724. ஒடியெ றிந்து வாரொ ழுக்கி யோச னைப்ப
                                ரப்பெலாம்
நெடிய திண்வ லைத்தொ டக்கு நீளி டைப்பி
                                ணித்துநேர்

கடிகொ ளப்ப ரந்த காடு காவல் செய்த மைத்தபின்
செடித லைச்சி லைக்கை வேடர் திண்ண னார்மு
                            னண்ணினார்.
75

     (இ-ள்.) வெளிப்படை. ஒடி எறிந்தும், வார் ஒழுக்கியும்,
யோசனை அளவுள்ள காட்டின்பரப்புமுற்றும் நீண்ட
திண்ணியவலையின் பிணிப்புக்களை நீண்டவெளிகளிற்
கட்டிக்காண்பார் அஞ்சும்படி பரந்தநாட்டினை நேராகக்காவல்
செய்து முடித்தபின், சிறுதூறு போன்ற தலையையுடைய விற்பிடித்த
கையினராகிய வேடர்கள் திண்ணனார் முன்பு வந்து சேர்ந்தனர்.

     (வி-ரை.) ஒடி எறிந்து - காட்டின் மரக்கிளைகளை
வார்போக்க ஒழுங்கு காணும்படி வெட்டிப் போக்கி. மின்சாரக்
கம்பிகள் - தந்திக்கம்பிகள் முதலியவையிடுவோர் இடையிற்
குறுக்கிடும் மரங்களையும் கிளைகளையும் கம்பிகள் நேர் செல்லும்
வழி காணும் பொருட்டு வெட்டி வீழ்த்தும் வழக்குங் காண்க.
ஒடியெறிந்து - திருத்தொண்டர் திருவந்தாதி (72).

     ஓடி - ஒடித்தும் வெட்டியும் வீழ்த்தும் கிளைகள். இவற்றை
வார்போக்கிய ஒழுங்கினைப்பற்றிக் கீழே இட்டுவைப்பதும்
காவல்செய் முறையாம். ஒடிகளை அதற்கும் பயன்படுத்துவர்.
ஒடித்தாலுளதாவது ஒடி எனப்பட்டது. முதனிலைத் தொழிற்பெயர்.
அரி - என்றது காண்க. 73 - பார்க்க. ஒடியவெறிந்தென்பது
ஒடியெறிந்தென விகாரமாயிற்றென்பாருமுளர்.

     வார் ஒழுக்கி - ஒடிஎறிதலால் வார்களை நேர் ஒழுங்காகப்
போக்குதற்கு வழியாயினமையின் ஒழுக்கி என்ற சொல்வாற்
கூறினார். இடையிடையே நீண்ட கோல்களை நட்டுஅவற்றிலும்,
அவ்வொழுங்கிலே வேறு மரங்கள் இருப்பின் அவற்றிலும்,
வார்களைப் போக்கி இறுகக் கட்டுவர். ஒடிகள் இவ்வாறு
வார்பிணிக்கும் கோலாக நடுதற்கும் பயன்படும்.

     யோசனைப் பரப்பெலாம் - யோசனை என்னும் அளவு
முழுதும். யோசனை என்பது "அங்குல மறுநான் கெய்தி னதுகரங்
கரமோர் நான்கு, தங்குதறனுவென் றாகுந் தனுவிரண் டதுவோர்
தண்ட, மிங்குறு தண்ட மானவிராயிரங் குரோசத் தெல்லை,
பங்கமில் குரோச நான்கோ ரியோசனைப் பால தாமே"
(கந்தபுராணம் - அண்டகோசப்படலம் - 6) என்ற திருப்பாட்டா
னறிக. யோசனைப் பரப்பென்பது அவ்வளவின் சதுரம் குறிப்பது.
சதுரமைல் என்று நவீனர் வழங்குவது காண்க. யோசனை அகல
நீளங்கொண்ட பரப்பினையுடைய காடு முற்றும். இதுபற்றி 752-ன்
கீழுரைத்தவையும் பார்க்க.

     நெடிய திண்வலைத்தொடக்கு - யோசனைப் பரப்பெலாஞ்
சுற்றவேண்டுதலின் நெடிய - நீளமுடைய என்றும், புலிமுதலிய
பெருவிலங்குகளும் கடந்து செல்லாது காக்க வேண்டுதலின் திண்
என்றுங் கூறினார். வலைத்தொடக்கு - வலைகளின் பிணிப்புக்கள்
- கட்டுக்கள். வலைக் கயிறுகளை என்றும், கயிற்று வலைகளை
என்றுங் கூறுவாருமுண்டு.

     நீளிடைப்பிணித்து - வலைகள் நீண்டுசெல்லினும்
யோசனையெலாம் செல்லப் பல வலைகளைப்
பொருத்தவேண்டியிருத்தலின் அந்நீண்ட இடைகளைத் தக்கவாறு
கட்டி.

     காடு நேர் காவல்செய்து என மாற்றுக. கடி - அச்சம்.
கடிகொளப் பரந்த
உட்புகுந்தார் யாரும் வழிமயங்கியும், விலங்கு
அஞ்சியும், பிறவாறும் பயமுறும்படி, பரப்பும் செறிவுமுடைய.

     காவல் செய்தமைத்தல் - இது வேட்டை தொடங்குமுன்
செயத்தகும் இன்றியமையாத தொழில். வேட்டைக்காட்டினின்று
விலங்குகள் தப்பிஓடாமற் காவல் செய்தல்.

     செடிதலை - எண்ணெயிட்டு ஒழுங்குபடுத்தப்படாது
புதர்போன்ற செறி மயிரினையுடைய தலை சந்தநோக்கிச்
செடித்தலை என்பது செடிதலை என நின்றது.
காட்டை அணுகிய
உடன் காடுவளைந்து செல்லுதல், காட்டினுட் பலபுறமும் புகுதல்,
ஒற்றறிதல், வார்கொண்டோடியும் ஒடியெறிந்தும் வாரொழுக்கியும்
வலை பிணித்தும் நேர்காவல் செய்தல் என்னும் இவை முன்செல்லும்
ஏவலாட்களாகிய வேடர், வேட்டைவினை தொடங்குமுன்
செய்வினைகளாம். இவற்றைச் செய்யும்முறையே இதுவரை (721 -
724) இந்நான்கு திருப்பாட்டானுங் கூறினார்.

     இனி, அவ்வாறு காவல்செய்த காட்டினுட் புகுதல், நாய்களை
ஏவித் துடிபம்பை கொட்டிக் கைவிளி வாயொலிகள் செய்து
மாஎழுப்புதல், அவற்றால் மாக்கள் எழுந்து பாய்தல் ஆகிய
வேட்டை தொடங்குமுன்னர் நிகழ் செயல்களை அம்முறையே
மேல்ரும் (725 - 727) மூன்று திருப்பாட்டுக்களானும், அதன்பின்
வேட்டைவினைவகைகளையும், அவற்றின் விளைவாக மாக்கள் படும்
வகைகளையும் அம்முறையே அவற்றின் மேல்வரும் (728 - 735)
எட்டுத் திருப்பாட்டுக்களானும் கூறுதல் காண்க.

     வேடர் - முன்ஓடிச்சென்று காவற்றொழில் புரியும்
ஏவலாளர்களாகிய வேடர்.

     முன் நண்ணினார் - காட்டினுள்ளும் சுற்றியும் போய்
வினைசெய்த அவ்வேடர் தம் தலைவராகிய திண்ணனாரின் முன்பு
காவலமைப்புத்தொழில் முற்றியதை அறிவிக்குமாறு அணைந்தனர்.
75