715.
|
நின்றெங்கு
மொய்க்குஞ் சிலைவேடர்க ணீங்கப் புக்குச்
சென்றங்கு வள்ள றிருநெற்றியிற் சேடை சாத்தி
"உன்றந்தை தந்தைக்கு மிந்நன்மைக ளுள்ள வல்ல
ஈன்றும்பெரி துன்விற னம்மள வன்றி" தென்றாள். 66 |
(இ-ள்.)
வெளிப்படை. (வந்த தேவராட்டி) எவ்விடத்துங்
கூடிநின்று மொய்க்கும் வில்வேடர்கள் ஒதுங்க, வள்ளலாராகிய
திண்ணனார்பக்கத்துச் சென்று அவரது திருநெற்றியிலே
அட்சதைசாத்தி "உனது தந்தைதந்தைக்கும் இந்த நன்மைகள்
உள்ளனவல்ல; உன்வலிமை மிகவும் பெரிதாகும்; இது நம்மளவில்
அடங்காது" என்று ஆசிர்வதித்தாள்.
(வி-ரை.)
எங்கும் மொய்க்கும் - திண்ணனாருடன்
வேட்டைக்குப்போக நாற்புறமும் - நெருங்கிச்சூழும். மேற்பாட்டில்
மருங்குநெருங்கு என்றதனை இங்கு மொய்க்கும் என்றார்.
மொய்த்தல் - நெருங்கிச்சூழ்தல்.
சிலைவேடர்
நீங்க - கொடியவில் வேடரேயாயினும்
தேவராட்டியினிடம் ஒழுகும் முறையில் வழிதந்து நீங்க.
வள்ளல்
- தற்பயன் குறியாது வரையாது வேண்டுவனவற்றை
யெல்லாம் நல்கும் அன்புடையார். இங்கு, இனி இறைவனுக்குத் தமது
கண்ணைக் கொடுக்க நிற்கும் இவரினும் வள்ளலாவார் பிறரில்லை
என்க.
சேடை
- 697 பார்க்க. சேடை நெற்றியிற் சாத்துதல்
வாழ்த்துதற்குரிய செயல். தலையிற்றூவுதலும் மரபு.
உன்
தந்தை..........அன்றிது - தேவராட்டி சொல்லிய
ஆசிமொழிகள் முழுதும் உண்மைக் குறிப்புப்பெற நிற்றல் காண்க.
நாயனாரது தந்தை தந்தை முதலிய முந்தையோர் எவர்க்கும்
இதுபோன்ற நன்மைகள் இல. இவரதுவிறல் வேடர்மரபின்
வலிமையளவில் அமைவதன்றாகி மிகப்பெரியதாய்
நிற்குந்தன்மையைப் பின்னர்த் தங்கள் குறிவாராமற் கைவிட்டார்
(802), அன்புபிழம் பாய்த்திரிவா ரவர் கருத்தி னளவினரோ (803)
என்பவற்றுட் காண்க. இவள் வழிபடும் வனதெய்வங்கள் இவளது
வாக்கில்நின்று உண்மையை வெளிப்படுத்தித் திண்ணனாரைப்
போற்றிநின்ற குறிப்புங் காண்க.
உன்
தந்தை தந்தைக்கும் - என்றதனால் நாகனும்
அவன்றந்தையும் கன்னி வேட்டையிற் புகும்போது இத்
தேவராட்டியே காடுபலியூட்டிவந்து சேடை சாத்தியவள் என்றும்,
அப்போதுகண்ட குறிகளைக் காட்டிலும் சிறந்தகுறிகள் இப்போது
கண்டனள் என்றும் கூறும் மகாலிங்கையரின் உரைப்பொருத்தம்
ஆராயத்தக்கது.
சின
வேடரை நீக்கி - என்பதும் பாடம். 66
|