733.
கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென
                                  நிரையே
படர்வொடுசெறி தழைபொதுளிய பயில்புதல்வன
                                  மதன்மே
லடலுறுசர முடலுறவரை யடியிடமல மரலான்
மிடைகருமரை கரடிகளொடு விழுவனவன மேதி.
 84

     (இ-ள்.) அடல் உறுசரம் உடல்உற - அடுகின்ற அம்புகள்
உடலிற் றைத்தலால்; வரை அடியிடம் அலமரலால் - மலைச்சரிவில்
அடிநிலை கொள்ளாது சுழலுதலால்; நிரையே படர்வொடு.......வனம்
அதன்மேல் - வரிசையாகப் படர்ந்து செறிந்த தழைகள் நிறைந்த
நெருங்கிய புதர்களையுடைய அக்காட்டின்மேல்; கடல்
விரிபுனல்.....முகிலென - கடலிற் பரந்த நீரைக்கொள்ள வீழ்ந்து
படிகின்ற கரிய முகிற்கூட்டம் போல; மிடைகருமரை.........வனமேதி -
கூட்டமாகிய கரிய மரைகளும் கரடிகளும் என்ற இவற்றுடனே
காட்டு எருமைகள் வீழ்வனவாயின.

     (வி-ரை.) சரம் உடல் உற - அலமரலால் -
புதல்வனமதன்மேல் - கடல் புனல்கொள கருமுகில் விழுவன என -
மரை கரடிகளொடு - வனமேதி - விழுவன என்று கூட்டி
உரைத்துக்கொள்க.

     நிரையே.........புதல்வனம் அதன்மேல் - வரிசைபெறப்
படர்ந்து செறிந்ததழை நிரம்பிய பசிய புதர்களையுடைய காடு.
இதனைக் கடலுக்கு உவமித்தார். நிரை - வரிசை - கடலலைக்கும்,
செறிதழை பொதுளிய நிலை - கடல் நீருக்கும், கருமரை - கரடி
- (கரிய) வனமேதி இவை கருமுகில்களுக்கும் உவமிக்கப்பட்டன.
புதல் - பெருந் தூறுகள் - புதர்கள். உடல்உற - உடல்
உறுதலாலே. அலமருதல் - வருந்துதல் சுழலுதல். வரை இடம்
அடி அலமரலால்
என்க. கருமரை - காட்டுக்குதிரை என்பர்.
"கான்மரை" (727) கருமான் என்பாருமுண்டு. நிரையே விழுவன
என்று கூட்டியுரைப்பினுமாம். 84