1725.
வெஞ்சி லைக்கை வீர னாரும் வேட ரோடு
                                 கூடிமுன்
மஞ்ச லைக்கு மாம லைச்ச ரிப்பு றத்து வந்தமா
வஞ்சு வித்த டர்க்கு நாய்க ளட்ட மாக விட்டுநீள்
செஞ்ச ரத்தி னோடு சூழல் செய்த கானு
                              ளெய்தினார்.
76

     (இ-ள்.) வெளிப்படை. தாம்விரும்பும் சிலையேந்திய
கையினையுடைய வீரனாராகிய திண்ணனாரும் ஏனை
வில்வேடர்களோடு கூடி, முன், மேகந்தவழும் பெரிய
மலைச்சாரலிலே புறத்துவந்த விலங்குகளை அஞ்சி வெளிவந்து
ஓடுமாறு செய்து பற்றுகின்ற நாய்களைப் பல புறத்தினும் விட்டு,
நீண்ட செம்மையாகிய அம்புகளுடனே, காவல் செய்யப்பட்ட
காட்டினுள்ளே புகுந்தனர்.

     (வி-ரை.) வெஞ்சிலை - பாரப்பெருவில் (711), திருக்கையிற்
சிலையும் தாங்கி (776) என, விரும்பி ஏந்தும் பெருமையுடைய
வில்லாதலின் வெஞ்சிலை என்றார். வெம்மை - விருப்பம். வெவ்விய
- கொடிய என்றுரைப்பாருமுண்டு.

     முன் நாய்கள் விட்டு என்று கூட்டுக. முன் - தமக்கு
முன்பு விட்டு என்றும், முதலில் விட்டு என்றும் உரைக்க நின்றது.

     சரி - சரிவு - சாரல். புறத்து வந்தமா - முழை, புதர்
முதலியவற்றிலிருந்து வெளிவந்து துன்றிய விலங்குகளை.
அஞ்சுவித்து அடர்க்கும்
- பலபுறமும் ஓடியும் குரைத்தும்
அச்சுறுத்தித் துரத்திப் பற்றுகின்ற.

     நாய் - 718 பார்க்க. அட்டமாக விட்டு - பிணித்த பாசம்
அவிழ்த்துப் பல புறமும் குறுக்காகவும் அருகாகவும் ஓடவிட்டு.
அட்டம் - வேட்டைத் தொழிலாளருள் வழங்கும் குழுஉக்குறி.
எட்டுத் திக்கினும் என்றுரைப்பாருமுண்டு.

     நீள் செஞ்சாம் - நீள் - குறிவைத்த அளவிற்குச் சென்று
நீளும். செம்மை - தனது வினைசெய்தற் றன்மையிற் பிழையாமை.

     சூழல் செய்தகான் - "காடுகாவல் செய்தமைத்த" என
மேற்பாட்டிற் கூறிய படி வலையிட்டுச் சூழப்பட்ட அந்தக் காடு. 76