723.
தென்றி சைப்பொ ருப்பு டன்செ றிந்த கானின்
                                 மானினம்
பன்றி வெம்ம ரைக்க ணங்க ளாதி யான பல்குலந்
துன்றி நின்ற வென்ற டிச்சு வட்டி னொற்றர்
                           சொல்லவே
வன்ற டக்கை வார்கொ டெம்ம ருங்கும் வேட
                             ரோடினார். 74

     (இ-ள்.) வெளிப்படை. தென்றிசையின் கண்ணுள்ள
மலையோடுகூடிய காட்டில் மானினங்களும், பன்றிகளும், வெவ்விய
மரையினங்களும் முதலாயின பலவகை விலங்குக்கூட்டங்கள்
நெருங்கிக்கூடி நின்றன என்று அவற்றின் அடிச்சுவட்டினால்
அறிந்துவந்து ஒற்றர்கள் அறிவிக்கவே, வார்களைத் தமது வலிய
பெரிய கைகளிற் கொண்டு எப்பக்கத்திலும் வேடர்கள் ஓடினார்கள்.

     (வி-ரை.) பொருப்புடன் செறிந்தகான் என்றது
மலையுடன்கூடி மலையும் நாடுமாய் உள்ள பிரதேசம்.
காளத்திமலைக்கு வடக்கேயுள்ளன பொத்தப்பி காடும் உடுப்பூரும்.
அங்குநின்றும் வேட்டைக்குப் போந்த நாயனார் வேட்டைக்
காட்டினின்று பலகாதங்கள் வந்து திருக்காளத்தி மலையைக்
கண்டார் என்று சரிதங்கூறுவதால் இவ்வேட்டைக் காட்டைப்
பொத்தப்பியின் தென்றிசைச் செறிந்த காடு என்றார்.

     ஒற்றர் - காடாய்பவர் - வேவுகாரர். அடிச்சுவட்டின் -
அடிச்சுவடு கண்டு அதனால் அறிந்து. செல்லவே என்பது
பாடமாயின் அவர் வேவுபார்த்துப்போக அதுகண்டு என்க. கை -
கையில். ஓடினார் - துன்றிநின்றவை தப்பி ஓடாவண்ணம் இவர்கள்
விரைந்து ஓடினார்கள் என்பதாம். வேட்டையும் போர்முகமான
செயலாதலின் போரிற்போல இதனிலும் ஒற்றர்கள் செய்வினை
உண்டு என்க.

     வார்கொடு - வார்கொண்டும், அதனுடன் பொருந்தும்
வலைகொண்டும் செய்வனவற்றை வரும்பாட்டிற் கூறுவார்.

     எம்மருங்கும் - நான்கு பக்கங்களிலும் விலங்குள்ள
துன்றியசூழல் முற்றும் வளைந்து காவல் செய்யவேண்டி
யிருந்தமையாலும், அச்சூழல் யோசனைப்பரப்புடைய 
தாயிருந்தமையாலும் விரைவுபற்றி எம்மருங்கும் ஓடினார். உம்மை
முற்றும்மை.

     மரைக் குலங்கள் - என்பதும் பாடம். 74