722.
|
நெருங்கு
பைந்த ருக்கு லங்க ணீடு காடு கூடநேர்
வருங்க ருஞ்சி லைத்த டக்கை மான வேடர்
சேனைதான்
பொருந்த டந்தி ரைக்க டற்ப ரப்பி டைப்பு
கும்பெருங்
கருந்த ரங்க நீள்பு னற்க ளிந்தி கன்னி
யொத்ததே. 73 |
(இ-ள்.)
வெளிப்படை. நெருங்கிய பசிய மரக்கூட்டங்கள்நீடிய
காட்டினை அடைவதற்கு நேர்வருகின்ற கரியவில்லேந்திய பெரிய
கைகளையுடைய வலிய வேடர் சேனையானது பொருகின்ற பெரிய
அலைகளையுடைய கடலின்பரப்பினிடையே புகுகின்ற பெரிய கரிய
அலைகளையுடைய நீளும் புனல்வாய்ந்த காளிந்திநதி போன்றது.
(வி-ரை.)
நெருங்குபைத் தருக்குலங்கள் - குறிஞ்சியிற்பட்ட
மலைச்சாரற் காடுகளாதலின் மரங்கள் நெருங்கியும் நீண்டும்
வளர்ந்திருந்தன. குலங்கள் - பலவகை குறித்தது.
கூட - கூடும்படி.
நேர்வரும் - முன்னர்க் கைவளைந்து
சென்றது என்றார்; காட்டை
வளைந்து சுற்றிச் செல்லினும் அதனைக்கூடுவதனையே நேர்குறித்து
வருகின்ற என்க.
கருமை
- வேடர்களுடைய நிறம். சேனை - வேட்டை
என்பது படையேந்தி விலங்குகளுடன் போர் புரிந்து கொல்லுதலே
யாதலின் சேனை என்றார். போர் வேடர் என்பதும் காண்க.
பொருந் தடந்திரை என்ற குறிப்புமது.
பொருந்
தடந்திரை............ஒத்ததே - பெரிய கைகளில்
வில் ஏந்திப் பல முகத்தாலும் காட்டுக்குள் புகுந்து மறையும் வேடர்
கூட்டத்துக்குப் பலமுகத்தாலும் வளைந்து சென்று நேரே
கடலினகத்துப்புக்கு மறையும் கரியநீரினையுடைய காளிந்திநதி
உவமிக்கப்பட்டது. மெய்யும் வினையும் உருவும் பற்றிய உவமம்.
கரிய நீர் வேடர்நிறத்துக்கும், தரங்கம் அவர்கள் ஏந்திய
வில்வரிசைக்கும், பெருமை அவர்களது வடிவிற்கும், நதி கடல்
புகுதல் அவர்கள் காடுபுகுதற்கும் உவமை.
களிந்தி
கன்னி - காளிந்தியாகிய நதி. யமுனை என்பர்.
நதிகளைக் கன்னிகளாகக் கூறுதல் மரபு. இந்நதியின் நீர் கருநிறங்
காட்டுமென்றும், கங்கை நீர் அவ்வாறன்றி வெளியதாய்ப்
பளிங்குபோலத் தெளிந்துள்ள தென்றும் கூறுவர். யமுனையும்
கங்கையும் கூடு முகத்தில் இரண்டுங் கலந்த பின்னரும் நெடுந்தூரம்
வரை இவ்வாறே காணப்படுமென்றும் கூறுப. இதனை இறைவனது
திருநீறு மேற்கொண்ட வலப்பாகமும் அதனுடன் கலந்த
உமையம்மையாரின் பசிய இடப்பாகமும் கூடியதற் குவமையாகக்
காட்டினர் சேரமான் பெருமாணாயனார். "ஆடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே, கூடிய கோப்பொத்ததாலுமை பாகமெங்
கொற்றவற்கே" (பொன்வண்ணத்தந்தாதி - 90). காளிந்தி என்றது
களிந்தி என நின்றது. குறுக்கல் விகாரம்.
73
|