727.
ஏன மோடு மானி னங்க ளெண்கு திண்க லைக்குலம்
கான மேதி யானை வெம்பு லிக்க ணங்கள் கான்மரை
யான மாவெ னேக மாவ ருண்டெ ழுந்து பாயமுன்
சேனை வேடர் மேல டர்ந்து சீறி யம்பி னூறினார்.
78

     (இ-ள்.) வெளிப்படை. காட்டுப்பன்றிகளோடு, மான் வகைகள்,
கரடிகள், வலிய கலைமான் கூட்டங்கள், காட்டெருமைகள்,
யானைகள், வெவ்விய புலி வகைகள், காட்டுமரைகள் ஆகிய
விலங்குகள் பலவாக வெருண்டு எழுந்து சீறி முன்வந்து பாய்தலும்
கூட்டமாகிய வேடர்கள் அவற்றின்மேல் அடர்ந்து சீறி அம்பு
களினால் எய்தழித்தனர்.

     (வி-ரை.) ஏனமோடு என ஏனத்தைப் பிரித்து முதலில்
வைத்த சிற்ப்புப் பற்றி 693 - ல் உரைத்தவை பார்க்க.
ஏனைவிலங்குகள் எல்லாம் ஓரேனம் வெளிப்படுதற்குத்
துணையாயினமட்டில் நின்றொழிந்தனவன்றி இச்சரித நிகழ்ச்சிக்கு
அவற்றாலானகொன் றில்லையாதலின் அவை அனைத்தையும்
ஒருசேரத்தொகுத்தும் பின்வைத்து ஆனமா அனேகமா என்று
எளிமைபெறக் கூறினார்.

     மானினங்கள் - கலைமான். மான் - பெண் மான் என்றும்,
கலை - ஆண் மான் என்றுங் கூறுவாருமுண்டு. 693 - பார்க்க.
இவற்றுள் மானினம் 728 - 752லும், கலை 730லும், மேதி 733லும்,
புலி, பன்றி 729லும், யானை, அரி 731லும் கூறியது காண்க. எண்கு
- கரடி, திண் கலைக்குலம் - வலிய பெரிய நீண்ட கொம்புடைய
கலைமான். குலம் - கூட்டம். இவை கூட்டமாகச் சேர்ந்து
வாழுமியல்புடையன.

     கானமேதி - காட்டெருமை. வெம்புலி - விலங்குகளில்
மிகக்கொடியது புலியாம். புலிக்கணங்கள் - புலி வகைகள். சிங்கம்,
பெரும்புலி (வேங்கை), சிறுபுலி முதலிய இவைகள் கூட்டமாகச்
சேர்ந்துவாழு மியல்புடையனவல்ல. ஆதலின் இங்குக் கணம்
கூட்டம் என்றல் பொருந்தாது. பல புலிகள் பல இடங்களினின்று
பாய்ந்தன என்றலுமாம். கான்மரை - காட்டுக்குதிரை. இங்குக்
கூறிய விலங்கு வகைகளே வேடர்க்குத் தீங்குவிளைப்பன. இவற்றை
"மிக நெருங்கி மீதூர்" விலங்குகள் என முன்னர் (693)க் கூறினார்.
ஆனமா அனேகமாக ஈறுகெட்டது.

     வெருண்டு எழுந்து பாய் - மேற்கூறிய வகைகளால்
எழுப்பப்பட்ட இவை பயந்தன; பின்னர்த் தமதிருப்பிடங்களினின்றும்
எழுந்தன; பின்னர்த் தம்மை அடர வந்தார்மேற் பாய்ந்தன என்க.
தம்முயிர்க்குக் கேடுநேரும்போது எந்தப் பிராணியும் அவ்விளைவு
செய்தார்மேற் பாய்வது இயல்பு. முன் - முன் பாய என்க. இருந்த
இடம்விட்டு முன்வந்து. முன்நூறினார் என்று கூட்டி அவை
தம்மேற் பாய்வதற்குமுன் அவற்றினை அம்பினால் எய்து வீழ்த்தனர்
என்றலுமொன்று.

     சேனை - 722 பார்க்க. மேல் - அவற்றின்மேல். நூறினார்
- கொன்று அழித்தார்கள்.

     அம்பு நூறினார் - என்பதும் பாடம். 78

     மேலே 717 முதல் 727 வரை பதினொரு பாட்டுக்கள் முடுகிய
ஓசையுடைய எழுசீர்ச் சந்தவிருத்தங்களாய் எடுத்தபொருளுக்கேற்ற
சந்தத்தில் அமைந்துள்ளன. (திருவாசகம் - திருச்சதகம் - "ஈச னேநீ
யல்ல தில்லை" என்ற பகுதித் திருவாக்குக்கள் காண்க).
இப்பாட்டுக்கள் சொல்லும் சீரும் ஒத்திசையாது வேட்டையில்
விலங்குகளின் அங்கங்கள் துண்டப்படுவன போலத்
துண்டித்திசைப்பன இவை நாற்சீர்க்கலி விருத்தங்களாகப்
பிரித்தலகிடப்பட்டுச் சிலபதிப்புக்களில் காணப்படுகின்றன.