721.
கோடு முன்பொ லிக்க வுங்கு றுங்க ணாகு ளிக்குலம்
மாடு சென்றி சைப்ப வும்ம ருங்கு பம்பை கொட்டவுஞ்
சேடு கொண்ட கைவி ளிச்சி றந்த வோசை செல்லவுங்
காடு கொண்டெ ழுந்த வேடு கைவ ளைந்து
                                சென்றதே.
72

     (இ-ள்.) வெளிப்படை. கொம்புகள் முன்னே ஒலிசெய்யவும்,
குறுகிய முக முடைய சிறுபறைகள் பக்கங்களிற்சென்று சத்திக்கவும்,
பக்கத்தில் பம்பை கொட்டவும், தொகையாகக்கூடிய
கைத்தட்டுதலினால் உளதாகிய சிறப்புடைய ஓசை செல்லவும்
பெருந்திரள் கொண்டெழுந்த வேட்டுவக்கூட்டம் அதனைப்
பலபக்கமும் வளைந்து சென்றது.

     (வி-ரை.) வேட்டையினை மேற்கொண்டுவந்த கூட்டம்
வேட்டைக் காட்டினை அணுகி அதனுட்புகும் செலவின் சிறப்பினை
இப்பாட்டாற்கூறிய ஆசிரியர் அதனை உவமையின்வைத்து
வரும்பாட்டால் விரிக்கின்றார்.

     கோடு முன்பு ஒலிக்க - இயங்களின்வகைகளிற் கொம்புகள்
முன் ஒலித்தல் செய்ய.

     குறுங்கண்........இசைப்ப - குறுங்கண் - குறுகிய
மேற்பரப்பு குலம் - இங்குத் தொகுதியுணர்த்திற்று. மாடு சென்று
இசைப்ப
- இவ்வகைப் பறை ஏந்தியோர் பக்கங்களிற் சென்று
அவற்றை முழக்குவர். இசைப்பவரது செல்லுதலைப் பறையின்மேல்
ஏற்றிக் கூறினார். பம்பை - இருமுகமுடைய வாத்திய வகை. இவை
மருங்கிற் றூரஞ் செல்லாது பக்கத்து இசைத்தன. ஒலிக்க, இசைப்ப,
கொட்ட எனச் செயப்பாட்டு வினைகள் செய்வினைகளாகக்
கூறப்பட்டன.

     சேடு - கூட்டம் - திரட்சி. இங்கு அனேகர் சேர்ந்து
கைவிளியோசை செய்தல் குறித்தது. வேட்டைக்கலையிற்
சிறக்கப்பயிற்ச்சிபெற்றவர்களாதலின் அனேகர்கூடி ஒழுங்குபெற ஒரே
காலத்தில் குறித்த ஓசை தரும்படி கைதட்டி ஓசை செய்யக்
கற்றிருந்தனர். இசை யரங்குகளிற் கையினாற் றாளவொற்றறுப்போர்
பலரும் ஒன்றுபோல ஓசைசெய்தல் காணத்தக்கது. இங்கு ஏனை
இயங்களின் ஓசைகளைவிடச் சிறந்ததென்பார் இறுதியில்
வைத்ததோடு கைவிளிச் சிறந்தவோசை என்றுங்கூறினார். விளி -
முதனிலைத் தொழிற்பெயர். கைவிளியாகிய ஓசை. கைவிளி - கை
தட்டுதல். நவீனரிற் சேனைவீரர்கள் படையமைப்பிற் செல்லும்போது
கால்அடிவைக்கும் ஓசை, ஏந்திய படையோசை முதலியன
ஒழுங்குபெறக் காட்டிச் செல்லும் முறை காண்க (Military march),
இது போன்றதொரு பழக்கம் இவ் வேடர்பால் இருந்ததென்பது. சேடு
- பெருமை என்பாருமுண்டு.

     காடு - பெருந்திரட்சி. "காய்த்த செந்நெலின் காடு",
"செந்தாமரைக் காடு" என்பன காண்க. கொண்டெழுந்த -
அணுகிய. வேடு - வேடர்கூட்டம். ஆகுபெயர். "வேடு கொடுத்தது
பாரெனு மிப்புகழ்" என்ற கம்பர் பாட்டும் காண்க.

     கைவளைந்து - எல்லாப் பக்கங்களிலும் - சுற்றிலும் -
முற்றுகையிட்டாற் போல் வளைந்து சூழ்ந்து. கொம்பு, ஆகுளி,
பம்பை, கைவிளி என்றிவற்றின் ஓசைகளுடன் சூழ்ந்து சென்றனர்
என்க. பெரிய ஓசைகளுடன் சூழ்தலால் முழை புதர்முதலிய
மறைவிடங்களிற் பதுங்கியிருக்கும் விலங்குகள் பயந்துவெளிப்பட்டு
ஓடும்போது அவற்றை வேட்டையாடுவர்; ஓடுவதனால்
அடிச்சுவடுகண்டு அதற்குத் தக்கவாறு செய்வர். இது வேட்டையில்
முற்செய்தொழில்களில் ஒன்று. இதனை விலங்கு எழுப்புதல் என்பர்.
726 பாட்டுப் பார்க்க.

     வேடர் கைவளைந்து சென்றனர் - என்பதும் பாடம். 72