731.
|
கருவரையொரு
தனுவொடுவிசை கடுகியதென
முனைநேர்
குரிசில்முன்விடு மடுசரமெதிர் கொலைபயில்பொழு
தவையே
பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன வெனமிடையுமவ்
வனமே. 82 |
(இ-ள்.)
கருவரை...பொழுது - கரியமலை ஒருவில்லுடனே
ஓடிவந்ததென்று சொல்லும்படி போர்முகத்தில் நேர்வந்த
அண்ணலாராகிய திண்ணனார் முன்னால் எதிர்த்துநின்று விடுகின்ற
அம்புகள் எதிர்ப்பட்ட விலங்குகளைக் கொலை செய்கின்ற போது;
அவையே....புகலால் -அவை போர்செய்யும் யானைகளோடும்
கோபமிக்க சிங்கங்களிடையே இடைவெளியின்றி அவற்றினுடல்
களிற் புகுதலால்; வருமிரவொடு.....அவ்வனமே - அவ்வனம்
பின்வரும் இரவுகளுடன் பகல்கள் சேர்ந்தாற்போல் மிகும்.
(வி-ரை.)
கருவரை - கரியமலை. திண்ணனார்க்கு
உவமானம். "மணிநீல மலை ஒன்று" (701) என முன்கூறியதும்
காண்க.
ஒரு
- நடுநிலைத்தீபம். ஒருகருவரை - ஒருதனு (வில்) என்க.
வரைதனுவொடு
விசை கடுகியதென - இல்பொருளுவமை.
ஒருதனுவொடு - தனு உடம்பென்று கொண்டு கரியமலையொன்று
உடல் பெற்றுவந்ததுபோல என்ற குறிப்புப்பொருளும் காண்க.
"மணிநீல மலையொன்று வந்த தென்ன" (701) என்றது காண்க.
விசை கடுகியது - ஒரு பொருட் பன்மொழி. மிகுதி குறித்தது.
மிக்கவேகமாய் வந்தது. என உவமஉருபு.
முனை
- போர்முகம். வேட்டை முனை என்பர். குரிசில்
-
பெருமையையுடையார் - திண்ணனார். எதிர் -
எதிரேநின்று.
முன்விடும்.....பயில்பொழுது
- மேற்பாட்டில் மறவர்களது
சிறுமையும் மறமும் உடைய வேட்டை கூறிய ஆசிரியர் இப்பாட்டில்
திண்ணனாரது பெருமையும் போர் அறமுமுடைய வேட்டைவினை
கூறுகின்றார். அவர்கள் தமது தகுதிக் கேற்பப் பன்றியும் மானும்
கலையும் என்ற சிறுவிலங்குகளை எய்கின்றார்கள்; இவர்
யானை,
சிங்கம் என்ற பெருங்கொடுவிலங்குகளை எய்கின்றார்; அவர்கள்
அவற்றின் பின்னிருந்து புரைபட எய்ய இவர் புரையற முன்னின்று
எய்து வீரப்போர் செய்கின்றார்; இவர்விடும் அடுசரம் தவறாது
எதிர்த்துக் கொலை செய்தேவிடும்; என்பன முதலிய கருத்துகள்
காண்க.
கொலை
பயில் பொழுது - கொன்றே விடுவனவாக,
அப்பொழுது அவையே - புகலால் என்று கூட்டுக.
பொருகரி
- சினஅரி - அவ்வவற்றுக்கேற்ற அடைமொழி
தந்து கூறியது காண்க. கரி போரில்வல்லது; எத்தனை
நாள்களாயினும் சலியாது முனைந்து உயிர்போம் வரை போர்புரியும்
தன்மையுடையது. அரி சினம்மிக்குப்பாயும்
தன்மையுடையது.
செங்கண் வாளரி என்றதும் பிறவும் காண்க.
இடைபுரையற
அவையே உடல் புகலால் - வேகத்தால்
இடையீடின்றி அம்புகள் அவற்றின் உடலிற் புகுதலாலே.
இடைபுரைஅற - இடையீடில்லாது தொடர்பாக.
இடையே குற்றமற
என்ற குறிப்புமாம். இவ்வாற்றால் பல யானைகளும் பல சிங்கங்களும்
பட்டு வீழவே, அந்தக் கரியயானைகளும் வெளிய சிங்கங்களும்
பக்கங்களில் வீழ்ந்துள்ள தோற்றம் இரவோடு பகல்
கூடியதைப்போன்ற தென்றார். பெருவிலங்குகளாதலின் இவற்றை
வீழ்த்தத் தொடர்பாய்ப் பலவலிய அம்புகள் எய்தல்வேண்டும்.
அவ்வனம்
வரும் இரவோடு பகல் அணைவன என
மிடையும் - என மாற்றுக. மிடைதல் -
நெருங்குதல் - மிகுதல்.
இவ்வேட்டை நிகழ்வது பகற்போதாதலின் இனி அடுத்து வருவது
இரவாம். ஆதலின் வருமிரவு என்றார்.
பகல் - பகற்காலம். பகல்
கழியவே இரவு அணையும். பகலும் இரவும் உடன்
அணைவதில்லையாதலின் இல் பொருளுவமம். திண்ணனார் தமக்கு
உவமையில்லாதவர்; இவர் செயலின்விளைவும் உவமையில்லாததாம்
என்பது குறிக்க இப்பாட்டில் வரைதனுவொடு கடுகியதும்,
இரவொடுபகல் அணைவதும் என்ற இரண்டும்
இல்பொருளுவமங்களாக ஆசிரியர் வைத்தனர் போலும், அன்றியும்
இங்குத் திண்ணனார் காலம் என்னும் தத்துவக்கட்டினைக் கடக்கும்
நிலையின் விளங்குதலால் இரவும் பகலும் என்ற நாட்கூறுபாடாகிய
காலம் அவர்க்குக் கீழ்ப்பட்டு நிற்பது என்பதும் குறிப்பாம். பகலும்
இரவும் ஒன்றுகூடாது ஒன்றன்பின் ஒன்றாய் மாறிமாறி வருவனவாம்.
அதுபோலக் கரியும் அரியும்
ஒன்றற் கொன்று பகையுடையன.
இவ்வேடர் துரத்துதலாகிய செயற்கையாற் சேர வந்தனவேயன்றி
இயற்கையாற் சேர்ந்தனவல்ல. இயற்கையாற் சேராத இரவும்பகலும்
ஈண்டு இது போலவே செயற்கையாற் சேர்ந்தனபோல என்று
பின்னரும் கூறுகின்றது காண்க. விளக்கு முதலியவற்றால் இரவு
பகல் எனப்பட நிற்கும். 778, 779, 780 பாட்டுக்கள் பார்க்க.
வெளிநின்ற புறவிருள் தீபமாமரங்களாலும், வீட்டின் நின்ற புறவிருள்
மணிவிளக்கொளிகளாலும், அகவிருள் ஐந்தடக்கிய பெரியாரது
சோதியாலும் நீங்கின (780) என்று குறித்தமையும் இங்குக்காண்க.
அணைவன
- இரவொடு பகல் அணைவன.
சாதியொருமையாதலிற் பன்மை வினையாற் கூறினார். 82
|