726.
|
வெய்ய
மாவெ ழுப்ப வேவி வெற்ப ராய மோடிநே
ரெய்யும் வாளி முன்றெ ரிந்து கொண்டு செல்ல
வெங்கணும்
மொய்கு ரற்று டிக்கு லங்கள் பம்பை முன்சி
லைத்தெழக்
கைவி ளித்த திர்த்து மாவெ ழுப்பி னார்கள்
கானெலாம். 77 |
(இ-ள்.) வெளிப்படை.
(மேற்கூறியபடி விட்ட)
கொடியவிலங்குகளை எழுப்பும்படி ஏவி நாய்களை, வேடர்கூட்டம்
ஓடி, நேரே விடுத்தற்குரிய அம்புகளை முன்னே ஆராய்ந்து
எடுத்துக்கொண்டுபோக, எவ்விடங்களினும் மொய்த்த குரலுடைய
உடுக்கைகளும் பம்பைகளும் முன்னே பேரோசை செய்தெழ,
அதனோடு கைதட்டியும் வாயினால், உரப்பிக்கூவியும் காடெங்கும்
பதுங்கியிருந்த விலங்குகளை அவற்றின் மறைவாகிய
இருப்பிடங்களினின்றும் எழுப்பினார்கள்.
(வி-ரை.)
எழுப்ப ஏவி - முன்னே அட்டமாகவிட்டனர்.
பின்னர் அவற்றைப் பதுங்கிய விலங்குகளின்மேல் ஏவினார்கள்.
ஏவியவற்றின் மேற்சென்று துரத்திப்பற்றுதல் நாய்களின் இயல்பு.
ஒற்றர்களை ஏவி என்றுரைப்பாருமுண்டு.
நேர்
எய்யும் வாளி முன் தெரிந்துகொண்டு - கொடிய
விலங்குகளை எழுப்புகின்றவர்கள், எழும்பும் அவை தங்கண்மேற்
சினந்துபாயுமாதலின் அப்போது அவற்றை நேரே எய்துகொல்வதற்கு
ஏற்ற அம்புகளை முன்னரே சித்தஞ்செய்து கொள்ளுதல்
வேண்டுமாதலின், வாளி முன் தெரிந்து என்றார்.
எய்யும் - எய்யத்
தகுந்த. கொண்டு - சித்தமாய் எடுத்துக்கொண்டு.
மொய்குரல்
துடி - துடி - இடைசுருங்கிய இருமுகக் கருவி.
ஒருமுறை யிசைத்தலிற் பலவோசை முழக்குமாதலின் மொய்குரல்
என்றார்.
பம்பை
- பெருமுகமாகிய இருமுகமும் பேருடலும்
படைத்தது. துடிக்குலங்களும் பம்பைகளும். உம்மைத்தொக்கது.
இவ்விருவகையும் சேர்ந்தபோது பேரோசை செய்தலின் சிலைத்தெழ
என்றார். எழுதல் - ஓசைமிகுதல்.
கைவிளித்தும்
அதிர்த்தும் என உம்மை விரித்துரைக்க.
அதிர்த்தல்
- வாயினால் உரப்புதல். கைவிளியினால்
அதிர்த்து எனச் சேர்த்துரைப்பினுமாம். வேட்டைக் காட்டில்
இம்முழக்குக்களோடு வாயினாலும் பல வகைப்பட்ட ஓசைபடக்
கூவுதல் வழக்கு. மிருகங்களின் ஓசைபோலக் கூவுதலுமாம்.
கானெலாம்
மா எழுப்பினார்கள் எனக் கூட்டுக.
மறைவிடங்களினின்றும் வெளிவராவிடின் விலங்குகளை
வேட்டையாடுதல் இயலாமையின் அவற்றை அங்குநின்றும்
வெளிவரச் செய்தல் வேட்டையின் முற்செய்வினையாம். 77
|