719.
போர்வ லைச்சி லைத்தொ ழிற்பு றத்தி லேவி
                              ளைப்பவச்
சார்வ லைத்தொ டக்க றுக்க வேகு மையர்
                              தம்முனே
கார்வ லைப்ப டுத்த குன்று கான மாவ ளைக்கநீள்
வார்வ லைத்தி றஞ்சு மந்து வந்த வெற்பர்
                              முந்தினார்.
70

     (இ-ள்.) வெளிப்படை. போர்க்குரிய வலைத்தொழிலையும்
விற்றொழிலையும் புறத்திலே செய்ய அந்தச் (அநாதி) சார்பாகிய
வலையின்கட்டினை அறுக்கும்படி செல்கின்ற பெருமையுடைய
திண்ணனாரின் முன்னே, மேகங்கள் சூழ்ந்த மலையினும் வேட்டைக்
காடுகளினும் விலங்குகளை வளைத்தற்பொருட்டு நீண்ட
வார்களையும் வலைவகைகளையுஞ் சுமந்துகொண்டுவந்த
குன்றவர்கள் (இக்கூட்டத்தின்) முற்பட்டுச் சென்றனர்.

     (வி-ரை.) போர் - போர்க்குரிய. போர் - இங்கு வேட்டை
குறித்தது. வலைச்சிலைத்தொழில் - வலைகொண்டு மலையுங் காடும்
வளைத்தும், வில்லினைக் கொண்டு அம்பெய்தும் ஆடும் வேட்டைத்
தொழில். தொழில் என்பதை வலையோடுங் கூட்டுக.

     புறத்திலே - புறப்பொருள் என்றபேருங்காண்க.
ஊர்ப்புறத்தில் என்பாருமுண்டு.

     அச்சார்வலைத் தொடக்கு - அ - அந்த. அநாதியாகிய
அந்தப் பிறவிச் சார்பாகிய வலையின் கட்டு. பண்டறிசுட்டு.

     ஐயர் - பெரியவர். "ஐயரே யம்பலவ ரருளாலிப்
பொழுதணைந்தோம்" (திரு நாளை - புரா - 30), "ஐயர் நீரவ
தரித்திட விப்பதி யளவின்மா தவமுன்பு, செய்தவாறு" (திருஞான -
புரா - 179) என்பவை காண்க. ஐயர் என்ற சொல் பிறப்பு
மாத்திரையாய்நின்று இடுகுறியனவாய் வேதியர் என்றதொரு
சாதிகுறிப்பதாய் வழங்கும் இந்நாள் உலகவழக்குப் பிற்காலத்
தெழுந்தது போலும்.

     கார்வலைப் படுத்த குன்று கானம் - இவர்கள்
வேட்டைக்காடு காவல் செய்ய வலையால் வளைத்தற்குமுன், அது,
கார் - மேகம் என்ற வலையால் வளைத்துச் சூழப்பட்டுள்ளது
போன்ற தென்பதாம். குன்றுகானம் - குன்றும் அதைச்சார்ந்த
காடும். மா - அவற்றில் உள்ள விலங்குகளை. இவர்களது
வேட்டைச் சூழலிலிருந்து தப்பி ஓடாமலிருக்கும்பொருட்டும்,
அவ்வாறு ஓடுகின்றவற்றைப் பிணித்து அகப்படுத்திக்கொள்ளும்
பொருட்டும் வேட்டைக்காட்டைச் சுற்றி வலையிட்டுக் காவல்
செய்தல் மரபு. 724 பார்க்க.

     நீள் வார் வலை - நீண்ட வார்களும் வலைகளும்
உம்மைத்தொகை. புலி முதலிய பெருமிருகங்களும் தப்பி ஓடாமல்
அகப்படும் பொருட்டு நீண்ட வலியவார்களாற் பிணிக்கப்பட்ட
வலை. "வார்வலை மருங்கு தூங்க" (652) என இதனை
முதலிற்குறித்ததும் காண்க. வலைத்திறம் - பற்பலவகை வலைகள்.
சுமந்து இவ்வலைகள் நெடும்பரப்புக்காடு வளைக்க
வேண்டப்படுதலின் நீண்டனவாயும் பெரியனவாயும்
உள்ளனவாதலின் தாங்கற்கரிய பெருஞ்சுமையா. 70