இவற்றை, வேண்டுவன
குறைவின்றி (700) என்று முன்னர்த் தொகுத்துக்கூறிய ஆசிரியர்
இங்கு விரித்து கூறினார். (698-ல் மென்றசை முதலியன
தேவராட்டிக்கு நாகன்வைத்த உணவுப்படித்திட்டம்) தேவர்க்கு
ஊட்டும் பலிப் பொருள்களை நிவேதிக்குமுன்னர்ப் பலரும்
பார்க்கலாகாதென்ற முறைபற்றி முன்னர் வேண்டுவன என்றமைந்த
ஆசிரியர், நிவேதித்தபின் தேவரது அருட்பிரசாதங்களாய் இவற்றைப்
பலருங்காணலாம் என்றதுபற்றி விரித்துக் காட்டிய மரபுங்காண்க.

     கானப்பலி - முன்னர்க் காடுபலி (699) என்றது காண்க.

     கடவுட் பொறையாட்டி - தேவராட்டி. பொறையாட்டி -
தேவரது படிமத்தையும் ஆவேசத்தினையும் தன்னிடத்துத்
தாங்கியவள். 65