732.
|
நீளிடை
விசை மிசைகுதிகொள நெடுமுகிறொட
வெழுமான்
றாளுறுகழன் மறவர்கள்விடு சரநிரைதொடர் வனதாம்
வாள்விடுகதிர் மதிபிரிவுற வருமெனவிழு முழையைக்
கோளொடுபயில் பணிதொடர்நிலை கொளவுளவெதிர்
பலவே. 83 |
(இ-ள்.)
நீள்இடை விசை.........எழும்மான் - நீண்ட ஆகாய
வெளியில் விசையோடு மேலே குதிக்க நெடுமுகில்களைத்
தொடும்படி எழுகின்ற மான்களை; தாள் உறுகழல்............
தொடர்வனதாம் - காலிற்பொருந்திய வீரக்கழலையுடைய மறவர்கள்
விடுகின்ற அம்பு வரிசைகள் தொடர்கின்றவை; வாள்விடு
கதிர்மதி.......விழும் உழையை - ஒளிவீசும் கதிர்களையுடைய
மதியைப் பிரிவுற நேருமென்று (அந்தமதி மண்டலத்தினின்றும்) கீழே
விழுகின்ற மானை; கோளொடு பயில்பணி தொடர்நிலை -
பீடிக்கின்ற தன்மையோடு பயில்கின்ற இராகு என்ற பாம்பு
தொடர்ந்து வருகின்ற நிலைமை; கொள உள எதிர் பலவே -
எதிராகக் காண உள்ளன பலவாம்.
(வி-ரை.)
குதிகொள எழும் மான் - மான்கள் வெருண்டு
மேற்கிளம்பித்துள்ளும் இயல்புடையன. அதனோடு இங்கு வேடர்கள்
பல பக்கமும் சூழ்ந்து ஆர்த்தும் நாய்களை ஏவியும் வெருட்டுதலால்
எங்கும் ஓடிப் போக இயலாமல் மேலே துள்ளிக் குதித்தன.
நெடுமுகில்தொட
- விண்ணில் தாவி மிக உயரமாய்
என்றபடி.
மான்
- மான்களை. இரண்டனுருபு தொக்கது. மான்களைத்
தொடர்வன என்க.
வாள்விடு
கதிர்மதி - மிக ஒளிவீசும் கதிர்களையுடைய
முழுமதி. முழுமதி நாள்களே மதியை இராகு பீடிக்கும்
நாள்களாதலின் வாள்விடுகதிர் என்றார்.
பிரிவுற
வரும் என விழும் உழை - மதிக்குவந்த பீடை
தன்னையும் பீடிக்குமோ என்றஞ்சி அதனை விட்டு வெளிவந்துவிட
நேருமென் றெண்ணியது போலக் கீழே வீழ்கின்ற மான். உழை -
மான். சந்திரனில் தோன்றுகின்ற கறையை மான் என்பதும் ஒரு
வழக்கு. அதனை முயல் என்பதும் உண்டு வருதும், வருவோம்
(வந்துவிடுவோம்) என்பது வரும் என விகாரமாயிற்று என்பர்
மகாலிங்கையர்.
கோளொடு
பயில்பணி - கோள் - கொள்ளுதல் -
பீடித்தல். கொள் - பகுதி. முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.
பீடித்தலே தொழிலாகப் பயிலும் பாம்பு. பணி - பாம்பு - இராகு.
கோள் - நவக்கோள் எனவும், ஓடு - ஏழாம்
வேற்றுமைப்
பொருளில் மயங்கி வந்த மூன்றன் உருபு எனவுங் கொண்டு,
நவக்கோள்களில் ஒன்றாகப் பயில்கின்ற என்றலுமாம்.
தொடர்நிலை
கொள - தொடர்கின்ற நிலைமைபோலக்
காண. எதிர் பலஉள என்க. இவ்வாறு எதிரே
பல மான்கள்
உள்ளன. இராகுகேதுக்கள் என்னுமிரண்டு பாம்புகள் சந்திர
சூரியர்களைப் பீடித்து மறைக்கும் சரிதம் காந்தம் முதலிய மா
புராணங்களுட் காண்க. அண்டகோளகையின் சூழலிலே, நாம்
காணும் மதியும் ஞாயிறும் நமது பூமியாகிய அண்டத்துக்கு
நேர்கோட்டில் வரும் காலத்து ஒன்றின் நிழல் மதியின்மேல்
அல்லது ஞாயிற்றின்மேல் பட்டு அதனை மறைக்கும். அந்நிழலின்
மறைப்புக்களே சந்திர சூரிய கிரணங்கள் எனப்படும் என்று நவீன
வானசாஸ்திரிகள் கூறுவர். இதுகண்டு நம்மிற்பலர் இதுபற்றிய
புராண சரிதங்களில் அவநம்பிக்கை கொள்கின்றனர். மதியும்
ஞாயிறும் பூமியும் முதலிய அண்டங்களின் வட்டங்களையும் இவை
ஓடிச்சுற்றிவரும் சுழற்சிநிலைகளையும் நம்முன்னோர் அறிந்து
கணக்கிட்டு இம்மறைப்புக்களை முன்னதாகக் குறிக்கவல்லராயினர்.
இல்லையேல் பஞ்சாங்கங்களில் இந்நாளும் நேரமும்
குறித்துச்சொல்லுதல் இயலாதன்றோ? இவற்றைக் கணக்கிட்டுக்
கொண்டதோடு இவற்றைப்பற்றி நவீனர் காணாத வேறுபலவுங்
கண்டனர். இவற்றின் குணங்களையும் இம்மறைப்புக் காலங்களில்
இவற்றின் சத்தியால் மக்களுக்கு நேரவுள்ள கேடுகளையும் அறிந்தே
இவைகள் விஷத்தன்மையுடையன என்று காட்ட இவற்றைப்
பாம்புகளாகவும் காட்டினர். ஆனால் தேவர்களும் அசுரர்களும்
பாற்கடல் கடைந்து அமிர்தம் பெற்றுப் பங்கிட்டு உண்ணும்போது
கலாம்விளைய அதனில் இராகு கேதுக்கள் உண்டாகி மதியையும்
ஞாயிற்றையும் பீடிக்கலாயினர் என்றது புராண வரலாறன்றோ?
எனின், ஆம். அதுவும் உண்மையே. அது இவ்வண்டங்களுக்குரிய
அதிதெய்வங்களின் நிலை. இத்தெய்வங்கள் நம் கண்ணுக்குப்
புலப்படாத காரணங்கொண்டு இவை இல்லை என்றல் கூடாது.
இவற்றிற்குரிய மந்திரங்களின் மூலம் இவைகளின் சத்திகள்
வெளிப்பட்டு உரிய பலன்றருதல் கண்கூடாகலின் இச்சரித
உண்மையும் பெறப்படும். இம்மறைப்புக்களைச் செய்யும் இராகு
கேதுக்களைச் சாயாக்கிரகங்கள், நிழற்கோள்கள் என்பர்.
காணாக்கிரகம், கரந்துறைகோள் (பெருங் - உஞ்சை - 58 - 57)
என்பனவும் காண்க. இவையெல்லாம் அவ்வக்கலைகளில் வல்லார்
பாற் கேட்டுத் தெளிக.
மதி
பிரிவுற வரும் என விழும்உழை - தற்குறிப்பேற்ற
அணி. விழும் உழையைப் பணி தொடர்நிலை உளதென என்றது
இல்பொருளுவமை. கீழிருந்து உயரக் கிளம்பிவிழும் மானினை
மேலிருந்து விழும் மானாகவும், மானைக் குறிவைத்து இடைவிடாது
தொடர்ந்து எய்யப்படும் அம்புவரிசையைப் பாம்பாகவும் கூறியது
தற்குறிப்பேற்றம்.
வயவர்கள்
விடு - பரிவுற - பிரிவற - என்பனவும்
பாடங்கள். 83
|