718.
வன்றொ டர்ப்பி ணித்த பாசம் வன்கை மள்ளர்
                               கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்
சென்று நீளு மாறு போல்வ செய்ய நாவின் வாயவாய்
ஒன்றொ டொன்று நேர்ப டாம லோடு நாய்கண்
                              மாடெலாம்.
 69

     (இ-ள்.) வன்றொடர்.............கொள்ளவே -
வலியசங்கிலியிற்கட்டிய கயிற்றை வீரர்கள் வலியகையிற்
பிடித்துக்கொண்டிருக்கவே; நாய்கள் - நாய்கள்; வென்றி..........
வாயவாய் - வேடர்களது வில்லின்மீது பொருந்தும்
(விசயலட்சுமியின்) வெற்றிமங்கையினதுபாதம் முன்போய் நீள்வது
போல்வனவாகிய சிவந்தநாக்கள் தொங்கிய வாயினையுடையனவாகி;
மாடெலாம் - பக்கங்களிலெங்கும்; ஒன்றொடொன்று........ஓடும் -
ஒன்றொடொன்று பொருந்தாமல் ஓடும்.

     (வி-ரை.) வன்தொடர்ப்பிணித்த - தொடர் - சங்கிலி.
வேட்டை நாய்கள் மிக்க கோபமுடையவை. மக்கட்கும்
விலங்குகட்கும் ஊறுசெய்வன. அவற்றை உரியகாலத்து உரியவர்
கண்காணிப்பிலே கட்டவிழ்த்து விடுவதன்றி ஏனைக் காலத்துக்
கட்டிவைத்தல் வழக்கு. அதுபற்றி, வேட்டையில் விலங்குகளைத்
துரத்திப்பற்றவிடும்வரை இவைகளைப் பிணித்துக் கைப்பற்றிக்
கொண்டுபோயினர். இவர்களது வீட்டுமுன்றிலிற் கட்டிவைப்பதைக்,
"கொடுஞ்செவி ஞமலியார்த்த வன்றிரள் விளவின் கோட்டு" (652)
என்றும், வேட்டைக்குக் கொண்டு போகும் இவ்விடத்து, "வன்றொ
டர்ப்பிணித்த பாசம் வன்கை மள்ளர் கொள்ளவே" என்றும், பின்னர்
வேட்டையிற் கட்டு அவிழ்த்துவிட்டு விலங்குகளைப் பற்றவிட்டுப்
பயன்படுத்துவதனை "மா அஞ்சு வித்தடர்க்கு நாய்க ளட்டமாக
விட்டு" (725) என்றும் கூறியது காண்க.

     மள்ளர் வன்கை கொள்ள எனமாற்றுக. பாசம் - கயிறு.
நாயைச் சங்கிலியாற் பிணித்து அச்சங்கிலியைச் சேர்த்துப்
பூட்டியகயிற்றை மள்ளர் கையிற் கொண்டனர். இவ்வாறு கையிற்
பற்றிக்கொண்டு போகும்பொழுது ஒழுங்கின்றிப் பலபுறமும் ஓடும்
அவற்றின் இயல்பினை இங்கு ஒன்றொடொன்று நேர்படாமல்
ஓடும் நாய்கள்
என்ற தன்மை நவிற்சியணியின் அழகு காண்க.
நாய்பிடித்துச் செல்வோரும் அதனை நோக்கும் விழியுடையோரும்
இத்தன்மையணியின் சுவையை நன்கறிவர். எருது - குதிரை முதலிய
பிராணிகளைப்போல நாய்கள் இனமாகக் கூடிவாழு மியல்புடையன
அல்ல. நாய்கள் "சுவஜாதிவைரி" என்றதொரு பழமொழியும் உண்டு.
ஆதலின் அவை ஒழுங்குபடச் செல்லா என்க.

     வென்றிமங்கை - வெற்றிக்கு அதிதெய்வமாகிய இலக்குமி.
இலக்குமிகள் எண்மர். அவருள் இங்குக் குறிக்கப்பட்டவர்
விசயலட்சுமி என்பர். வெற்றி மங்கையின் பாதம் வில்லின் மீது
தங்குதல் என்றது வெற்றி அவர்களது வில்லுக்கு உளதாம் என்றபடி.
வில்லினைப் பூட்டிக் குறிவைத்து எய்ய, எய்த பொருள்
குறிபிழையாது இவர்களுடை யதேயாக ஆக்குதலின் வென்றிமங்கை
மேவும்
என்றார். வேட்டைநாய்களின் சிவந்து நீண்ட மெல்லியவான
நாக்கள் வெற்றிமங்கையின் பாதங்கள் போல்வன என்றார். மெய்யும்
உருவும் பற்றிய உவமம். போல்வ செய்ய - போல்வனவாகிய
சிவந்த.

     மாடுஎலாம் - வேடர்பலரும் பலநாய்களைக்
கொணர்ந்தார்களாதலின் பக்க மெங்கும் என்றார். அண்ணலார்முன்
வேடர்கூட்டம் செல்ல, அவ்வேடர் கைப்பற்றிய நாய்கள்
பக்கங்களிற் சென்றன.

     மீளுமாறு - என்பதும் பாடம். 69