729.
வெங்கணைபடு பிடர்கிழிபட விசையுருவிய கயவாய்
செங்கனல்பட வதனொடுகணை செறியமுனிரு கருமா
வங்கெழுசிர முருவியபொழு தடலெயிறுற வதனைப்
பொங்கியசின மொடுகவர்வன புரைவனசில புலிகள்.
80

     (இ-ள்.) முன் இரு கருமா - முன்னேவந்த பெரியபன்றிகள்;
வெங்கணைபடு........கனல்பட - வெவ்விய - அம்புபட்டுப்
பிடர்கிழியும்படி விசையினால் உருவியதாற் பிளந்த புண்வாயில்
செவ்விய தீப்போன்ற குருதிபெருகி ஒழுக; அதனொடு கணைசெறிய
அதன் மேலும் அம்புகள் நெருங்கிப்பாய்ந்து; அங்கெழு.......பொழுது
- அவை அங்கு எழும் சிரத்தின் வழி (அப்பன்றிகளையிழுத்து)
உருவிச்சென்ற பொழுது; புலிகள் அடல் எயிறு உற - (எதிர்பாய்ந்து
திறந்தவாயுடன் ஓடிவந்த) புலிகளில் வலிய பற்களினிடையே சேர
(தைக்க); அதனை......புரைவன - (அவ்வப்புலி) அவ்வப்பன்றியே
மிக்கெழுந்த சினத்தொடு கவர்வன போன்ற சில புலிகள்.

     (வி-ரை.) கருமா - பிடர்கிழிபட - உருவிய - கயவாய் -
கனல் - விட - கணை செறிய - எழுசிரம் - உருவியபொழுது -
புலிகளி(ன்) - அடலெயிலுற - அவை அதனை - சினமொடு -
கவர்வன . புரைவன - எனக்கொண்டு கூட்டி உரைத்துக் கொள்க.

     இருகருமா பெரிய காட்டுப்பன்றிகள். "இழிவாகும்
கருவிலங்கும்" (திருஞான - புரா - 78). சந்தநோக்கி இருங்கருமா
என்றது இருகருமா என நின்றது.

     கயவாய் - பிளந்த பெருவாய்தல். பெருந்திறப்பு. புண்வாய்.

     கணைசெறிய - கணைகள் மேலும் நெருங்க. சிரம் -
தலையின் வழி. புலிகளின் அடல் எயிற்றின் உற அப்புலிகள்
புரைவன (போல்வன) என்க.

     அதனை - அதனதனை - அவ்வப்பன்றியை. ஒவ்வோர்
பன்றியை ஒவ்வோர் புலி கவர்தல் போன்றதால் ஒருமையிற்
கூறினார். கவர்வன - கவர்வனவற்றை. வினையாலணையும் பெயர்.
இரண்டாம் வேற்றுமைத் தொகை.

     கனல் - கனல் போன்ற இரத்தம். தீ என உரைப்பாருமுண்டு.

     ஒரு பன்றியின் பிடர் அம்பினாற் கிழிபட்டது; அதனாற்
பிளவுபட்ட புண்வாய் தீ (குருதி) உமிழ்ந்தது; மேலும் அம்புகள்
நெருங்கிப் பாய்ந்தன; அவை தலையின் வழி உருவி
அப்பன்றியையும் இழுத்துக்கொண்டு எதிரே பாய்ந்து வாய்திறந்து
ஓடி வந்த புலியின் பற்களிடை ஊடுருவின; இவ்வாறு இப்பன்றி புலி
வாயினிடத்து அம்பினால் ஈர்த்துச செல்லப்படுதல் எதிர்வந்த புலி
அதனைப் பாய்ந்து கவர்வது போன்றிருந்தது. இவ்வாறு சில புலிகள்
இருந்தன என்பதாம். 80